Tuesday, May 7, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-24

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-24

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 25

திணை:  குறிஞ்சி

————-

யாரு மில்லைத் தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

தினைத்தா ளன்ன சிறுபசுங்கால

ஒழுகுநீ ராரல் பார்க்கும்

குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவர் வேறு ஒருவரும் இலர். தலைவனாகிய கள்வன் ஒருவன்தான் இருந்தனன்; தலைவன் அப்போது கூறிய சூளுறவின்று தப்பினால் நான் என்ன செய்வேன்? ஓடுகின்ற நீரில் ஆரல் மீனை உண்ணும் பொருட்டு அதன் வரவை எதிர்பார்த்து நிற்கும் தினையின் அடியைப் போன்ற சிறிய பசிய கால்களை உடைய நாரையும் இருந்தது.

———

வாசிப்பு

————-

தாம் என்ற பன்மையும் கள்வன் என்ற ஒருமையும்

———

தலைவனைத் தலைவி கள்வன் எனக் குறிப்பிடுவதை நாம் பல சங்கக் கவிதைகளில் வாசிக்கிறோம். தன்னைக் களவில் மணந்ததை நினைத்து பெருமிதம் கொள்ளும் தலைவி ‘தாம் மணந்த ஞான்றே’ என்று பன்மையில் தன்னைச் சொல்லிக்கொள்கிறாள் ஆனால் அதற்கு மனித சாட்சியில்லை என்பதாலும் அதை அவன் உறுதிப்படுத்துவானா என்ற ஐயப்பட்டினால் கள்வனாகிவிட்டபடியால் அவனை ஒருமையிலும் தலைவி அழைக்கிறாள். தலைவனைக் கள்வன் என்பது பல சமயங்களில் செல்லமாகவும், பல சமயங்களில் ஏசுதலாகவும் சங்கக் கவிதைகளில் பலவற்றில் வருகிறது. இக்கவிதையில் கள்வன் ஒருமையில் விளிக்கப்படுவதால் அவன் ஏசப்படுதலின் பொருட்டே ஒருமையில் அழைக்கப்படுகிறான். அவன் சொல்லியது பொய்க்கும் என்றால் ‘யான் எவன் செய்கோ?’ என்ற சொற்களில் தலைவியின் தன்னிலையின் பெருமிதம்  உடைந்து ஒருமையாகிவிடுகிறது.  ‘கள்வன்’ என்ற சொல் தலைவி தன்னை தலைவனின் அதிகாரத்திற்கு, அவனுடைய வலுவுக்கு ஒப்புக்கொடுத்து அதற்கு சாட்சியாய் ‘யாருமில்லை’ என உடைந்து போகிறாள். அவளுடைய தன்னிலையின் அடையாளம் மற்றவனின், தலைவனின் சொல்லை நம்பியிருக்கிறது அல்லது அந்த சொல்லின் உண்மையை நமபியிருக்கிறது. சொல்லின் உண்மை தரும் தலைவியின் தன்னிலையின் ஒருமை, சொல் பொய்யானால் சிதைந்துவிடும். 

——————

ஆரல் பார்க்கும் பசிய கால்களுடைய நாரை

——-

தலைவனும் தலைவியும் சேர்ந்திருந்த களவின் கூடுதல் ‘ஆரல் பார்க்கும் நாரை (குருகு) இருந்த இடத்தில் நடந்ததால் அந்த இடம் ஒரு நீர்த்துறை என அறியலாம். தலைவன் சூளுரைத்ததற்கு ஒரே சாட்சியாய் நின்றது பசிய நீண்ட கால்களை உடைய நாரை. அதுவோ ஆரல் மீன்களை மட்டுமே நோக்கிய கருத்தொருமையில் நின்றதால் தலைவன் கூறிய சொல்லைக் கவனமாய்க் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஏன் கேட்டிருக்கவே வாய்ப்பில்லை. ஆரல் பார்க்கும் நாரை என்ற  படிமம்  தலைவன் களவின் கண் கூடியதால் அவன் கவவனமும் கூடுதலில் மட்டுமே இருந்தது என்பதையும் சொல்கிறது. ஆகவே அவனுடைய சூளுரை பொய்யாக அதிகமும் வாய்ப்பிருக்கிறது; எனவேதான் அவன் கள்வன் எனவும் அழைக்கப்படுகிறான். 

——-

பேசப்படாததன் வன்முறை

———

குருகு ஆரல் மீனை எதிர்நோக்கிக் காத்திருப்பது வர இருக்கிற அபாயத்தை சொல்வதாகவும் வாசிக்கலாம். நீரின் அடியோட்டமாக பேசப்படாதது இக்கவிதையில் இருக்கிறது. ஒன்றையொன்று  காத்திருந்து வேட்டையாடித் தின்னும் இயற்கையின் உலகு ஆரல் பார்க்கும் நாரையால் சுட்டப்பட்டது.  அந்த இயற்கையின் வன்முறை கவிதையில் பேசப்படாததாக, அடியோட்டமாக காணப்படாததாக இருக்கிறது. நாரையின் நீண்ட பசிய கால்கள் குறிப்பிடப்படுவதாலும்  நாரையின் படிமம் இயறகை உலகை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கிறது. அதற்கு எதிராக பண்பாட்டு உலகு களவு, கூடுகை, சூளுரை ஆகியவற்றால் கவிதையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

——

உம்மையின் இழிவுச் சிறப்பு

——————


கவிதையின் கடைசி வரியில் வரும், ‘குருகு முண்டு’ என்பதிலுள்ள உம்மை இக்கவிதையில் இழிவுச் சிறப்பு பெறுகிறது. அதாவது குருகு இருந்தும் சாட்சியாவதற்குத் தகுதி பெற்றதாய் இல்லை என்பதை உம்மை விகுதி சொல்கிறது. ‘செய்கோ’ என்ற சொல்லில் உள்ள ஓகார அசைநிலையையும், ‘ஞான்றே’ என்ற சொல்லில் உள்ள ஏகார அசைநிலையையும் கூடவே கவனிக்க வேண்டும். என்னை பிறரறியாதவாறு கவர்ந்த களவன் அவன் சொல்லியபடி செய்யவில்லை. அவனுடைய சொல்லுக்கும் செயலுக்கும் சாட்சியாய் நின்றது அங்கேயிருந்த தகுதியில்லாத நாரை ஒன்றே. இதற்கு நான் என்ன செய்வேன் என்று தலைவி தோழியை நோக்கி வினவுகிறாள். 




No comments: