குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-20
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவி தோழியிடம் கூறியது
—-
இயற்றியவர்: ஓதலாந்தையார்
குறுந்தொகையில் பாடல் எண்; 21
திணை: முல்லை
————-
வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானங் காரெனக் கூறினும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே.
———
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
வண்டுகள் தேன் உண்ணுதற்கு வந்து வீழும்படி, செறிந்து மலர்ந்த நீட்சியுடைய பூங்கொத்துகளைத் தழைகளின் இடையே மேற்கொண்டு பொன்னாற் செய்த அணிந்துகொள்ளுதற்குரிய தலையணிகளைக் கோர்த்துக்கட்டிய, மகளிருடைய கூந்தலைப் போன்ற, கண்ணுக்குத் தோன்றுகின்ற புதிய பூக்களையுடைய கொன்றைமரங்களையுடைய காடானது, இது கார்ப்பருவமென்று கூறினும் நான் தெளியேன் ஏனென்றால் தலைவன் பொய்மொழி கூறாதவன்.
——
கொன்றை மகளிரைப் போலத் தோன்றினும் மகளிரல்ல
——-
இயற்கை தன் பருவத்தைப் பற்றி என்றேனும் பொய் சொல்லுமா? இந்தக் கவிதையில் தலைவிக்கு இயற்கை பொய் சொல்கிறது; அப்படி பொய் சொல்வதாக அவள் சொல்கிறாள். கார் காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் திரும்பவில்லை ஆனால் கார் காலத்தின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் கானகத்தில் தோன்ற ஆரம்பித்துவிட்டன. ஒன்று கானகம் பொய் சொல்ல வேண்டும் அல்லது தலைவன் பொய் சொல்லியிருக்க வேண்டும். தலைவியின் காதல்நம்பிக்கையைப் பெற்ற தலைவனோ ‘பொய் வழங்கலரே’ எனவே கானகம்தான் பொய் சொல்லியிருக்க வேண்டும்; தலைவி உண்மையில் கார் காலம் வரும் வரை அவன் சொல் பற்றி அவனுக்காகக் காத்திருப்பாள். ‘புதுப்பூங் கொன்றைக் கானங் (கானகம்) கார் என்று கூறினும். தலைவி இயற்கையின் சமிக்ஞைகளை என்னைப் போல இன்னும் பல நவீன சம காலத்திய கவிஞர்களைப் போல சித்தபிரமையின் பாற்பட்ட பருவநிலை அறிக்கையை (paranoid seasonal weather report) முன்வைக்கவில்லை. தலைவி தன் காதலனின் சொற்களுக்கு காதல் உண்மையின் உயர் ரக அதிகாரத்தைக் கொடுக்கிறாள். தன் வாதத்தை வலுப்படுத்த அவள் கூறுவதை உ.வே.சா. பொன்னாற் செய்த தலையணிகளைக் கோர்த்துக்கட்டிய மகளிரின் கூந்தலைப் போன்ற புதிய பூக்களையுடைய கொன்றை மரங்கள் உண்மையில் மகளிரில்லைதானே அது போல வந்துவிட்ட கார்காலத்துக்கும் அவை சமிக்ஞைகளல்ல என விளக்கமளிக்கிறார்.
———
காதலில் காத்திருத்தலின் அழகியலும் குறியியலும் (The semiotics and aesthetics of waiting in love)
———
ஓதலாந்தையாரின் இந்தக் கவிதையைப் போன்ற முல்லைத் திணை சங்கப் பாடல்கள் இருத்தலையும், இருத்தலின் நிமித்தத்தையும் பேசுகின்றன. இருத்தலும் இருத்தலின் நிமித்தமும் காதலில் காத்திருக்கையில் நீண்டுகொண்டே போகின்றன; அப்போது இயற்கையின் சமிக்ஞைகள் ஒன்று தவறாக இருப்பதாக புரிந்துகொள்ளப்படுகின்றன இல்லையென்றால் சமிக்ஞைகள் பேசா நிற்கின்றன. பேசும் இயற்கையின் படிமங்களைத் தன் கவிதைகளில் சதா குறிப்பிடும் சங்கக் கவிதைகளுள் காத்திருத்தலின் அழகியலைச் சொல்லும் முல்லைத் திணை கவிதைகள் இயற்கை பேசாத எதிர் உலகத்தைக் கட்டமைப்பதாக வாசிக்கலாம். முல்லைத் திணையைச் சார்ந்த கவிதைகளுனூடாகவே இவ்வாறாக சங்கக்கவிதைகளின் அமைப்பாக்கம் (sturucture in the structuralist sense) நமக்குத் தெரியவருவதாக இருக்கிறது.
