குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-42
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவி தோழியிடம் கூறியது
—-
இயற்றியவர்: ஔவையார்
குறுந்தொகையில் பாடல் எண்; 43
திணை: பாலை
————-
செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே,
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே,
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல்,
நல் அராக் கதுவியாங்கு,
என்அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே
——————-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
தோழி, தலைவன் என்னைவிட்டுப் பிரிந்து செல்லமாட்டானென்று நான் அவனை இகழ்ந்தேன்; அவனோ நம் பிரிவை இவளிடம் அறிவித்தால் அதற்கு அவள் உடன்படமாட்டாளென்று அவன் என்னை இகழ்ந்தான், இருவரிடத்துள்ள இரு பெரு ஆண்மை செய்த பூசலால் என்னுடைய துன்பத்தையுடைய நெஞ்சு நல்லபாம்பு கவ்விக் கடித்ததனால் வருத்தப்படுவதைப் போல மிகுந்த கலக்கத்தை அடைந்தது.
——-
ஆண்மை செய்த பூசல்
——-
தலைவி இப்பாடலில் தலைவனுக்கும் தனக்கும் ஏற்பட்ட பூசலை ஆண்மை செய்த பூசல் என்று பெயரிடுவது கவனிக்கத்தக்கது. இகழ்தல் என்பதற்கு திருக்குறள் 539 இக்கு பரிமேலழகர் எழுதிய உரையை மேற்கோள் காட்டும் உ.வே.சா. ‘செய்வது செய்யாது சோர்ந்திருத்தல்’ என விளக்கமளிக்கிறார். ஆகையால் தலைவன் இகழ்ந்தது என்பது தான் பிரிந்து செல்வதைக் கூறினால் தலைவி தலைவி அதற்கு ஒப்புதல் தரமாட்டலென்று கூறாமல் விட்டது. ஆகவே இந்தக் கவிதையில் பூசல் என்பது அவர்களிடையே சொற்களற்று நடந்திருக்கிறது; அதுவே மேற்சொன்ன அர்த்தத்தில் ஆண்மையாகவும் இருக்கிறது. ஒவ்வான் அல்லள்- ‘இவர் நம்மைப் பிரியார் என்னும் ஊக்கத்தையும் ‘இவளுக்கு சொல்லாமலே போவோம் என்ற துணிவையும் முறையே இருவர்பாலும் உண்டான ஆண்மை என்றாள். தொல்காப்பியர் ‘பிறப்பே குடிமை ஆண்மை’ என்று சொல்வதை வைத்தும் உ.வே.சா. ஆண்மை இருபாலருக்கும் பொதுவானது என விளக்கம் தருகிறார்.
———-
சொல்லாமல் பிரிதல்
——
தலைவன் போர் நிமித்தமாகவோ, பொருள் வயினோ தலைவியிடம் சொல்லாமல் பிரிந்து செல்லுதல் மரபு என்றும் உ.வே.சா. எழுதுகிறார். அவர் தொல்காப்பியம் கற்பியல் சூத்திரம் 43, ‘ துன்புறும் பொழுதினும் உணர்த்தாது பிரிந்து’ என்று கூறுவதால் இதை உணரலாம் என்றும் எழுதுகிறார்.
——
அலமலுக்குறுதல்
——
அப்படிச் சொல்லாமல் பிரிதலால் “நல் அராக் கதுவியாங்கு, என்அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே” எனத் தலைவி தோழியிடம் சொல்லி விசனப்படுகிறாள். பாம்பை நல்ல பாம்பென்பது வழக்கு, அதில் ‘நல்ல’ என்பது பொருளற்றது. பாம்பு கொத்திய துன்பத்திற்கு நிகரான துன்பத்திற்குதலைவனின் பிரிவால் ஆளாகும் தலைவி அவர்கள் ஒருவக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லை என்பதை நினைத்து அவள் மேலும் கலக்கமுற்றதை ‘அலமலக்குறுதல்’ என்று சொன்னாள். ‘அலமலுக்குறுதல்’ என்பதற்கு ‘சுழலுதல்’ என்பது நேரடிப் பொருள். இது நீலகேசியின் ‘மனங்களைக் கலமலக் குறுக்கும்’ என்ற வரியில் வருவது போல ‘கலமலக்குறுதல்’ எனவும் வரும்.
——-
No comments:
Post a Comment