குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-41
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தோழி தலைவனிடம் கூறியது
—-
இயற்றியவர்: கபிலர்
குறுந்தொகையில் பாடல் எண்; 42
திணை: குறிஞ்சி
————-
காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
கருவி மா மழை வீழ்ந்தென அருவி
விடரகத்து இயம்பும் நாட எம்
தொடர்பும் தேயுமோ நின்வயினானே
——————-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
நடு இரவில் தொகுதியையுடைய பெருமழை பெய்தலால் நீர் பெருகி அதனால் அருவியானது பின்நாளிலும் மலைமுழைஞ்சுகளில் ஒலிக்கும் குறிஞ்சி நிலத்தையுடயவனே, காமமானது நீங்குவதாக இருப்பினும் நின்னிடத்தில் எமக்குள்ள நட்பும் அழியுமோ? அழியாது.
———
காமமும் யாமமும்
——-
பரிமேலழகர் திருக்குறள் 1092 இக்கு எழுதிய உரையில் இப்பாடலில் சொல்லப்படுவது போன்ற காமத்தை மெய்யுறு புணர்ச்சியின்பாற்பட்டது என வரையறுக்கிறார். முதல் நாள் இடையாமத்தில் பெய்த மழை அருவியில் விடாது பின் நாட்களிலும் ஒழுகுவது போல என்ற உவமை முன்னர் பயின்ற புணர்ச்சியால் பெற்ற தொடர்பு என்பதை குறிப்பால் உணர்த்துவதால் இந்தக் காமம் மெய்யுறு புணர்ச்சியின்பாற்பட்டதாகிறது. ‘யாமத்துக் கருவி மா மழை’ என்பதில் ‘கருவி’ என்ற சொல் ‘தொகுதி’ என்பதைக் குறித்து (பார்க்க தொல்காப்பியம் உரியியல் சூத்திரம் 58) இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய கரிய முகில்கள் என்பதைச் சுட்டும். பொ. வே. சோமசுந்தரனார் யாவரும் உறங்கும் இடையிரவிலே மழை பெய்ததாயினும் அதனாற் பெருகிய அருவி, மழை உண்டென்று அறியாதாரையும் அறியக் காட்டி வழிநாள் முழைஞ்சுகளிலே முழங்கினாற் போன்று, நீ இரவின்கண் யாருமறியாது இவளைக் கூடி பிரிவாய் ஆகினும் அதனால் உண்டாக்கிய வேறுபாடு வழிநாள் பலரும் அறியத் தூற்றும் என்று சுட்டுவதால் இதை உள்ளுறை என வகுக்கிறார். நற்றிணையில் வரும் “நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே’ என்ற வரியும் இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.
——-
விடரகம்
——
மலையிலுள்ள வெடிப்புகளையும் குகைகளையும் விடரகம் என்ற சொல் குறிக்கிறது. நச்சினார்க்கினியர் தன்னுடைய மலைபடுகடாம் உரையில் விடரகத்தை மலை முழைஞ்சு என்றழைக்கிறார்.
—-
எம்மும் உம்மும் ஓகாரமும் ஏகாரமும்
——
‘எம் தொடர்பும் தேயுமோ’ என்ற வரியில் ‘எம்’ என்று தோழி தன்னையும் தலைவியையும் சேர்த்துக் கூறினாள்; ‘தொடர்பும்’ என்பதிலுள்ள ‘உம்’ நட்பையும் உள்ளடக்கியது; ‘தேயுமோ’ என்ற சொல்லிலுள்ள ஓகாரம் தேயாது என்ற எதிர்மறைப் பொருளைக் குறித்தது. உ.வே.சா. காமம் ஒழிவதாயினுமென்றது மெய்யுறு புணர்ச்சி நீங்குவதற்கு இடமுண்டு என்பதை குறிப்பால் உணர்த்தி தோழி தலைவனுக்கு இரவுக்குறி மறுத்ததை வெளிப்படுத்தியதாய் பொருளுரைக்கிறார். ‘நின்வயினானே’ என்பதில் ‘ஆன்’ என்பது ஏழன்பொருளில் வந்தது. ஏகாரம் இதில் அசைநிலை.
————-
காமம் அழிந்தாலும் உறவு நீடிக்கும்
——
குறுத்தொகைப்பாடல்களில் தலைவனுக்கும் தலைவிக்குமிடையில் காமம் அழிந்தாலும் உறவு நீடிக்கும் என்று சொன்ன அபூர்வமான பாடல் இது. ‘நாட, காமம் ஒழிவதாயினும் நின்வயினான் எனம் தொடர்பு தேயுமோ’ என்று வினவுகின்ற தோழி ‘நீ இரவில் வராவிடிலும் தலைவிக்கும் உனக்கும் உள்ள உறவு அழியாது என்று சொல்கிறாள். மழை பெய்த பின்பு அருவியில் நீர் கொட்டுவது மழை நின்ற பின்பும் நீடிக்கும் என இக்கவிதையில் வரும் உவமையை அவ்வாறாக நீட்டிக்கப்பட்ட உவமையாக (extended metaphor) நாம் வாசிக்க வேண்டும். காமம் மீறிய தூய அன்பு இக்கவிதையில் முன்மொழியப்படுகிறது.
No comments:
Post a Comment