Monday, May 13, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-29

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-29

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 30

திணை: பாலை

————-

கேட்டிசின் வாழி தோழி யல்கற்

பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய

வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்த்

தம்ளி தைவந் தனனே குவளை

வண்டுபடு மலரிற் சாஅய்த்

தமியேன் மன்ற வளியேன் யானே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, கேட்பாயாக, இராக்காலத்தில் பொய் கூறுதலில் வன்மையுடைய தலைவன், என் உடம்புடன் அணைதலைப் பொருந்திய, மெய் போலுந்தன்மை உடைய, பொய்யாகிய கனவு மயக்கத்தை  உண்டாக்க, துயிலுணர்ந்து எழுந்து, தலைவனென எண்ணிப் படுக்கையைத் தடவினேன்; வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலரைப் போல மெலிந்து, நிச்சயமாகத் தனித்தவளாயினேன்; அத்தகைய நான், அளிக்கத்தக்கேன்.

————-

ஏக்கம், ஏமாற்றுதல், மனமுறிவு

————-

மிக்ககுறைந்த, தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் இக்கவிதை காதலின் ஏக்கம், ஏமாற்றுதல், மனமுறிவு ஆகியவற்றைப் பற்றிச் சொல்கிறது. ஒரு பொய்க்கனவை திரும்பச் சொல்வது போல ஆரம்பிக்கும் கவிதை , ‘கேட்டிசின் வாழி தோழி’ என தோழியை, (எனவே கவிதை வாசிப்போரை/கேட்போரைத்) தன் நன்னம்பிக்கைக்குரிய பாத்திரமாக மாற்றி அவளுடைய கவனத்தையும், அவளுடைய அனுதாபத்தையும் கோருகிறது.  அடுத்தவரின் அனுதாபத்தைக் கோரும் விளியின், வாழ்த்தின் பின்னணியில் ஆழமான மனமுறிவும், ஏக்கமும், பலவீனமும் இருக்கிறது. ‘கேட்டிசின்’ என்ற சொல்லிலுள்ள ‘இசின்’ முன்னிலை அசைச்சொல்லாகும். சின்’ என்பது இசின் என்பதன் முதற்குறை. மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் என தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26 ஆம் சூத்திரம் சொல்கிறது.

———

பொய்வலாளனும் பொய்க்கனவும்

———

தலைவி தலைவனைப் பொய்வலாளனென்றது தான் கூறிய நாளில் வந்து தலைவியைத் தான் கூறிய நாளில் வந்து மணம்புரியாததைப் புலப்படுத்தியது. வாய்த்தகைப் பொய்க்கானாவென்றது உணம்மையைப் போலத் தோன்றி பொய்யாக முடியும் கனவு. தலைவியின் கனவென்னும் மெய்ப்பாடு எதைப்பற்றியது?  தன்னைத் தலைவன் அணைத்தது போல உணர்ந்து வெறும் படுக்கையைக் கையால் தடவி விழித்ததா அல்லது தலைவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட பிரிவாற்றமையினால் விழைந்த விரக்தியா? கனவும் நனவும் இவ்வாறாக ஒன்றன் மேல் ஒன்றாகப் பொருளீர்ப்பதால் இக்கவிதை செழுமை பெறுகிறது. சாஅய் – என்பது இசை நிறை அளபெடை தமியேன் என்பது தனியாக நின்றேன்;  மன்ற என்பது தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல். தனியாகத் தலைவி விரக்தியில் வாடி நிற்பதை இவை மேலும் சொல்கின்றன.

———-

வண்டுபடு குவளை மலர்

——-

வண்படு மலரைப் போல மெலிதல் என்பது இந்தக் குறுந்தொகைப் பாடலிலிருந்து பல்வேறு வகையான இடைக்காலச் செய்யுள்களிலும் எடுத்தாளப்பட்ட உவமையாகும். உ.வே.சா. இதற்கு வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலரைப் போல என விர்த்து உரை எழுதுகிறார். உழக்கியதால் மெலிந்து, நலிந்து கிடத்தலே அதன் பொருள். பொய்க்கனா கண்டு எழுந்த தலைவியின் அமளியும் அரற்றலும் அவள் உடல் மெலிந்து நலிந்திருத்தலால் மேலும் மெய்ப்பாடு கண்டது. 

——- 


No comments: