Friday, May 10, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-26

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-26

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

—-

இயற்றியவர்: வெள்ளிவீதியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 27

திணை: பாலை

————-

கன்று முண்ணாது கலத்தினும் படாது

நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்

கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது

பசலை யுணீஇயர் வேண்டும்

திதலை யல்குலென் மாமைக் கவினே

———————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

நல்ல பசுவின் இனிய பாலானது அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், தரையில் சிந்தி வீணானது போல, எனது அல்குல் பகுதியில் தேமல் படர்ந்து எனது மாமையாகிய பேரழகு எனக்கும் ஆகாது, என் தலைவனுக்கும் இன்பம் பயக்காமல் பசலை படர்ந்திருக்கிறது.

——-

வாசிப்பு

———-

இந்தப் பாடலை இயற்றியது யார்?

—————

உ.வே.சா. தன்னுடைய 1937 குறுந்தொகைப் பதிப்பில் இந்தப்பாடலின் ஆசிரியராக கொல்லன் அழிசியைக் குறிப்பிடுகிறார். ஆனால் பல உரையாசிரியர்களும் இப்பாடலை இயற்றியவர் வெள்ளிவீதியார் என்றே குறிப்பிடுகின்றனர். வெள்ளிவீதியார் பெண்பாற் புலவர். பொ. வே. சோமசுந்தரனார்  இப்பாடல் வெள்ளிவீதியார் என்னும் நல்லிசைப் புலமையாட்டியார் தம் கணவனைப் பிரிந்த காலத்தே கூறியது என்றும் தம் பெயரையோ கணவன் பெயரையோ கூறினால் இதுப் புறப்பாடல் ஆகிவிடும் என்று  அஞ்சி பெயர் கூறாமல் விட்டதால்  அகப்படாலாயிற்று என்றும் கூறுவார்கள் என்று விளக்கமளித்திருப்பது பொருத்தமானதாக இருக்கிறது.   இரா. இராகவையங்கார் தன் உரையில் நச்சினார்க்கினியரின் உரையை மேற்கோள் காட்டி இது வெள்ளிவீதியாரின் பாடல்தான் என்று உறுதி செய்கிறார்.

———-

அல்குல்- சொற்பொருளும் பதிப்பு வரலாறும்

——-

அல்குல் என்ற சொல்லுக்கு பெண் குறி என்ற பொருள் பொதுவாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் அது பெண்ணின் அடிவயிற்றிலிருந்து பெண்குறியை உள்ளடக்கிய தொடைகள் வரை நீளும் பகுதி என்ற பொருளில் பல சங்கப்பாடல்களில் வருகிறது. இந்தக் கவிதையில் வரும் அல்குல் என்ற சொல்லுக்கு டி.வி.கோபாலய்யர் பின்பாகம் என பொருள் சொன்னதாக ஈவா வில்டன் குறிப்பிடுகிறார்; அவர் அல்குல் என்ற வார்த்தையை இடுப்பு (hip) என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். வைதேகி ஹெர்பர்ட் ‘loins’ என மொழிபெயர்த்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. 


குறுந்தொகையை உ.வே.சா.வுக்கு முன்னதாக, முதன் முதலில் 1915 இல் பதிப்பித்த திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் அல்குல் என்ற சொல் வருமிடங்களிலெல்லாம் அதை வேறு சொற்களால் நிரப்பிவிடுவதால பாடல் என்ன சொல்ல வருகிறது என்று தெரியாமல் பொருள் மங்கிவிடுகிறது. சி.வை.தாமோதரம் பிள்ளையும் தன்னுடைய கலித்தொகைப் பதிப்பில் திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் போலவே அல்குல் என்ற சொல்லுக்கு வேறு சொற்களை பதிலீடு செய்திருக்கிறார். உ.வே.சா.வுக்கு மேற்கண்ட கட்டுப்பெட்டித்தனம் இல்லை. அவர் எப்போதெல்லாம் தோலின் நிறமோ அல்குலின் நிறமோ ‘மாமை’ (மாந்தளிர் நிறம்) எனக் குறிப்பிடப்படும்போது அதில் கவனம் செலுத்தி சங்கப்பாடல்கள் பலவற்றிலும் மாந்தளிர் நிறமே பேரழகு வாய்ந்ததாகச்  சொல்லி நம் கவனத்தை அந்த நிறத்தின் மேல் குவிக்கத் தவறுவதில்லை. இந்தப் பாடலுக்கும் உ.வே.சா. உரை எழுதும் போது அல்குலை விட்டுவிட்டு ‘திதலை யல்குலென் மாமைக் கவினே’ என்ற வரிக்கு “ மாமைக் கவின் ; இது மகளிருக்கு பேரழகு பயப்பது; இதன் நிறம் மாந்தளிர், ஆம்பலில் நாருரித்த மெல்லிய தண்டு, ஈங்கையென்னும் கொடியின் தளிர், அசோகந்தளிர் என்பவற்றின் நிறத்தைப் போன்றது ; பசலை படர்ந்தால் இந்நிறம் அழிந்துவிடும்’ என உரை எழுதுகிறார்.

———

பசலை பாய்தெலென்னும் மெய்ப்பாடு

———

பசலை பாய்தலை, தலைவனின் பிரிவைத் தலைவி, தன் உடலில் வெளிப்படையாக தோன்றிய அறிகுறியாய் உணர்ந்ததால் இது மெய்ப்பாடென அழைக்கப்படும். பசலை படர்தலை அல்லது வெள்ளைப்படுதலை பெண்ணுடலின் இழிநிலையாக (abjection) பெண்ணால் உணரப்படுவதாக ஜூலியா கிறிஸ்தவா எழுதுவார். (பார்க்க: Kristeva, Julia. Powers of Horror: An Essay on Abjection. Translated by L.S. Roudiez, Columbia University Press, 1982.) தமிழண்ணல் தன் உரையில் தேமல் படர்ந்த அடிவயிற்றின் அடிப்பகுதி தலைவனுக்கோ தனக்கோ பயன்படாமல் வீணாவதாக தலைவி விசனப்படுவதாக உரை எழுதுகிறார். பென்ணுடல் யார் பார்வையில் இந்த இழிநிலையை அடைகிறது எனக் கவனித்தல் அவசியம். இக்கவிதையில் தலைவி தோழியிடம் தன்னுடலின் மெய்ப்பாட்டினை விவரித்தாலும் அது ஒரு வெளிப்பார்வையை தலைவி அகவயமக்கிக்கொண்டதால்தான் எனக் கருத இடமிருக்கிறது. 

———

தாய்மையின் இழப்பு

———-

‘கன்று முண்ணாது கலத்தினும் படாது’ பசுவின் சீம்பால் வீணாவதைத் தலைவி தன் பசலை படர்ந்த அல்குலின் நிலைமைக்கு உவமிப்பதால் இழப்பு பாலியல் கூடுகை மட்டுமல்ல, தாய்மையின், வளமையின், படைப்பின், உயிருருவாக்கத்தின் இழப்பையும் சேர்த்தே தலைவி கூறுவதாக பொருள் கொள்ள வேண்டும். பசுவின் பால் யாருக்கும் பயனற்று நிலத்தில் கொட்டியது போல மாநிற அல்குலின் பேரழகு பசலை படந்ததால் அழிந்தது. அந்த அழிவு உயிருருவாக்கமே அழிவதற்கு ஒப்பானது. 


No comments: