Saturday, May 18, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-34

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-34

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் சொன்னது

இயற்றியவர்: கழார்க்கீரன் எயிற்றியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 35

திணை:மருதம்

————-

நாண் இல மன்ற எம் கண்ணே, நாள் நேர்பு

சினைப்பசும் பாம்பின் சூன் முதிர்ப்பு அன்ன

கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ

நுண் உறை அழி துளி தலைஇய

தண்வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே.

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, தலைவன் பிரிந்த நாளில் உடம்பட்டு, பச்சைப் பாம்பினது கருவின் முதிர்ச்சியைப் போன்ற திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு

மலரும்படி நுண்ணிய மழை பொழிந்து அழிந்ததுளி பொருந்திய தண்ணிய வருதலையுடைய வாடைக்காற்றையுடைய கூதிர் காலத்தும் பிரிந்துறையும் தலைவன் பொருட்டு அழுதலால் எம்முடைய கண்கள் நிச்சயமாக நாணம் இல்லாதன.

————-

பச்சைப்பாம்பின் முதிர்ச்சியடைந்த கருவும் கரும்பின் அரும்பும்

———

இந்தப் பாடலில் வரும் ‘சினைப்பசும் பாம்பின் சூன் முதிர்ப்பு’ - பச்சைப்பாம்பின் முதிர்ச்சியடைந்த கரு கரும்பின் அரும்பிற்கு ஒப்பிடப்படுவதும் இரண்டும் தலைவியின் கண்ணீர்த்துளிக்கு உவமையாதலும் சிறப்பானதாகும்.  ஒன்று முதிர்ச்சியடைந்த கரு இன்னொன்று அரும்பு என்பதிலுள்ள பருவ வேறுபாடு கவனிக்கத்தக்கது. தலைவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றபோது, அவன் பிரிந்து செல்ல உடன்பட்டு அழாமல் இருந்தபோது அவளுடைய கண்ணீர்த்துளி எந்த நேரமும் சிந்தத்தயாராக, எந்த நேரமும் பிரசவமாகிவிடும் பாம்பின் முதிர்ச்சியடைந்த கரு போல இருந்தது; ஆனால் சிந்தவில்லை. ஆகவே அது கரும்பின் அரும்பிற்கு ஒப்பிடப்பட்டது. அரும்பியதும் சிந்தவில்லை.

———

தாமதமாக சிந்திய கண்ணீர்த் துளி

——-

அரும்பியதும் சிந்தாத கண்ணீர்த்துளி தாமதமாய்த் தலைவிக்கு சிந்துகிறது. கார்காலத்து மழை பெய்தபின் எஞ்சியிருக்கும் துளிகள் கூதிர்காலத்து வீழ்தல் போல என்பதை “நுண் உறை அழி துளி தலைஇய வாடை” என்று அவள் சொல்கிறாள். அதாவது தலைவன் பிரிந்து சென்றபோது அரும்பிச் சிந்தாமல் நின்ற கண்ணீர்த்துளிகள் இப்போது  பிரிவாற்றமையினால் சிந்துகின்றன. 

——-

உறை அழிதுளி வாடை

——

வாடைக்காற்றால் கரும்பின் பொதி அவிழ்தலைப் போல அதுவரை உறைந்திருந்த கண்ணீர்த்துளி இப்போது சிந்துகிறது என்று தலைவி “நீ அழுதது ஏன்” என வினவிய தோழியிடம் சொல்கிறாள். இத்க்கவிதையில் கவனிக்கத்தக்க இன்னொரு அழகான சொல் சேர்க்கை ‘நாள் நேர்பு’ ஆகும். இந்த நாள்தான் கண்ணீர்த்துளி சிந்துவதற்கு, நேர்வதான நாளாயிருக்கிறது. அபாரமான படிமங்களான பச்சைப்பாம்பின் கரு, கரும்பின் அரும்பு ஆகியன  அபாயம் சூல் கொண்டிருந்ததையும் இனிமை வருவதற்குக் காத்திருந்ததையும் ஒருங்கே சொல்கின்றன. ‘அழிதுளி’ என்ற பிரயோகமும் அபாரமானது. உ.வே.சா. அழிதுளி என்பதை அழிந்த துளி என்றும் பொ. வே. சோமசுந்தரனார்  அழிந்து விழும் துளி, இரா. இராகவையங்கார்  பெருந்துளி என்றும் விளக்கமளிக்கின்றனர்.  இரா. இராகவையங்கார்  பெருந்துளி என்று சொல்வதற்கு அத்துளி நாணமற்ற கண்களினால் சிந்தப்படுவது காரணமாகும். 

——

நாண் இல மன்ற எம் கண்ணே

————-

தொல்காப்பியம் இடையியல் சூத்திரம் 17, மன்ற என்ற சொல்லுக்கு மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் என்று சொல்கிறது. "கடவு ளாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே" என்ற நற்றிணையின்   34 ஆவது பாடலும் தேற்றம் என்பது ஈண்டு உறுதி செய்தலைக் கருதிற்று. தாமதமாகக் கண்ணீர்த்துளியை சிந்துகின்ற தலைவியின் கண்கள் நாணமற்றவை. 

இந்தக் கவிதையில் வாடைக்காற்று தலைவிக்கு துக்கத்தின் பூங்காற்றாக வீசுகிறது.  

——

No comments: