குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-33
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தோழி தலைவியிடம் கூறியது
—-
இயற்றியவர்: கொல்லிக் கண்ணனார்
குறுந்தொகையில் பாடல் எண்; 34
திணை:மருதம்
————-
ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர், தமியர் உறங்கும் கௌவையின்றாய், இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே, முனாஅது யானையங்குருகின் கானலம் பெருந்தோடு அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் குட்டுவன் மரந்தை அன்ன, எம் குழை விளங்கு ஆய் நுதல் கிழவனும் அவனே.
————-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
முன்னிடத்திலுள்ளதாகிய கடற்கரையிலுள்ள வண்டாழங் குருகின் பெரிய தொகுதியானது, பகைவரைக் கொன்ற வீரரது வென்று முழங்கும் முழக்கத்தினை அஞ்சுதற்கு இடமாகிய, குட்டுவனுக்குரிய மரந்தை என்னும் நகரைப் போன்ற பனிச்சை விளங்குகின்ற, அழகிய நெற்றிக்கு உரிமையுடையோனும், வரைவொடு வரும் அத்தலைவனேயாவான்; ஆதலின், வருத்ததிலிருந்து நீங்கி தெளியராகித் தலவனைப் பிரிந்து தனியாய் உறங்குகின்ற வருத்தம் இல்லாதவராய் இவ்வூரிலுள்ளோர் கூறும் இனியது கேட்டு இன்புறுவாயாக.
———-
யானையங்குருகு
———
மதுரைக்காஞ்சிக்கு (674 ) உரை எழுதிய நச்சினார்க்கினியரின் குறிப்பைப்பின்பற்றி உ.வே.சா. யானையங்குருகு என்பது வண்டாழங்குருகு என்று அடையாளப்படுத்துகிறார். திருப்பாவையில்(பாடல் 7) வரும் ஆனைச்சாத்தனென்னும் பறவையாகவும் இது இருக்கலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். அகநானூற்றுப்பாடல் 145 இல் குஞ்சரக் குரல குருகு என்ற பறவை குறிப்பிடப்படுகிறது. யானையைப் போன்ற குரலுடைய பறவை என அதற்குப் பொருள் ஆகையால் அது யானையங்குருகு என்று பெயர் பெற்றிருக்கவேண்டும். தொல்காப்பியம் இந்தப் பறவை என்றில்லாமல் அனைத்து பறவைகளையும் ‘புள்’ என்ற பொதுச் சொல்லால் குறிக்கிறது. யானைக்குருகை திருவோண நட்சத்திரத்திற்குரிய புள் எனவும் ஜோதிட நூல்கள் குறிக்கின்றன.
பறவைக்கூட்டத்தை தோடு எனக்குறிப்பிடும் வழக்கத்தை இப்பாடலில் வரும் ‘கானலம் பெருந்தோடு’ என்ற வரியும் வேறு குறுந்தொகைப் பாடல்களில் வருகிற “காக்காய்ச் செவ்வாய்ப் பைந்தோடு”, “அன்னத்து வெண்டோடு”, “இருந்தோடுப் புள்ளினம்” ஆகிய வரிகளாலும் அறியலாம்.
இந்தப் பாடலில் பகைவர்களை வென்று அவ்வெற்றிக்களிப்பினால் நகைத்து ஆராவாரித்து நடனமாடும் வீரர்களின் ஆர்ப்பிசை கேட்டு கடற்கரையில் பெருங்கூட்டமாகக் கூடியிருந்த யானையங்குருகுகள் அஞ்சுகின்றன.
அப்படிப் பறவைகளும் அஞ்சுகின்ற வீரர்கள் புழங்கும் நிலத்தைச் சேர்ந்த தலைவனும் பெரும் வீரன் என்பது பெறப்பட்டது. தொல்காப்பியம் புறத்திணை 12 ஆம் சூத்திரமான “தும்பைதானே நெய்தலது புறனே” என்பதற்கு உரை எழுதுகிற இளம்பூரணர் போருக்கு பெரிய வெளி வேண்டியிருப்பதால் காடும் மலையும் கழனியும் அதற்கு ஆகாதென்பதால் அந்நிலம் கடல் சார்ந்த இடமென்று அறியலாம் என விளக்கமளிக்கிறார்.
“குட்டுவன் மரந்தை அன்ன” என்ற வரியில் வரும் குட்டுவன் என்பது சேரர்களுக்குரிய பெயர். சேரன் செங்குட்டுவன் என்ற பெயராலும் இது அறியப்படும். மரந்தை என்பது மேலக்கடற்கரையிலுள்ள பண்டைய ஊர்.
——
எம்குழை விளங்கு ஆய் நுதல் கிழவன்
———-
தோழி எம் நுதல் (கண் வழி) கிழவன் என்று கூறினாலும் அவள் கூறியது தலைவியின் பார்வை வழி என்றே நாம் பொருள் கொள்ளவேண்டும். தலைவியின் உடல் உறுப்புகளைத் தன்னுடையதாகத் தோழி கூறுவதைப் புலனெறிவழக்காக தொல்காப்பியம் பொருளியல் சூத்திரம் 25 கூறுகிறது. மகளிர் தங்கள் குழல்களை வகுக்கும் ஐந்து பண்டைய முறைகளுள் பனிச்சையும் ஒன்று; குழல்களை எடுத்து முன்னுச்சியிலும் நெற்றியிலும் அமைத்துக்கொள்வது பனிச்சை ஆகும். தலைவியின் அழகிய நெற்றிக்கும் அதில் கிடக்கும் குழலுக்கும் உரிமையாளன் தலைவன் என்று இப்பாடல் சொல்கிறது. தலைவியின் உடலுக்கு உரிமையாளனாகத் தலைவனைக் குறிப்பிடுதல் சங்கக்கவிதைகள் பலவற்றிலும் வருகிறது. கலித்தொகை பாடல் 19 இல் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் அவள் குழலையும் கண்களையும் நுதலையும் நீவிச் சென்றான் ஆகையால் ‘குழல் விளங் காய்நுதற் கிழவன்’ என அப்பாடல் அந்த மென்செய்கையைக் குறிப்பிடுகிறது.
———
ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்
———
இப்பாடலில் உள்ள பல சொற்களுக்கு அறிஞர்களின் உரைகளில் மிகுந்த வேறுபாடு உள்ளன. ஓவலர் என்பதற்கு பொ. வே. சோமசுந்தரனார் தலைவியைவிட்டு நீங்காத செவிலி, நற்றாய் முதலியோர் எனவும் மறுப்ப என்பதற்கு உ. வே. சா. தோழியர் பல காரணங்கள் கூறி இங்ஙனம் வருந்துதல் தகாதென்று மறுத்துக் கூறியதாகவும், பொ. வே. சோமசுந்தரனார் களவில் கூடியது தேறாத தந்தை முதலியோர் தலைவனுக்கு மணம் மறுத்தனர் என்றும் முன்னர் மறுத்துப் பின்னர்த் தலைவனுடைய தகுதி கண்டு உடன்பட்டனர் என்றும் இப்பாடலுக்கு விளக்கம் எழுதியிருக்கின்றனர். இந்த வேறுபாடுகள் தலைவியினுடைய கூந்தலையும் அது புரளும் அழகிய நெற்றியைப் பற்றிய விளக்கங்களிலும் இல்லை.
தலைவன் விரைந்து வருவான் அவன் தலைவியைத் திருமணம் புரிந்துகொள்வான் என்று தலைவியைத் தோழி தேற்றியது இந்த அழகாக கவிதையின் உட்பொருள். அந்தப் பொருளை அஞ்சும் பறவைக்கூட்டத்தினுள்ளேயும் தலைவியின் நெற்றியில் புரளும் குழல்களுக்குள்ளேயும் இக்கவிதை ஒளித்து வைத்திருக்கிறது.
——-
No comments:
Post a Comment