Saturday, May 4, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-22

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-22

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி அகவன் மகளிடம் கூறியது

—-

இயற்றியவர்:  ஔவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 22

திணை:  பாலை

————-

அகவன் மகளே யகவன் மகளே

மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்

அகவன் மகளே பாடுக பாட்டை

இன்னும் பாடுக பாட்டே, அவர்

நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டுவிச்சியே, சங்கு மணியினாலாகிய கோவையைப் போன்ற  வெண்மையாகிய, நல்ல நீண்ட கூந்தலையுடைய அகவன் மகளே பாட்டுக்களைப் பாடுவாயாக, நீ பாடிய பாட்டுக்களுள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் புகழ்ந்து பாடிய பாட்டை மீண்டும் பாடுவாயாக. இவள்பால் அன்பு பூண்ட தலைவருடைய குன்றத்தைப் பாடின் இவளது வேறுபாடு நீங்கும்

—————-

ஓதுதல் போலத் திரும்பச் சொல்லுதல்

—————-

கவிதையின் தொடக்க வரி, "அகவன் மகளே யகவன் மகளே", ஒரு மந்திரம் போன்ற லயத்தைக் கொண்டு  பெண் மீது கவனத்தைக் குவிக்கிறது. திரும்பத் திரும்ப கூறுவது மொழியின் மீது பயன்படுத்தப்படும் தேர்ச்சியின் முதல் வடிவம்; இது கட்டமைக்கப்பட்ட அர்த்தத்தை விட மொழிக்கு முந்தைய, உடலின் இருப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. ‘அகவன் மகளே’ என்ற விளியை  உ. வே. சாமிநாதையர்  தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டவிச்சியே என்றும்   திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் வெறியாடும் மகளே என்றும் வேலனை அழைக்கும் மகளே என்றும் உரை எழுதுகின்றனர். இந்தக் கவனம் பெண்ணின் தலைமுடியைப் பற்றிய விவரிப்புடன் தொடர்கிறது.   ‘மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்’ - சங்குமணியினாலாகிய கோவையைப் போன்ற நல்ல நீண்ட கூந்த்லை உடைய  என அவளது கூந்தலைச் சொல்லி  முக்கியத்துவம் கொடுப்பது,  அவளுடைய தொன்மையையும் அதனால அவளுடைய சொல்லுக்கு இருக்கும் ஆதி வலுவையும் குறிப்பதாகிவிடுகிறது.

———-

பெண்ணின் உடலும் சொல்லும்

———

அகவன் மகளின் தலை முடி பற்றிய விவரிப்பால், அந்த முதிய பெண்ணின் பௌதீக  உடலில் தெய்வீக சக்தியைக் காண்பதற்கான  முகாந்திரம் நிறுவப்படுகிறது; ஆனால் அவள் பாட இருக்கும் சொல்லே அவளுடைய ஆதி சக்தியை வெளிப்படுத்தும் வல்லமை உடையதாகவும் கவிதை சொல்கிறது. பௌதீக உடல் குறியியல் தளத்திலும் (semiotic field) அவள் சொல் குறியீட்டுத்தளத்திலும் ( symbolic plane ) இயங்குவதாக கவிதை சொல்வதாக நாம் வாசிக்கலாம். குறியியல் தளத்திற்கும் குறியீட்டுத்தளத்திற்கும் இடையிலான பாலமாகவும் அவள் பாட்டு கருதப்படுவதாகவும் கவிதையை வாசிக்கலாம். எவா வில்டன், டி.வி.கோபாலய்யர் முதிய பெண்கள் தங்கள் கூந்தலை முடியும் வழக்கம் அப்போதில்லை எனவே அவள் கூந்தல் ‘மனவு’ என குறிப்பிடப்படுகிறது என விளக்கமளித்ததாகப் பதிவு செய்திருக்கிறார். 

——

குன்றம் பாடிய பாட்டு

———

தலைவியினுடைய காம நோயினை அறியாத தாயர் அவளிடத்தில் தோன்றியுள்ள வேறுபாட்டை அறிய அகவன் மகளாகிய கட்டுவிச்சியை அழைத்துக் கட்டுப்பார்ப்பது வழக்கம். கட்டுவச்சி முறத்தில் நெல்லையிட்டு அதனை எண்ணி அதனால் சில நிமித்தங்களை அறிந்து ‘இவள் முருகனால் அணங்கப்பட்டாள்’ என்று கூறுவாள். அது கேட்ட தாயர் வேலனை அழைத்து வெறியாட்டெடுப்பர். இந்த வழக்கத்தைப் பின்பற்றித் தோழி மும்முறை அகவன் மகளை விளித்து தான் கூறும் கூற்றின் உண்மையை கூர்ந்து அறியும் பொருட்டு பாடுக என்றாள். ஏற்கனவே குறிப்பிட்டது போல ‘மனவுக்கோப்பென்ன’ என்றது அவள் அணிந்த அணியையே அவள் கூந்தலுக்கு உவமை கூறியதால் அகவன் மகள் நரை மூதாட்டியென்பது பெறப்பட்டது.  மலைவாழ்சாதினளாகிய அகவன் மகள் தான் கண்ட மலைகளின் வளத்தைப் பாடுவது இயல்பாதலலில் அவள் மலைவளங்களைப் பாடுவாள்; தலைவனது ‘நன்னெடுங் குன்றத்தின்’ வளத்தைக் கேட்பதில் தலைவிக்கு பெருவிருப்பம் உளதால் அதை மீண்டும் பாடென்றாள். நன்னெடுங் குன்றம் எனும் நிலப்பகுதி தலைவனுக்கு பதிலீடாக இக்கவிதையில் நிற்பது இக்கவிதையின் சிறப்பு.  இக்கவிதையில் பேசுவதும் கேட்பது பெண்கள் எனினும் பேசப்பட, பாடப்பட இருப்பது, ஆண் என்பதும், அப்படிப் பேசப்பட இருப்பது விரும்பப்பட இருப்பதாகவும் அறியப்பட இருப்பதாகவும் சொல்வது மொழியும் ஆசையும் எப்படி குறியீட்டுத்தளத்தில் இயங்குகின்றன என்பதையும் நமக்குச்  சொல்கின்றன. 


No comments: