குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-39
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவன் தலைவியிடம் கூறியது
இயற்றியவர்: செம்புலப் பெயனீரார்
குறுந்தொகையில் பாடல் எண்; 40
திணை: குறிஞ்சி
————-
யாயும் ஞாயும் யார் ஆகியரோ,
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி அறிதும்,
செம்புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
——-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்போது பிரிவின்றி இருக்கும் நானும் நீயும் ஒருவரையொருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? இம்மூன்றும் இல்லையாகவும், செம்மண் நிலத்தின் கண்ணே பெய்த மழை நீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைதல் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டன.
———-
யாய், ஞாய், தாய்
——
உ. வே. சா., யாய், ஞாய், தாய் என்னும் மூன்றும் முறையே என் தாய், நின் தாய், அவர் தாயென மூவிடத்தோடும் ஒட்டி வருவன. இம்மூன்றிடத்தும் ஒட்டப்பட்ட பெயர்கள் ஆறாம் வேற்றுமை முறையைக் குறித்து மேற் சொல்லியவாற்றால் தந்தை, நுந்தை, எந்தை எனவும், யாய், ஞாய், தாய் எனவும், தம்முன், நும்முன், எம்முன் எனவும், தம்பி, நும்பி, எம்பி எனவும் முதல்வனையும் ஈன்றாளையும் முன்பிறந்தானையும் பின்பிறந்தானையும் உணர்த்தும் என விளக்கமளிக்கிறார். பன்மைச் சொற்கள் (தொல்காப்பியம், எச்சவியல் 14) என்று தெய்வச்சிலையார் எழுதிய அரிய உரைப்பகுதியாலும் இது விளக்கம் பெறும்.
————
எண்ணத்தின் வேறுபாடு கண்டு தலைவன் கூறியது
———-
மிக அதிகமாகப் பொதுவெளியில் பேசப்பட்ட, பகிரப்பட்ட இப்பாடல் , ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ’ பாடலைப் போல தேய் வழக்காகிவிட்டது. இப்பாடலைப் பற்றி ஆனால் கவனிக்கப்படாத அம்சம், இந்தப்பாடலில் தலைவன் கூற்றின் சூழல் என்ன என்பதாகும். உ.வே.சா., இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர், தலைவன் தன்னைப் பிரிவானெனக் கருதி அஞ்சிய தலைவியின் எண்ணத்தின் வேறுபாடு கண்டு தலைவன் கூறியது எனக் கூற்றின் சூழலைத் தெளிவுபடுத்துகிறார். இரா. இராகவையங்கார் பெயல் மேலே வானத்தும் செம்புலம் கீழே தரையினும் வேறு வேறு இடங்களில் வேறு வேறாகவுளவேனும் இவை தாமாக இயைந்து ஒரே செந்நீர் ஆயினாற்போல வேறு வேறிடத்து ஒருவர்க்கொருவர் உறவில்லாது வேறுபட்டிருந்தும் தம் நெஞ்சங்கள் தாமாகக் கலந்து அன்பால் ஒன்றாயின என உரை எழுதுகிறார்.
———-
இணைவின் உருவகம்
———
“செந்நிற பூமியில் மழைநீர் பெய்து கலந்தது போல, / எங்கள் இதயங்கள் / அன்பால் நிரம்பி வழிகின்றன / ஒன்றாக இணைந்தன" என்ற பாடலின் வரிகள் அவர்களின் அன்பின் தன்மைக்கு தெளிவான உருவகத்தை அளிக்கிறது. மழைநீர் பூமியுடன் இணைவதாகிய சித்திரம், எல்லைகளை முழுமையாகக் கலைத்து, இரண்டு தனித்தனி நபர்களின் இணைவு, பிரிக்க முடியாத முழுமை ஆகியவற்றையும் குறிக்கிறது. இந்த உருவகம் அவர்களின் அன்பின் தீவிரத்தை விளக்குவது மட்டுமல்லாமல், அதற்கு இருக்கும் மனித வாழ்வை உருமாற்றும் சக்தியையும் சுட்டிக்காட்டுகிறது.
———
தனித்துவத்தைக் கொண்டாடுதல்
——-
பாடலின் ஆரம்பத்தில் உன் தாய்க்கும் என் தாய்க்கும் உறவில்லை, என் தந்தைக்கும் உன் தந்தைக்கும் உறவில்லை என்பதை கேள்விகளால் அடுக்கிச் சொல்லும் தலைவன்
குடும்ப அல்லது சமூக உறவுகள் இல்லாததை வலியுறுத்துவதன் மூலமும், இணைவு உருவகத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், தலைவன் தலைவி ஆகியோரின் தனித்துவத்தை இப்பாடல் கொண்டாடுவதாக நாம் வாசிக்கலாம். அவர்களின் காதல் வெளிப்புற சக்திகளின் விளைபொருளல்ல, மாறாக ஒரு சந்தர்ப்ப சந்திப்பிலிருந்து பிறந்த தன்னிச்சையான இணைவு. உண்மையான காதல் சமூக மரபுகள் குடும்ப எதிர்பார்ப்புகளைத் தாண்டி, தனிநபரின் சுய ஆளுமையை வெளிப்படுத்துவதாகவும் அத்தகைய சுய ஆளுமையே நம்பத்தக்கது எனவும் கவிதை அறிவுறுத்துகிறது.
——-
அறிதும் என்ற சொல் எதிர்காலம் இறந்தகாலப் பொருளில் வந்தது
——-
‘அறிதும்’ என்ற சொல்லைப் பற்றி உ. வே. சா எதிர்காலம் இறந்தகாலப் பொருளில் வந்ததாகக் குறிப்பிட பொ. வே. சோமசுந்தரனார் அதற்கு ‘எவ்வாறு அறிந்துள்ளோம்’ எனப் பொருளுரைக்கிறார்.
———
No comments:
Post a Comment