———————
இயற்கையே பெண்மையின் உருவகமாக
———————
புதுப்பூ என்றதால் பருவம் தொடங்கியதைச் சொல்ல வேண்டும்; கொன்றை மரத்திற்கு மகளிரும் , தழைக்கு அவர் கூந்தலும், பூங்கொத்திற்கு பொன்னிழையும் உவமிக்கப்படுகின்றன. இய்றகையே பெண்மையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது எனக் கொண்டால் அந்த உருவகம் அதன் செழுமையில் அதன் விகசிப்பில் பேசும் தலைவியின் உடலின் நீட்சியாகிறது. மழை வருவதைப் பற்றி, கார் காலம் வருவதைப் பற்றி கிசுகிசுப்பது உடலா, இயற்கையா?
———
பருவகால சுழற்சிகளும் குறியியல் மாற்றமும்
———
கவிதை இரண்டு குறியியல் அமைப்புகளுக்கு இடையே ஒரு முரணை முன்வைக்கிறது. முதலாவது இயற்கை உலகம்: பூக்கும் மரங்கள், சலசலக்கும் தேனீக்கள், வரவிருக்கும் மழையின் கிசுகிசுப்புக்கள். இந்த அறிகுறிகள் உடனடி பருவ சுழற்சி மாற்றத்தைக் குறிக்கின்றன. இரண்டாவது குறியியல் அமைப்பு மனித அனுபவத்திலிருந்து வெளிப்படுகிறது, குறிப்பாக காதலமும் அவனின் வார்த்தைகளில் அசைக்க முடியாத நம்பிக்கையும். இது இன்னொரு குறியியல் புலமாகும், அங்கு அன்பின் குறிப்பான்கள் இயற்கையில் காணக்கூடிய மாற்றங்களைக் காட்டிலும் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றனவாக இருக்கின்றன.
கொன்றை மரங்கள் தொடக்கத்தில், எதிர்பார்க்கப்படும் மழைக்காலத்துடன் வாழ்க்கையின் வளர்ச்சியை, மாற்றத்தை உறுதியளிக்கும் அறிகுறிகளாக செயல்படுகின்றன. இருப்பினும், காதலனின் இருப்பு - கவிதையில் காணப்படாதது - இந்த வெளித்தோற்றத்தில் நிறுவப்பட்ட குறியீட்டை சீர்குலைக்கிறது. இயற்கை, பண்பாடு அல்லது மனித உலகு ஆகிய இரண்டு குறியியல் உலகங்களுக்கு இடையிலான போராட்டங்களாக, முரண்களாகவே குறுந்தொகைக் கவிதைகள் முழுக்க காதலுணர்வின் வெளிப்பாடு சௌந்தர்யம் கொள்கிறது. இயற்கையுலகு வெல்கிறதா, மனித உலகு வெல்கிறதா அது நடக்கும் திணைக்களம் எது என்பதை நாம்தொகுக்கும்போது நமக்கு பழந்தமிழரின் அகக் கவிதையியல் என்ன என்பது பற்றிய முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கும்; அப்படிக் கிடைக்கும் சித்திரத்தை நாம் நமது பாரம்பரியமாக வரித்துக்கொள்ளவேண்டும். முல்லைத் திணையின்பாற்பட்டு மனித விழைவை இயற்கையின் சமிக்ஞைக்கு மீறிய முக்கியத்துவமுடையதாய் காட்டும் இக்கவிதையை முழுசித்திரத்தை நோக்கிய தூரிகைத் தீற்றுதலாய் குறித்தல் அவசியம்.
No comments:
Post a Comment