குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-30
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவி தோழியிடம் கூறியது
—-
இயற்றியவர்: ஆதிமந்தியார்
குறுந்தொகையில் பாடல் எண்; 31
திணை: மருதம்
————-
மள்ளர் குழீஇய விழவி னாலும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே
———
யாண்டும் காணேன்
——-
ஆதிமந்தியார் தன் கணவனான ஆட்டனத்தியைத் தொலைத்துவிட்டுத் தேடுவது அகநானூற்றுப் பாடல்கள் 45, 76,135, 222, 236, 396 ஆகியவற்றிலும் வாசிக்கக் கிடைக்கின்றன. இரா. இராகவையங்கார் ஆதிமந்தியார் மன்னன் கரிகாலன் மகள் என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்பட்டது (சிலப்பதிகாரம் 21:11). எனக் குறிப்பிடுகிறார். இக்கவிதையில் எங்கேயுமே தன் தலைவனைக் காணோம் எனக்கூறும் தலைவி தேடிய இடங்கள் வீரர் கூடும் விழாக்களாகவும் நடன அரங்குகளாகவும் இருக்கின்றன. ‘மள்ளர் குழீஇய விழவி னாலும்’ என்றது போர் வீரர்கள் கூடும் விழாக்களை. தலைவனது ஆணுடலானது பண்பாட்டுவயப்பட்டதாக, ஒரு வீர உடலாக எனவே பெண்டிரால் தழுவத்தக்கதாக இருப்பதாக பொருள்கொள்ள வேண்டும். “யாண்டும் காணேன்’ என்றது விரக்தியின் உச்சம்.
——
துணங்கைக் கூத்து
———
பெண்களை ஆண்கள் தழுவி ஆடும் துணங்கைக்கூத்து இக்கவிதையின் மைய உருவகமாக இருக்கிறது. துணங்கைக் கூத்தைப் பற்றி விரிவாக எழுதுகிற உ.வே.சா. இதை சிங்கிக் கூத்து என்றும் அழைப்பர் எனக் குறிப்பிடுகிறார். துணங்கை ஆடுதலின் போது ஆண்கள் பெண்களுக்கு முதற்கை கொடுத்தலும் பண்டைய வழக்கம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். மள்ளர் களமாடும் வீரக்களங்களிலும், பெண்டிற்கு முதற்கை கொடுக்கும் துணங்கைக் கூத்துகளிலும் வழக்கமாகக் காணப்படுகிற தலைவன் என்பதால் அவன் வீரனென்றும் தனக்குப் பொருத்தமானவன் என்றும் கருதும் தலைவி அவனை ‘மாண்டக் கோன்’ - என்று அழைக்கிறாள். வீரர்களம், நடனக்களம் இரண்டிலும் தலைவனின் இன்மை (absence) அவனுடைய இருத்தலை (presence) ஐ சொல்வதாக அமைவது இக்கவிதையின் சிறப்பு.
——
அக லயத்தை இழத்தல்
———
‘யானும் ஓராடு கள மகளே’ என தலைவி கூறுவதால் இக்கவிதையின் மைய உருவகமான நடனம், துணங்கைக் கூத்து, மேலும் துலக்கமாகிறது; தலைவன் அத்துணங்கைக்குத் த்லைக்கை கொடுத்தானென்பதையும் மேலும் புலப்படுத்துகிறது. பொ. வே. சோமசுந்தரனார் இங்ஙனம் ஆண்டுஞ் சென்று தேடுதலானே யானும் கூத்தாடும் களத்திற்குரிய மகளே ஆயினேன் எனப் பொருளுரைக்கிறார். தனக்கு வேறு மணம் செய்விக்க இருக்கும் பெற்றோருக்குத் தான் வேறொரு பொருத்தமான தலைவனோடு உறவில் இருப்பதாகத் தோழி வழி தலைவி தெரிவித்ததாகவும் இக்கவிதையை வாசிப்பதற்கு இடம் உண்டு. ‘கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த’ என தனது சங்கு வளையல்கள் நெகிழ்ந்து நழுவுமாறு எரியூட்டிய தாபத்தைத் தன்னில் வளர்த்த தலைவனை, அதுவும் பெருமை மிகு தலைவனை (பீடுகெழு குரிசிலுமோ) ஆடுகள மகளிரில் ஒருவளாகிய தான் காணவில்லை என்றது தலைவியின் அக லய இழப்பினைத் தெரிவிக்கிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட அகநானூற்றுப் பாடல்களில் ஆதிமந்தியார் பித்துற்று தன் தலைவனாகிய ஆட்டனத்தியத் தேடியதாக நாம் அறிகிறோம். ஆதிமந்தியாரின் பித்தின் ஆரம்ப நிலையான அக லய இழப்பினை இக்குறுந்தொகைப் பாடலில் நாம் அறிகிறோம். அகத்தின் லய இழப்பு நடனம் மைய உருவகமானதால் தெரிய வந்தது.
——-
No comments:
Post a Comment