Monday, May 6, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-23

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-23

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: பரணர்

குறுந்தொகையில் பாடல் எண்; 24

திணை:  முல்லை

————-

கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்

என்னை யின்றியுங் கழிவது கொல்லோ

ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்

தெகுளிறு மிதித்த வொருபழம் போலக்

குழையக் கொடியோர் நாவே

காதல ரகலக் கல்லென் றவ்வே.

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

கரிய தாளையுடைய வேப்பமரத்தினது ஒள்ளிய பூவின் புது வருகையானது என்னுடைய தலைவன் இல்லாமலும் செல்வதுவோ? என் காதலர் என்னை நீங்கிச் செல்ல, ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த, வெள்ளிய கொம்புகளையுடைய அத்திமரத்தினது, உண்ண விரும்பிய ஏழு நண்டுகளால் மிதிக்கப்பட்ட ஒற்றைப்பழமானது குழைவது போலக் குழைய, நான் வருந்தும்படி அயலாராகிய கொடிமகளுருடைய நாக்கள் அலர் கூறிக் கல்லென்று முழங்கின. 

———-

வாசிப்பு

———

காதல், வலுவற்றமென்நிலை, இன்மையின் எடை

———-

இந்தக் கவிதை காதலியோடு காதலன் இல்லாதது எந்தவகையான வலுவற்றமென்நிலையைக் காதலிக்கு ஏற்படுத்தும் என்பதை ஒரு அழகிய படிமத்தோடும், அவளுடைய அகப் பதற்றத்தினைச் சொல்லும் குறிப்போடும் அவள் எந்தவகையான ஊராரின் குரூர சொற்களை எதிர்கொள்கிறாள் என்பதையும் சேர்த்துச் சொல்கிறது.  


‘கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்’ என்ற முதல் வரியில் உள்ள ‘யாணர்’ என்ற சொல் இளவேனிலில் வேப்பமரம் தழைத்துப் பூத்துக் குலுங்குவதைக் குறிப்பிடுவதாக தமிழண்ணல் உரை எழுதுகிறார். பாண்டியரும் அவர் படையும் சூடி நின்ற சிறப்பால் வேம்பூவை ‘ஒண் பூ’ என்றாள் என இரா. இராகவையங்கார் விளக்கமளிக்கிறார். கருங்கால் வேம்பு என்றது வேப்பம் பூவிற்கு எதிராக வேப்பமரத்தின் கருமையான நடுமரத்தை நிறுத்தியது பிரிவாற்றாமையினால் விளைந்த பூக்கள் என்பதைக் குறிப்பிடவாகும். 


‘என்னை யின்றியுங் கழிவது கொல்லோ’ - என்பதில் ‘கொல்’ என்பது ஐயப்பட்டு வந்து இடைச்சொல், ‘ஓ’ என்பது அசைநிலை. ‘என்னை’ என்பது தலைவனை என்று விளக்கம் எழுதுகிற உ.வே.சா. குறுந்தொகையில் பல பாடல்களில் தலைவி ‘என்னை’ என்று தலைவனைக் குறிப்பதை காணுமாறு அறிவுறுத்துகிறார். வேப்பம் பூக்கள் மலரும் இளவேனில் காலத்தில் என்னோடு இருக்க வேண்டிய தலைவன் என்னை விட்டு நீங்கி எப்படிச் சென்றான் எனத் தலைவி வினவுகிறாள்; ‘கொல்’ என்பது இரங்கற் குறிப்பும் ஆகையால் அவள் துயரத்திலிருப்பதும் தெரிகிறது. 

————

ஏழு நண்டுகள் மிதித்தொரு அத்திப் பழம்

—————

ஆற்றங்கரையில் ஏழு நண்டுகள் மிதித்துக் குழைந்த அத்திப்பழம் போலக் கிடப்பதாகத்  தலைவி தன்னைச் சொல்லிக்கொள்வது அக்கவிதையிலுள்ள அழகான படிமம். மரத்திலிருந்து விழுந்தது வரை

தலைவியின்  சுய-உணர்வு ஒரு பேரழிவுகரமான மாற்றத்திற்கு உட்படுகிறது. ஒரு காலத்தில் மரத்தின் மீது உயரமான இடத்தில்  இருந்த  அத்தி, இப்போது எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக, நண்டுகளின் கால்களில் கூட மிதிக்கப்படக்கூடிய இடத்தில் உள்ளது.  இங்கே எழு என்பது பலவென்பதைக் குறிக்கும் வாய்பாடு என உ.வே.சா.விளக்கமளிக்கிறார். ஜூலியா கிறிஸ்தவா அத்திப்பழம் குழைந்து முசிந்து கிடப்பது போன்ற பென்ணின் நிலைமைகளை விளக்கும்போது அதை இழிநிலைமை  ( abjection) என அழைக்கிறார். (பார்க்க: Kristeva, Julia. Powers of Horror: An Essay on Abjection. Translated by L.S. Roudiez, Columbia University Press, 1982.) கிறிஸ்தவாவின் இழிநிலை எனும் கருத்தாக்கம் பென்ணின் பாதுகாப்பு எல்லைகள் முழமையாக அழிக்கப்படுவதைக் குறிக்கிறது. கிறிஸ்தவா பெண்ணிற்கு இந்த நிலைமை தாய்மையடைதலின்போதும், மகப்பேறின் போதும் ஏற்படுவதாக விவரித்தாலும் பெண்களின் உளவியல் நிலைகளில் ஆரம்ப நிலை ஒடுக்குதல்களைச் சொல்லும் ஒரு மனோநிலை பற்றிய கருத்தாக்கமாகவும் கருதப்படுகிறது. முசிந்து போதல், அழுகுதல், அழிவுறுதல் போன்ற நிலைகளை அருவருப்பான அனுபவமாக உணர்தலையும் கிறிஸ்தவா விளக்குகிறார். இந்தக் கவிதையில் நண்டுகள் மிதித்துக் குழையும் அத்தி எனும் படிமம் அவள் தன் இழிநிலையை அருவருப்பான அனுபவமாக உணர்தலை எடுத்துச் சொல்கிறது.

———-

கொடியோர் நாவின் தாக்குதல்

———

ஏற்கனவே தலைவனைப் பிரிந்த துயரிலும் அச்சத்திலும் இருக்கும் தலைவி, தன்னைக் குழைந்து நசிந்து இழிநிலையில் இருப்பதாகக் கருதிக்கொள்ளும் தலைவி கொடியோர் நாக்குகளாலும் அவமதிக்கப்படுவதை நினைத்து வருந்துகிறாள். கொடியோரென்பது உயர்திணை இருபாபாற் பொதுப் பெயரென்றாலும் தொழிலால் ஆணொழித்தது என்று விளக்கமெழுதும் உ.வே.சா. கொடிமகளுடைய நாக்கள் என பெணகளின் நாக்குகளே தலைவியைப் புறம் பேசும் என உரை எழுதுகிறார்.  தலைவன் பிரிவினால் தலைவி வேறுபட்டிருத்தலை எடுத்துக்கூறிப் பழித்தல் கல்லென்றல் என அழைக்கப்பட்டது. கொடியமகளிரின் நாக்குகள் அலர் கூறி கல்லென்று முழங்கின. 



No comments: