Tuesday, May 21, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-37

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-37

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 38

திணை: குறிஞ்சி

————-

கான மஞ்ஞை அறை ஈன் முட்டை

வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்

குன்ற நாடன் கேண்மை, என்றும்

நன்று மன் வாழி தோழி, உண்கண்

நீரொடு ஒராங்குத் தணப்ப  

உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, காட்டிலுள்ள மயிலானது பாறையில் ஈன்ற முட்டைகளை வெயிலில் விளையாடும் முசுவின் குட்டி உருட்டுதற்கு இடமாகிய மலைநாட்டையுடையவனாகிய தலைவனோடு நட்பு கொண்ட நீ, அவனுடைய பிரிவினால் மைதீட்டப்பட்ட கண்களில் இருந்து கண்ணீர் பெருக்குகிறாய். அப்பிரிவை நினைத்து வருந்தாமல் பொறுத்துக்கொள்ளுதல் எக்காலத்திற்கும் நல்லது

———

காட்டு மயிலின் முட்டைகளோடு விளையாடும் கருங்குரங்குக் குட்டி

——-

வெயிலில் பாறையில் கிடக்கும், காட்டு மயில் ஈன்ற முட்டைகளோடு

அவை என்ன என்று தெரியாமல் விளையாடும் கருங்குரங்கு குட்டிகள் இருக்கும் இடத்தைச் சேர்ந்தவன் தலைவன். அவன் பிரிவால் வருந்தும் தலைவியை ஊரார் பேசும் அலர் மேலும் துன்புறுத்துவதை இது குறிக்கின்றது. திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்,  மனையகத்து வைக்கப்படாமையின் மறைவிடத்திராத மயிலின் முட்டையை ஈனும் பொழுது உளதாம் துயரத்தை அறியாத முசுக்குருளை ஈன்ற மயிலின் வருத்தத்தையும் எடுத்த முட்டையின் மென்மையையும் எண்ணாது உருட்டுகிறாற்போல காதலர் கருத்தில் வைக்கப்படாத எனது காமத்தை நீ உற்று உணராமையான் என் வருத்தத்தையையும் காமத்தையும் மென்மையையும் கருதாது நீ இவ்வாறு உரைக்கின்றனை எனத் தலைவி தோழியிடம் கூறுவதாக விரித்து பொருளுரைப்பது பொருத்தமாக இருக்கிறது. 

——

வல்லுவோர்க்கு என்றும் நன்று

——

கடைச் வரியிலிருக்கும் ‘வல்லுவோர்க்கே’ என்பதிலிருந்து வல்லுவோர்க்கு என்பதையும் அதற்கு முந்தைய வரிகளிலுள்ள ‘என்றும் நன்று மன் வாழி தோழி’ என்பதிலிருக்கும் ‘என்றும் நன்று’ என்பதையும் சேர்த்து ‘வல்லுவோர்க்கு என்றும் நன்று’ என்று வாசிக்க வேண்டும். தலைவனோடு சேர்ந்து இருந்த காலத்தில் தலைவி வலுவாகம் நன்றாகவும் இருந்ததாகவும், அவனைப் பிரிந்த காலத்தில் துன்புற்று பலகீனமானதாகவும் இதனால் பெறப்ப்படும் இதை விளக்க உ.வே.சா. “சாரனாடன் கேண்மை, சாரச் சார சார்ந்து, தீரத் தீரப் பொல்லாதே” என்ற பழம்பாடலொன்றை மேற்கோள்காட்டி விளக்குகிறார். குன்ற நாடன் கேண்மை என்பது மலைநாட்டைச் சேர்ந்தவனுடைய நட்பு எனப் பொருள்படும்.

——

வல்லுவோர்க்கே என்பதிலுள்ள ஏகாரம்

——

ஏகாரத்தை அசைநிலையாக்கி மன் ஒழியிசைப்பொருளில் வந்ததாகக் கொண்டால் தலைவி தனக்கு தலைவனின் பிரிவைத் தாங்குகிற வன்மை இல்லை என்று கூறுவதாகப் பொருள் கொள்ளலாம் என்று உ.வே.சா. எழுதுகிறார். அதாவது ஆற்றல் வல்லுவோர்க்கு நன்று என்று சொன்னதனால் தன்னிடத்தே அந்த வனமை இல்லை என்பது புலனாகிறது. 

—-

தலைவியின் அக முறிவு

—-

மயில் முட்டைகளின் மென்மை, அது என்னவென்று அறியாது அதோடு விளையாடும் கருங்குரங்குக் குட்டிகள் (முசுவின் குருளை), தலைவன் தலவியோடு இல்லாதது, அவனுடய மலைநாடு தலைவிடமிருந்து வெகு திலவில் இருப்பது, மையிட்ட கண்களில் இருந்து தொடர்ந்து பெருகிக்கொண்டேயிருக்கும் கண்ணீர் எனத் தலைவியின் அக முறிவு இக்கவிதையில் சொல்லப்படுகிறது. இன்மையும் தொலைவும் மென்மையும் வன்மையின்மையுமான இதயத்தோடு விளையாடுகின்றன.  

——

No comments: