Sunday, May 12, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-28

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-28

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது

—-

இயற்றியவர்: ஒளவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 29

திணை: குறிஞ்சி

————-

நல்லுரையிகந்து புல்லுரை தாஅய்ப்

பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல

உள்ளத் தாங்கா வெள்ள நீந்தி

அரிதாவா வுற்றனை நெஞ்சே நன்றும்

பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு

மகவுடை மந்தி போல 

அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

நெஞ்சே, நல்ல உரைகள் நீங்கி, பயனற்ற உரைகள் பரவப்பெற்று, பெய்தலையுடைய மழையின் நீரை ஏற்றுக்கொண்ட பசு கலம் போல, சுடப்படாத பசுமண்ணாலாகிய பாண்டத்தைப் போல, உள்ளத்தினால் பொறுக்கமுடியாத ஆசை வெள்ளத்தில் நீந்தா நின்று பெறுதற்கரியதை பெறவிரும்பினை. உயர்ந்த மரக்கொம்பிலுள்ள குட்டியையுடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப்பெற்று அமைவது போல மனம் பொருந்த என் குறையைக் கேட்டு நிறைவேற்றுவோரைப் பெறுவாயாயின் உனது போராட்டம் மிகவும் பெருமையுடையது.

———-

நல்லுரையும் புல்லுரையும்- நெஞ்சும் உள்ளமும்

—————-

தலைவனும் தலைவியும் இரவு நேரத்தில் களவில் சந்தித்துக் கூடி மகிழும் இடம் இரவுக்குறி எனப்படும். தலைவனின் விருப்பத்திற்கு இணங்கி இரவுக்குறி நேரும் உரை நல்லுரை என்றும் தலைவனின் விருப்பத்தை மறுத்து வரைவு கடாயது புல்லுரை எனவும் அறியப்படும். இக்கவிதையில் தலைவியைத் திருமணம் செய்துகொள்ள நினையாது கூடுவதற்கு மட்டும் அவாவுற்ற அவன் தன் நெஞ்சிடம் பேசுகிறான். என்ன மாதிரியான அகம் நோக்கிய பேச்சு இது? பசுங்கலம் நீரைத் தாங்காமை, உள்ளம் ஆசை வெள்ளத்தைத் தாங்காமைக்கு உவமை. ஆகையால் தாங்க முடியாத ஆசைக்கும் மறுக்கப்பட்ட நிலைக்கும் இடையில் நெஞ்சில் நடக்கும் பூசலைப் பற்றியதாய் இக்கவிதை இருக்கிறது. உ.வே.சா இதற்கு நெஞ்சுக்கு உள்ளம் கூருதல் மரபு என்று உரை எழுதுகிறார். நெஞ்சம் உணர்ச்சியின் வெள்ளத்தால் நிரம்பித் ததும்புவதாகவும் உள்ளம் உண்மையைச் சொல்வதாகவும் நாம் விளங்கிக்கொள்ளலாம்.  நெஞ்சு அடிமனதையும் உள்ளம் அறிவின் பாற்பட்ட மேல் மனதையும் குறிப்பதாகும். 

———-

உயர் கோடு மகவுடை மந்தி

———

தலைவன் தனக்குத்தானே உயர்ந்த மரக்கொம்பிலுள்ள் குட்டியையுடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப்பெற்று இருப்பது போல , அகன் உற- மனம் பொருந்த, தழீஇ- என் கருத்தைத் தழுவிக்கொண்டு என் குறையைக் கேட்டு நிறைவேற்றுவாயின் உனது போராட்டம் பெருமையுடையது எனச் சொல்லிக்கொள்கிறாரன். உயர் கொம்பு மந்தி என்று சொன்னது உயரமான இடத்தில் இருக்கும் நோக்கம் நிறைவேறுமாயின் என்று பொருள்படும். இங்கே மேலான நோக்கம் என்பது அரிதாக அடையப்பட்ட தலைவியை , (அரிதாவா வுற்றனை), நெஞ்சம் கேட்பது போல அடையப் பெறுவதாகும். இரா. இராகவையங்கார் இதைத் தன்னைத் தழுவிய மகவைத் தான் தழுவி அணைத்து ஏறும் மந்தி போல என விளக்கமளிக்கிறார்.

———-

நீர் படு பசுங்கலம்

———-

நற்றிணை பாடல் 318 இலும்  ‘ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு’ என்ற வரி வருகிறது. சுடப்படாத பசுங்கலத்தில் மழைவெள்ளம் நிரம்பி வழிவது போல 

தலைவன் ஆசை வெள்ளத்தில் நீந்தா நிற்கிறான். ‘பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல’ - பெய்யும் மழைக்கு ஏற்ற பசுங்கலம் போல எனப் பொருள்படும். இதில் ‘நீர்க்கு’ என்பது ‘நீரை’ என இரண்டாவதன் பொருட் கண் வந்ததால் இதை வேற்றுமை மயக்கம் என திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் குறிக்கிறார். ஆசை வெள்ளத்தில் மூழ்குதல் இக்கவிதையின் மைய உருவகம்.  தாய் மந்தி தன் மகவை அணைத்துக்கொள்ளுதல் எனும் காட்சிப்படிமம் தலைவன் தன் மூழ்குதலில் இருந்து விடுபட்டு தன் விருப்ப நிறைவேற்றத்தை அடைவான் எனக் கொள்ளும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. 


நெஞ்சே, நின் பூசல் கேட்கப்படுமாயின் பெரிது. 


No comments: