Sunday, May 19, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-35

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-35

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: பரணர்

குறுந்தொகையில் பாடல் எண்; 36

திணை: குறிஞ்சி

————-

துறுகல் அயலது மாணை மாக்கொடி

துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,

நெஞ்சு களன் ஆக நீயலென் யானென

நற்றோள் மணந்த ஞான்றை மற்று அவன்

தாவா வஞ்சினம் உரைத்தது,  

நோயோ தோழி நின்வயினானே.

————-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

உருண்டைக் கல்லின் அயலில் உள்ளதாகிய மாணையென்னும் பெரிய கொடியானது தூங்குகின்ற களிற்றின் மேல் படரும் குன்றங்களையுடைய நாட்டுக்குத் தலைவன் நின் நெஞ்சு களமாக இருந்து பிரியேனென்று எனது நல்ல தோளை அணைந்த போது அத தலைவன் கெடாத உறுதிமொழியைக் கூறியது உன்னிடத்தில் வருத்தத்திற்குக் காரணமாகுமோ? ஆகாதன்றே.

————

மாணைக்கொடி பாறை போலத் தோன்றும் களிற்றின் மேல் படர்தல்

——-

யானையைப் பெரும்பாறைக்கு உவமிப்பதை பல சங்கக் கவிதைகளில் வாசிக்கலாம். இந்தப் பாடலில் பெரும்பாறை போல இருந்த யானையின் மேல் படர்ந்த மாணைக்கொடியானது யானை துயில் நீங்கும்போது சிதைவுபடும்; தலைவனின் சூளுரையை நம்பியதால் தலைவியின் நிலைமை மாணைக்கொடியின் நிலைமையைப் போன்றது. உ.வே.சா. துஞ்சுகின்ற அளவும் துறுகல் என்று தோன்றும் யானையின் மேல் படர்ந்து, துயில் நீங்கி அது சென்ற இடத்துப் பற்றுக்கோடின்றி இருத்தலைப் போல என உரை வளம் சேர்க்கிறார். 

——

வஞ்சினம் உரைத்தல்

———-

சங்க இலக்கிய புறப்பாடல்களில் வஞ்சினம் உரைத்தல் வீரத்தின் உயர்பண்பாகப் போற்றப்படுகிறது. இது அஞ்சாமையின் அடையாளமாக வீரநிலைக் காலப் பாடல்களில் காணப்படுகிறது. தம் வீரத்தைப் பகைவர்க்கு உணர்த்த வேண்டிய சூழலில் வஞ்சினம் எழுகிறது. அகப் பாடல்களிலோ வஞ்சினம் உரைத்தல் தலைவன் தலைவிக்கு அவளைப் பிரியேன், மணமுடிப்பேன் என அளிக்கும் வாக்குறுதிகளைக் குறிப்பதாகும். அகத்திற்கும் புறத்திற்குமிடையே ஒழுங்கமைப்பு உறவுகளை (systemic relations) உருவாக்கும் கருத்தாக்கங்களில் வஞ்சினம் உரைத்தலும் சேர்வது ஒரு அரிய மொழிபு ஆகும். இப்பாடலில் தலைவியின் தோளணைந்து தலைவன் வஞ்சினம் உரைக்கிறான்.

———

‘நோயோ தோழி” என்பதிலுள்ள ஓகாரம் எதிர்மறை

——-

தோளணைந்து தலைவன் சூளுரைத்தபோது நற்றோளாய் இருந்தது இப்போது இல்லை; இப்பொது நலிந்து மெலிந்த தோளாய் இருக்கிறது. நற்றோள் என்பது தலைவிக்கு நினைவு என்பது போலவே தலைவனின் சூளுரையும் நினைவாகவே இருக்கிறது. இதைத் தலைவி தோழியிடத்து தலைவன் வஞ்சினம் உரைத்து மறந்திருத்தல் எனக்குத் துன்பந் தருவது; அதனை நான் பொறுத்து ஆற்றியிருப்பது உனக்கு வருத்தமுண்டாக்க காரணமாயிருக்கக் கூடாது என்றும் சொல்லும் விதமாக ‘நோயோ தோழி’ என்று வினவுகிறாள்.  ஆகவே நோயோ என்பதிலுள்ள ஓகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது.

——-

நெஞ்சு களனாக

——

களம் என்ற சொல்லை களன் என எழுதலாம்; மனம் என்பதை மனன் என்று எழுதலாம் என்பதைப் போல. மகரத்திற்கு பதிலாக னகரம் வருவது மகரனகரப்போலி எனப்படும். நெஞ்சை நோக்கிப் பேசப்படும் கவிதைகளிலும், நெஞ்சின் போராட்டங்களைப் பேசும் கவிதைகளிலும் நெஞ்சு ஒரு களனாக, போர்க்களத்திற்கு இணையானதாக அகக்கவிதைகளில் வருகின்றன. இக்கவிதையில் 

வரும் “நெஞ்சு களன் ஆக நீயலென் யானென, நற்றோள் மணந்த ஞான்றை மற்று ,அவன்தாவா வஞ்சினம் உரைத்தது” எனும் வரிகள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஞான்றை என்ற சொல்லில் ஐ சாரியை. தாவா வஞ்சினமென்றது அது கூறிய காலத்தில் தலைவியின் நினைவு, இப்போது அது தவறியது என்பது குறிப்பு.

‘நெஞ்சு களனாக’ என்பதற்கு இரா. இராகவையங்கார்  தன் நெஞ்சு சான்றாக, தன் நெஞ்சே அறியும் அவைக்களனாக இருப்பதாக உரை எழுதுகிறார். 

——

காதலின் நிலம்

——-

மாணைக்கொடிகள் தூங்கும் யானைகளைப் பெரும்பாறைகளென நினைத்து அவற்றின் மேல் படந்திருப்பது என்ற காட்சி காதலர்கள் பின்னிப் பிணைந்து கிடக்கும் காதலின் மலைநிலத்தைச் சொல்கிறது.  குறிஞ்சித் திணையின்பாற்பட்ட அழகிய காட்சிகளில் இதுவும் ஒன்று. 

—-

No comments: