Sunday, June 30, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-70

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-70

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தன் நெஞ்சிடம்  கூறியது

இயற்றியவர்: கருவூர் ஓதஞானியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 71

திணை: பாலை

————

மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே

அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப்

பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற்

கல்கெழு கானவர் நல்குறு மகளே

——-

நெஞ்சே, மார்பில் தோன்றிய சுணங்கினையும், அழகிய பருத்த இளமையுடைய முலையினையும், பெரிய தோளையும், நுண்ணியதாக இடையையும் உடைய, கற்களை உடைய காட்டையுடையவர் பெற்ற மகள், காமநோய்க்குப் பரிகாரம் வேண்டுமென்று நினைத்தால் எனக்கு மருந்தாவாள்; போகம் நுகரச் செல்வம் வேண்டுமென்று கருதினால் எனக்குச் செல்வமுமாவாள். 

———-

தோள் பெருத்தலும் இடை சிறுத்தலும்

——-

தோள் பெருத்தலும் இடை சிறுத்தலும் மகளிர்க்கு அழகு என இந்தப் பாட்டில் மட்டுமல்லாமல் பல சங்ககாலப்பாடல்களிலும் வாசிக்கக்கிடைக்கிறது. குறுந்தொகை 95 ஆவது பாடலில் வரும், ‘சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்’, என்ற வரியும் அகநானூற்றில்  374 ஆவது பாடலில் வரும் ‘பெருந்தோள் நுணுகிய நுகப்பின், திருந்திழை அரிவை’ என்ற வரியும் கலித்தொகை 108 ஆவது பாடலில் வரும் “ தோள்..எனப் பெருகி நுதல், அடி,  நுகப்பு என மூவழிச் சிறுகி” என்ற வரியும் இப்பாடலில் வரும் ‘பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற்’ என்ற வரியோடு சேர்த்து வாசிக்கத்தக்கவை.  பிணி நீங்க மருந்தாகும்  சுணங்கு என்பதற்கு அழகுத்தேமல் என்றொரு பொருளிருக்கிறது; இதைப் பெருங்கதையில் வரும் 

 "மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கின்" என்ற வரியால் அறியலாம்.  சுணங்கு என்பதற்கு  பசலை என்றும் பூந்தாது என்றும் பொன்னிறப் பருக்கள் என்றும் அர்த்தங்கள் இருக்கின்றன. தலைவியின் முலைகளில் இருக்கும் பூந்தாது போன்ற பொன்னிறப்பருக்களை தலைவன் அரும்பிய சுணங்கு என்றழைக்கிறான். 

——

அம்பகட்டு இள முலை

——

வனப்பும் பெருமையும் ஒருங்கே உடைய என்பான் அம் பகட்டு இள முலை என்றான் என பொ. வே. சோமசுந்தரனார் உரை எழுதுகிறார். 

தலைவன் தலைவியிடமிருந்து பிரிந்து செல்லுதலைத் தவிர்த்தல் செலவழுங்குதல் என அழைக்கப்படுகிறது. செலவு(பயணம்);  அழுங்கு (நிறுத்தம்) செலவழுங்குதல் - பொருள்வயின் பிரிந்து செல்லும் பயணத்தைத் தவிர்த்தல். இறையனார் அகப்பொருளுரை களவியல் சூத்திரம் 51 “தலைவன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது” என இத்தகைய பாடல்களில் வருவனவற்றைக் குறிக்கிறது.  உகாய்க்குடிக்கிழார் இயற்றிய குறுந்தொகைப் பாடல் 63-இலும் செலழுங்குதல் வருகிறது அங்கேயும் தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான். ஆனால் அங்கே தலைவன் நெஞ்ச்சொடு பேசுதல் தலைவியைப் பிரிந்து செல்வதற்கான முன்னோட்டமாய் இருக்கிறது; ஆனால் இந்தப்பாடலில் வைப்பெனின் வைப்பு என்ற சொற்கள் தலைவன் தலைவியை செல்வமாகவும் கருதுவதால் அவன் உண்மையிலேயே பொருளீட்டும் பொருட்டு தலைவியைப் பிரிந்து செல்லாமல் நிற்கிறான் என பொருள் தருகிறது. இதை மருந்தும் வைப்பும் இன்பமும் என்னும் இம்மூன்றும் சுணங்கையும் முலையையும் தோளையும் நுசுப்பையுங் கொண்டு எனக்குரிய மகளாக இயைந்திருக்க ஈண்டிருந்து துய்த்தல்விட்டுப் புறம் போவது எற்றுக்கென்று செலவு அழுங்கினான் என இரா. இராகவையங்கார் விளக்கமளிக்கிறார்.

———

மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே

——-

வைப்பு என்ற சொல்லுக்கு செல்வம், சேமநிதி ஆகிய அர்த்தங்கள் இருக்கின்றன. மருந்தே, வைப்பே ஆகியவற்றில் வரும் ஏகாரங்கள் தேற்றேகாரங்கள் ஆகும். தலைவியைப் பிரிந்தால் காமநோய்க்கு மருந்தில்லை, அம்மருந்தும் தேடிச்செல்லும் செல்வமும் இவளேயாகையால் தலைவன் செலவழுங்கினான். கானவர் நல்குறு மகளென்றது அனைத்தும் ஒரு பெயராய் நின்று முலை முதலியவற்றிற்கு தலைவன் கூறும் உறுப்பு நலன்களோடு இயைந்தது. 


மருந்து, வைப்பு, இன்பம் என மூன்றும் முலை, தோள், நுசுப்பாக

தலைவி மருந்து எனின் மருந்து, செல்வம் எனின் செல்வம்.

——


Friday, June 28, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-69

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-69

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தன் நெஞ்சிடம்  கூறியது

இயற்றியவர்: ஓரம்போகியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 70

திணை: குறிஞ்சி

————

ஒடுங்கீ ரோதி யொண் ணுதற் குறுமகள்

நறுந்தண் ணீர ளாரணங் கினளே

இணைய ளென்றவட் புனையள வறியேன்

சிலமெல் லியவே கிளவி

அணைமெல் லியள்யான் முயங்குங்காலே

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

நெஞ்சே, ஒடுங்கிய நெய்ப்பையுடைய கூந்தலையும் ஒளியுடைய  நெற்றியையும் உடைய இளையவளாகிய தலைவி, மணத்தையும் தண்மையையும் உடைய தன்மையினள். ஆயினும் பிரிந்த காலத்தில் பொறுத்தற்கரிய வருத்தத்தைத் தருபவள்; அவளை இத்தகையவளெனப் புனைந்துரைக்கும் எல்லையை அறியேன். அவளுடைய சொற்கள் சிலவாகவும், மென்மையுடையனவாகவும் இருக்கின்றன. அவளை நான் தழுவும்போது அவள் பஞ்சணையைப் போன்ற மென்மையை உடையவளாக இருக்கிறாள்.

——-

ஐம்புல இன்பங்களும் அதற்கு மேல் எல்லையற்று விரிதலும்

———

இப்பாடலில் தலைவன் தலைவியிடம் ஐம்புல இன்பங்களும் பெற்றதாக உரைக்கிறான். ஓதியும் ஒண்ணுதலும் கண்ணுக்கு இன்பம்; நறுந்தண் நீரள் முகர்தற்கு இன்பம்;  மெல்லிய கிளவி செவிக்கு இன்பம்; அணை மெல்லியளாதல் தொடுவதற்கு இன்பம்; முயங்குதல் குறிப்பால் சுவைக்கும் இன்பம். புனையப் புனைய தலைவனுக்குத் தலைவியைப் பற்றி மேலும் புனையத் தோன்றுவதால் இவ்வளவே என வரையறுத்து அவளை நிறுத்த இயலாமல் போவதால் புனையளவறியேன் என்றும் சொல்கிறான். இதனால்  தலைவி தலைவனுக்கு இந்தப்பாடலில் வெறும் நுகர்வு உடலாக இல்லாமல்  அதற்கு மேலுமானவளாக இருக்கிறாள்.  கிளவி சில் மெல்லிய என்று தலைவன் தலைவியின் சொற்களைப் பற்றிச் சொல்லும்போது அவை சின்மையும் மென்மையும் உடையன என்று சொல்கிறான். இதனால் தலைவி ஒரு ஆளாக, சொற்ப வார்த்தைகளை மென்மையாகப் பேசக்கூடிய குணங்களுடைய  நபராகத் தெரியவருகிறாள். இது இப்பாடலின் சிறப்பு.  அதனால் பாலியல் களமாக்கப்பட்ட உடலாக இல்லாமல் பெண்ணுடல் இப்பாடலில் நெருக்கத்தின் மென்மையை சித்தரிப்பதாக மாறுகிறது. 


1101 ஆவது திருக்குறளான, “ கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண் தொடி கண்ணே உள” இப்பாடலோடு இணைத்து வாசிக்கத்தக்கது. 

——

அணை போன்ற மென்மை

——

பஞ்சணை போன்ற மென்மை என்ற சித்தரிப்பு பல சங்க இலக்கியப்பிரதிகளிலும் வாசிக்கக் கிடைக்கிறது. அவற்றில் பெருங்கதையில் வரும் “அணைபுரை மென்மை யமைபடு பணைத்தோள்” என்ற வரியும் சீவகசிந்தாமணியில் வரும் “செம்பஞ்சியணையனைய வாடமைத் தோள்” என்ற வரியும் ஒப்புமைக்காக கவனிக்கத்தக்கன. 

—-

சொற்பொருள்

——

சில சொற்பொருள்களை இப்பாடலில் அறிந்துகொள்வது நல்லது. ஓதி- ஐவகைக் கூந்தல் பாகுபாட்டில் ஒன்றாகிய சுருள். ஈர் ஓதி- சீமந்த ரேகை பட நடுவில் பிரித்துவிடப்பட்ட கூந்தல், குறுமகள்- இளையவள். நீரள்- நீர்மையுடையவள். கிளவி- சொல். ஆரணங்கு- அவளன்றி வேறெதெனாலும் நீங்கற்கு அரிய வருத்தம்.

———



Thursday, June 27, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-68

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-68

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவனிடம் கூறியது

இயற்றியவர்: கடுந்தோட் கரவீரனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 69

திணை: குறிஞ்சி

————

கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றெனக்

கைம்மை யுய்யாக் காமர் மந்தி

கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி

ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்

சார னாட  நடுநாள்

வாரல் வாழியோ வருந்துதும் யாமே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

கரிய கண்ணையும் தாவுதலையுமுடைய ஆண்குரங்கு சாவினை அடைந்ததாக, கணவன் இல்லாததால் கைம்மை வாழ்வைப் பொறாத, கணவனால் விரும்பப்பட்டப் பெண்குரங்கு, மரமேறுதல் முதலிய தம் தொழிலை இன்னும் கற்றுக்கொள்ளாத வலிய குட்டியை சுற்றத்தாரிடத்து ஒப்படைத்துவிட்டு ஓங்கிய மலைப்பக்கத்தில் தாவி உயிரை மாய்த்துக்கொள்ளும். சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே நள்ளிரவில் வருவதைத் தவிர்ப்பாயாக. அப்படி நீ வந்தால் உனக்கு தீங்கு உண்டாகுமென்று எண்ணி நாம் வருந்துவோம். நீ தீங்கின்றி வாழ்வாயாக.

——

கைம்மை யுய்யாக் காமர் மந்தி

——-

இருள் நிறைந்த இடங்களிலும் தாவும் வல்லமையுடைய குரங்கும் தப்பி விழுந்து இறந்துபோகும் நள்ளிரவுப்பொழுது எனத் தலைவன் வரும் பொழுதின் தீமையை தோழி முதலில் சொல்கிறாள். தலைவன் நாட்டுச் சாரலில் விலங்குகள் கூட கைம்மையை ஏற்க இயலாமல் தம் உயிர் துறப்பதை ‘கைம்மை யுய்யாக் காமர் மந்தி’ எனக் குறிக்கிறாள். அப்படி உயிர் துறக்கும் நிலையிலும் தன் குட்டி இன்னும் மரமேறுதலைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பதால் அதை தன் சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டே உயிர்துறக்கும் என்பது அதன் தலைக்கற்பை உணர்த்துவதாக உ.வே.சா. எழுதுகிறார். தம் குட்டிகளுக்காக உயிர்வைத்து வாழும் பெண் விலங்குகளும் உண்டு என்று மேலும் எடுத்துச் சொல்லும் அவர் புறநானூற்றுப் பாடல் 23 இல் வரும் பின் வரும் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்:


“அறுமருப் பெழிற்கலை புகிப்பாற் பட்டெனச்

சிறுமதி தழீஇய தெறிநடை மடப்பினை

பூளை நீடிய வெருவரு பறத்தலை

வேளை வெண்பூக் கறிக்கும்

ஆளி லத்த மாகிய காடே”


பாய்ந்த மாத்திரத்தில் உயிர் போதற்குரிய உயரத்தையுடையது என்பதால் ‘ஓங்குவரை யடுக்கம்’ என்றாள். வல்ல குரங்கும் தப்பி வீழ்ந்து பெரும்பிறிதுற்றது என்றது எத்தனை பெரிய அபாயங்கள் இருக்கின்றன என்பதையும் சுட்டுகின்றன. தோழி சொல்லும் மந்தியின் கற்பு, அன்பு, கடமை ஆகியவை குறிப்புபொருள்கள் கொண்டவை. 

——

கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி

—-

தலைவனுக்கு இரவுக்குறி மறுக்கும் தோழி உன்னுடைய மலையகத்து வாழும் விலங்கான பெண்குரங்கு கூட பேரறிவோடு கல்லாத தன் குட்டியை முதலில் கிளை சேர்க்கும்போது இல்லறத்தை மறுத்து களவை நாடுவது உன் தகுதிக்கு தகாது என்று சொல்கிறாள். இப்படி செறிந்த நெறியை குரங்கை உவமையாகக் கொண்டு தலைவனுக்குத் தோழி சொல்வதால் திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் இதை இறைச்சி என அடையாளப்படுத்துகிறார். ஐங்குறுநூறு 272 ஆவது பாடலில் வரும் “ கருவிரல் மந்திக் கல்லா வன்பறள்” என்ற வரி ஒப்புமைக்காகக் கவனிக்கத்தக்கது.  பறள் என்ற சொல் குட்டியைக் குறிக்கும். 

—-

வாரல் வாழியோ வருந்துதும் யாமே

——-

வாரல் என்பது அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. தலைவனுக்கு ஏதும் வாராமல் இருத்தலை விரும்புகிறவளாகத் தோழி வாழியோ என்கிறாள். வாழியோவில் ஓகாரமும் யாமேயில் ஏகாரமும் அசைநிலைகள்.  கருவிழிக் குரங்கும் அதன் துணையும் இழப்பு, துக்கம் ஆகியவற்றின் குறியீடுகளாக இருப்பதால் அதை சமன் செய்து நற்சகுனம் உண்டாக்க தோழி தலைவனை வாழ்த்துகிறாள் என்றும் வாசிக்கலாம். உனக்குத் தீங்கு நேர்ந்தால் நாங்கள் வருந்துவோம் என்று சொல்கிறாள்.

 

நாடனே நீ நள்ளிரவில் வராதே, உனக்குத் தீங்கு நேர்ந்தால் நாங்கள் வருந்துவோம் நீ வாழ்க என்று தோழி தலைவனை வாழ்த்துகிறாள். 


Wednesday, June 26, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-66 —-

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-66

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: அள்ளூர் நன்முல்லையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 67

திணை: பாலை

————

உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை

வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்

புதுநா ணுழைப்பா நுதிமாண் வள்ளுகிர்ப்

பொலங்க வொருகா சேய்க்கும்

நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, வளைந்த அலகைக்கொண்ட கிளி, தன் அலகில் வைத்திருந்த வேம்பின் ஒள்ளிய பழமானது, புதிய பொற்கம்பியை ஊடுசெலுத்தும் பொற்கொல்லனது முனை மாட்சிமைப்பட்ட, கூரிய கைந்நகத்தைக் கொண்ட, பொன்னாபாரணத்திற்குரிய ஒரு காசை ஒத்திருக்கும், நிலம் கரிந்துள்ள, கள்ளியையுடைய பாலைநிலத்தைக் கடந்து சென்ற தலைவர் என்னை நினையாரோ? கிளியின் அலகுக்குக் கைவிரல் நகங்களும், வேப்பம்பழத்திற்கு பொற்காசும் உவமைகள்.

———

சிதறுண்ட கதையாடல்

——-

துண்டாடப்பட்ட நினைவாக, படிமங்களின் வரிசையாக இக்கவிதை விரிந்திருக்கிறது. ஒவ்வொரு வரியும் ஒரு ஒத்திசைவான கதையைச் சொல்வதற்கு பதிலாக தலைவியின்  உணர்ச்சி நிலைகளை துண்டு துண்டாகச் சொல்கிறது. வெயிலில் எரித்த நிலமும், முட்கள் நிறைந்த கள்ளிப்புதர்களும் தலைவன் கடந்து செல்லும் ஒரு கடுமையான, வறண்ட நிலப்பரப்பை உருவாக்குகின்றன.  வேம்பும் சுள்ளியும்  பாலை நிலக் கருப்பொருள்கள். அதற்கு நேரெதிராக 

கிளியின் அலகு வேம்பின் தங்க நிறப்  பழத்தை கவ்வியிருக்கிறது. இது நினைவு கவ்வப்பட்டிருப்பதன் படிமம். தலைவியின் துண்டு துண்டான உலகம் கிளியின் அலகு,  பொன் வேப்பம் பழம், பொற்கொல்லனின் கைவினை, கூர்மையான ஆணி போன்றவை உடலுக்கும் உடலுறவுக்கும் மறைமுக உவமைகளாகச் சொல்வதன் மூலம் காமத்தின் ஏக்கம் பீறிடுவதாக இக்கவிதை மாறுகிறது.   கிளியின் அலகு பழத்தைப் பிடிப்பது உடைமை ஆசை இரண்டையும் குறிக்கிறது, அதே நேரத்தில் பொற்கொல்லனின் நுட்பமான கைவினை அவளது உணர்வுகளின் சிக்கலான தன்மையையும் சுட்டுகிறது. 

———-

கிள்ளை வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்

——

கிளியின் வளைந்த அலகு வைத்திருந்த வேப்பம்பழம் என்பது வெளிப்படையான பாலியல் குறிப்பு கொண்டது. இரா. இராகவையங்கார்  வேப்பம்பழம் காசேய்க்கும் இந்நிலையிலும் காடு இறந்தோர் உள்ளார் கொல் என்றாள்;   வேம்பின் ஒண்பூ உதிர்தற்கு முன்னர் வருவம் என்றவர் பழநிலையினும் நினையார் என்பது கருத்து என உரை எழுதுகிறார்.  வேம்பின் ஒண் பூ (பழமல்ல) பிர சங்க இலக்கியப் பாடல்களிலும் வாசிக்கக் கிடைக்கிறது. குறுந்தொகை 24 ஆவது பாடலில்  ‘வேம்பின் ஒண் பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ’ என்றொரு வரியும்  ஐங்குறுநூறு 350 ஆவது பாடலில் ‘ வேம்பின் ஒண் பூ உறைப்பத் தேம்படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே’ என்றொரு வரியும் வருகின்றன. 


திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  கிள்ளை உணவின் பொருட்டு வாயில் கொண்ட வேப்பம்பழம் பொலங்கலக்காசுப் போல தோன்றும் காடு என்றதனானே, ஈட்டலைக் குறித்துக் கைக்கொண்ட இன்னாத பிரியும் அவர்க்கு இனிமை தருவதாயிற்று; அன்பின்மையும் என்பதாம் என்றெழுதி இதை இறைச்சி என அடையாளப்படுத்துகிறார். 

—-

புதுநா ணுழைப்பா நுதிமாண் வள்ளுகிர்ப் பொலங்க வொருகா சேய்க்கும்

———

பொலம் கலம் ஒரு காசு ஏய்க்கும் என்பது பொன்னாபரணத்திற்குரிய ஒரு காசை ஒத்திருக்கும் எனப் பொருள்பெறும். ஒருவகைப் பொற்காசு அந்தக் காலத்தில் உருண்டை வடிவமாகவும் இருந்தது என்பதை, “காசி னன்ன போதீன் கொன்றை”, “புன்கா லுகாஅய்க் காசினை யன்ன நளிகனி” என்ற குறுந்தொகை 148 ஆவது பாடலில் வரும் வரிகளாலும்,  நற்றிணை 276 ஆவது பாடலில் வரும் வரி, “பொன்செய் காசினோண் பழந்தாஅம் குமிழ்” என்ற வரியாலும் அறியலாம் என உ.வே.சா. எழுதுகிறார். பொன்னென்பது செய்யுளில்  பொலமென்றாகியது. பொலங்கென்றது காசு மாலையை.  காசைப் பற்றுதற்குரிய தகுதி கொண்டவனாய் தலைவன் இருப்பதால் அவனை தலைவி ‘நுதிமாண் வள்ளுகிர்’ என்கிறாள். உள்ளார் கொல் என்பது விடை எதிர்பார்க்காத கேள்வி. நினைத்தால் வந்திருப்பார், வந்திருக்கலாம் என்பதைச் சொல்வது. 


தோழி, காடிறந்தோர் உள்ளோர் கொல் என்று கேட்கிறாள்; தலைவன் என்னை மறந்துவிட்டான் போலும் என்பது அதனால் பெறப்படுகிறது. 

——-



 

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-67

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-67

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: அள்ளூர் நன்முல்லையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 68

திணை: குறிஞ்சி

————

பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின்

ஊழ்ப்படு முதுகா யுழையினங் கவரும்

அரும்பனி யச்சிரந் தீர்க்கும்

மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

குறும்பூழ்ப்பறவையின் காலைப் போன்ற செவ்விய காலையுடைய உழுந்தினது மிக முதிர்ந்த காய்களை மான்கூட்டங்கள் தின்னும்பொருட்டுக் கொள்ளும், பொறுத்தற்கரிய பனியையுடைய முன்பனிக்காலத்தால் உண்டாகும் துன்பத்தைப் போக்கும் பரிகாரம் என்னை மணந்த அவருடைய மார்பேயாகும், வேறு இல்லை.

——

அரும்பனி யச்சிரந் தீர்க்கும்

———-

முன்பனிக்காலத்தின் அழகான சித்திரமொன்று இக்கவிதையில் இருக்கிறது. இந்த குளிர்ந்த விடியற்காலை பனிமூட்டத்தில் என்ற மூன்றாவது வரி (அரும்பனி)  வெறும் வானிலை விவரிபபு மட்டுமல்ல, அது தலைவியின் தனிமையும் சோகமும கலந்த  உணர்வு நிலையின் அடையாளமுமாகும். அச்சிரம் என்பது முன்பனிக்காலம். இது அற்சிரம் என்றும் வழங்கும். தலைவனைப் பிரிந்து தலைவி முன்பனிக்காலத்தில் துன்புறுவதும் புலம்புவதும் பல அகப்பாடல்களில் வருகின்றன. 

———

பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின்

——-

உளுந்து பயறு போன்ற தானியங்கள் முன்பனிக்காலத்தில் முதிரக்கூடியவை. இப்பாடலில் முற்றிய உளுந்தினை மான்கள் மேய்வது தலைவியின் அக விழைவினைக் குறிப்பதாகிறது . அது

இயற்கையின் செழுமை அழகு ஆகியவற்றின் படிமமாக இருக்கிறது.  அருள், அப்பாவித்தனம் ஆகியவர்றின் சின்னங்களான மான்கள், வளம், ஊட்டச்சத்தின் அடையாளமான முற்றிய உளுந்துடன் ஒப்பிடப்படுகின்றன. உளுந்துச்செடியின் வேர்கள் மேலே தெரிய அவையோ பூழ்க்கால்களை ஒத்திருக்கின்றன. பூழ் என்பது குறும்பூழ் என்பதன் குறை; குறும்பூழ் என்பது காடைகளைக் குறிக்கும். செங்கால் உளுந்தென்றது உளுந்து செடியின் சிவப்பு நிற தண்டுகளைக்குறிக்கும். காடைகளை முற்றத்தில் மோதவிட்டு வேடிக்கைப் பார்க்கும் விளையாட்டுக்களைப் பற்றியும் அகப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது. இந்த பல்கூட்டான உவமைகள் இக்கவிதைக்கு வளம் சேர்ப்பது மட்டுமல்லாமல் பலதள அர்த்தங்களைத் தரக்கூடியனவாகவும் இருக்கின்றன. 

——

பனியும், உளுந்தும், காடையின் கால்களும், மான்களும்

——-

பனியை மார்பென்றதால் அது நோயாயிற்று என இரா. இராகவையங்கார் உரை எழுதுகிறார். விதைத்த உளுந்து பூப்பதற்கு முன் வருவேன் என்று கூறிப்போன தலைவன் உளுந்து முதிர்ந்து மான்களைக் கவரும் நிலை அடைந்த பின்னரும் வரவில்லை எனத் தலைவி வருந்துகிறாள். மானினம் முற்றிய உளுந்தினைக் கவரும் அற்சினம் (முன் பனிக்காலம்) என்றதனால் விலங்குகள் கூட தங்களுக்கு வேண்டிய நுகர்ச்சியை இனத்தோடு பெற்று மகிழ்ச்சியாய் இருக்கும் காலத்தில் தான் மட்டும் எவ்வகை நுகர்வின்பமும் இன்றித் தனியே இருக்கிறேன் என்று தலைவி குறிப்புகளால் உணர்த்துகிறாள். எனவே இதை திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் இறைச்சி என்று அழைக்கிறார். 

———

மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே

———

நினைவின் இடமாக உடலும்,ஆசையின் வாகனமாக மொழியும் அவை எதிரொலித்து அடங்கும் இடமாக மணந்த மார்பும் இருப்பதாக இக்கவிதை சொல்கிறது. மணந்த மார்பே என்பதிலுள்ள ஏகாரம் பிரிநிலையைக் காட்டி, நெஞ்சறி சுட்டாய் அம்மார்பு மருந்தாததலை முன்னமே அறிந்தேனே என்பதையும் சொல்கிறது. மருந்து பிறிதில்லை என்றது பிரிவின் துயர் உச்சமடைவதன் சமிக்ஞை; ஏக்கம் விரக்தியாய் பரிமாணம் பெறுவதன் வெளிப்பாடு. 


அச்சிரந்தீர்க்கும் மருந்து அவர் மணந்த மார்பே, பிறிதில்லை. அவர் உடன் இராமையால் இந்த முன்பனிக்காலம் எனக்குத் துன்பம் தருவதாயிற்று எனத் தலைவி கூறுகிறாள். 

——


Monday, June 24, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-65

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-65

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம் கூறியது

இயற்றியவர்: கோவர்த்தனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 66

திணை: முல்லை

————

மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை

கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய

பருவம் வாரா வளவை நெரிதரக்

கொம்புசேர் கொடியிண ரூழ்த்த

வம்ப மாரியைக் காரென மதித்தே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

கற்கள் நிறைந்த பாலை நிலத்தின் கடினமான பாதையைக் கடந்து சென்ற தலைவர் மீண்டும் வருவேனென்று சுட்டிக்கூறிய கார்ப்பருவம்  வாராத காலத்திலே பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழையை, கார் காலத்து மழையென்று கருதி நெருங்கும்படி சிறு கொம்புகளிற் சேர்ந்த ஒழுங்காகிய பூங்கொத்துக்கள் புறப்பட்டுவிட்டன. ஆதலின் பரந்த அடியை உடைய கொன்றை மரங்கள் நிச்சயமாகப் பேதைமையை உடையன.

———

வம்ப மாரியைக் காரென மதித்தல்

——-

கார் காலமோ எனத் தலைவியை சந்தேகப்பட வைத்த மழையை வம்ப மாரியென்றும் அந்த மழையைக் கார்காலத்தின் சமிக்ஞை என்று நம்பி பூத்துவிட்ட கொன்றைமரங்களை மடக் கொன்றை என்றும் தோழி இப்பாடலில் அழைக்கிறாள்.  பொய்யுரைக்கும் சமிக்ஞைகளைப் பற்றிய அறிவுரையை தலைவி இப்பாடலில் கேட்கிறாள்.  உம்பர்ட்டோ ஈக்கோ ஒரு சமிக்ஞை மற்றொன்றுக்காக நிற்பதை குறியியல் கவனம்குவித்துப் படிப்பதால், குறியியல் என்ற படிப்பையே பொய்களைப் பற்றிய கோட்பாடு என்று அழைத்ததை நாம் இங்கே நினைவில் கொள்வது நல்லது. தலைவனை மடையன் என்னாது தோழி கொன்றை, முல்லை, மஞ்ஞை முதலியவற்றை மடவ என்று குறித்து மொழி கிளவியாற் படைத்துக் கூறி ஆற்றுவித்தல் கவிமரபேயாம் என்று இராகவையங்கார் இதற்கு விளக்கமளிக்கிறார். 

காலம் தப்பிப் பெய்யும் மழையை வம்ப மாரி என்றது நல்ல ரசிக்கத்தக்க பெயரிடல். தொல்காப்பியம் தெய்வச்சிலையார் உரையில் வம்பு என்னும் உரிச்சொல் நிலையின்மைப்  பொருள் குறித்து வந்தது என்ற விளக்கம் இருக்கிறது. அதே பொருளில் புறநானூற்றுப் பாடலொன்றில் ‘வம்பப்பெரும்பெயல்’ என்றும் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்குற்றாலப் பதிகத்தில் ‘வம்பார் குன்றாம்’ என்ற பிரயோகங்களும் வருகின்றன. 

———

மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை

——

தடவு நிலை என்பதற்கு  பொ. வே. சோமசுந்தரனார் நிற்றலால் அடிமரத்தை ஆகுபெயரால் ‘நிலை’ என்றாள் என்றும், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  பெரிய நிலையினையுடைய கொன்றைகள் வளைந்த நிலையாம் என்றும் விளக்கமளிக்கின்றனர். பேதமையை மரஞ்செடிகொடிகள் மேல் ஏற்றிச் சொல்வதை பல பாடல்களில் நாம் வாசிக்கிறோம். குறுந்தொகை 94 ஆவது பாடலில் வரும்  ‘பெரும் தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே’ என்ற வரிகளும் குறுந்தொகை 251 ஆவது பாடலில் வரும்  ‘மடவ வாழி மஞ்ஞை மா இனம் கால மாரி பெய்தென அதன் எதிர் ஆலலும் ஆலின பிடவும் பூத்தன’ என்ற வரியும்,  நற்றிணை 99 ஆவது பாடலில் வரும் ‘பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின் மலர்ந்தன பலவே’ என்ற வரியும் சான்றுகளாகும். இப்பாடலில் வரும் ‘கொடி இணர் ஊழ்த்த’ என்ற வரி குறிப்பிடப்படும் கொன்றை சரக்கொன்றை என்பதை உணர்த்துகிறது. 

——

கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய

——

பொய்யானாலும், கார் பருவத்தின் மழையும், கொன்றையின் மலர்தலுமாக தலைவியின் வசிப்பிடம் இருக்கிறது. தலைவன் சென்ற பாலை வழியோ இதற்கு நேர் எதிர்மாறாக  கடினமான கற்களால் நிறைந்திருக்கிறது எனவே அவன் கூறியபடி உண்மையான கார்காலத்தில் வந்துவிடுவான் எனத் தோழி தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள். கல்பிறங்கு என்பதற்கு பாறைகள் நிறைந்த என்றும் அத்தம் என்பதற்கு பாலை என்று பொருளாகும்; அதற்கு அழிதல், முடிவு, நீங்குதல் ஆகிய அர்த்தங்களும் இருக்கின்றன. 

——- 


Saturday, June 22, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-64

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-64

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: கோவூர்கிழார்

குறுந்தொகையில் பாடல் எண்; 65

திணை: முல்லை

————

வன்பரற் றெள்ளல் பருகிய விரலைதன்

இன்புறு துணையொடு மறுவந் துகளத்

தான்வந் தன்றே தளிதரு தண்கார்

வாரா துறையுநர் வரனசைஇ

வருந்திநொந் துறைய விருந்திரோ வெனவே

——-

தோழி, வலிய கூழாங்கற்களுக்கு இடையே உள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான், இன்பத்தை நுகர்தற்குரிய தன்னுடைய பெண் மானோடு, களிப்பினாற் சுழன்று துள்ளி விளையாடா நிற்கவும், இங்கே வாராமல் சென்ற இடத்தே தங்கிய தலைவர், மீண்டு வருதலை விரும்பி மிக வருந்தி தங்கும் பொருட்டு உயிர் வைத்திருக்கிறாயா என்று கேட்பதற்காக மழைத்துளியைத் தருகிற தண்ணிய கார்ப்பருவம் வந்தது.

——-

கார்பருவத்தின் மழைத்துளி வினவியது

——

மான் தன் துணையோடு களிப்புடன் விளையாடி மகிழ்ந்திருக்க கார் பருவம் வந்த பின்பும் தம் தலைவன் வந்து சேர்ந்திலன் எனும் குறிப்பு இப்பாடலில் இருக்கிறது.  அதனால் கார்பருவம் வந்த பின்னரும் தான் உயிரோடு இருப்பது பிழை என்று தலைவி நினைப்பவளாதாலால் அதை கார் பருவத்தின் மழைத்துளி அவளை இன்னும் உயிரோடு இருக்கிறாயா என வினவுவதாகச் சொல்கிறாள். இனிமேலும் அவன் வரவில்லையென்றால் அவள் உயிர்வாழ்தல் அருமை என்பதும் மறைமுகமாகச் சொல்லப்படுகிறது. திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் தன் உரையில் இதை இறைச்சி என வகுக்கிறார்.  கார்பருவம் குறுந்தொகைப் பாடல்களில் வளமை, புத்தாக்கம், ஆகியவற்றின் குறியீடாக வருவது. அந்தப் பருவத்தில் மான்கள் களித்திருக்க, தலைவி தனித்திருக்க என்று எதிரெதிராக சொல்லப்படுவது இயற்கையின் பருவத்திலிருந்து  தலைவி அந்நியப்பட்டு இருப்பதன் துக்கமாகிறது. இது முல்லைத் திணைப் பாடல்களின் காணக்கூடிய பொது அம்சமாகும். மழைத்துளி தலைவியை வினவியதாகக்கூறுவது அழகிய கற்பனையும் கூட.

——-

கார்பருவத்தில் இரலையும் துணையும் இணைந்திருத்தல்

——-

கார்பருவத்தில் மான் (இரலை) தன் துணையோடு இணைந்திருத்தல் பற்றிப் பல  குறுந்தொகைப் பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.  அவை அனைத்தையும் இங்கே விரிவஞ்சி குறிப்பதைத் தவித்திருக்கிறேன். முல்லைப்பாட்டில் வரும் ‘திரிமருப் பிரலையொடு மடமானுகள எதிர் செல் வெண்மழை பொழியுந் திங்களின்” என்ற வரிகள்  கவனிக்கத்தக்கவை.  அது போலவே பெருங்கதையில் வரும் “ கார்வளம் பழுனிக் கவினிய கானத்து … சிறுபிணை தழீஇய திரிமருப் பிரலை”  என்ற வரியும்  முக்கியமானது. மிருகங்கள் எப்போதுமே இலக்கியத்தில் மனிதர்களை குறிப்புணர்த்தும் விதத்திலேயே வருகின்றனவன்றி மிருகங்களாக பட்டும் இருப்பதில்லை. இப்பாடல் தோழியை நோக்கி தலைவி கூற்றாக அடையாளப்படுத்தப்பட்டாலும் தனக்குள்ளாகவே அவள் பேசிக்கொள்வது போன்ற தொனியைக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.  

——-

வருந்தி நொந்துறைதல்

——

இயற்கையோடு ஒத்திசைந்த வாழ்வும் அந்ததந்த பருவத்திற்கேற்ற வாழ்வு முறையும் இருந்தது என்பதை இப்பாடல் புலப்படுத்துவதால் இதை முக்கியமான பாடலாகக் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

வருந்தி நொந்து உறைய இருந்திரோ என்பதற்கு என்பதற்கு மிக வருந்தித் தங்கும் பொருட்டு உயிர் வைத்துக் கொண்டிருந்தீரோ என கேட்பதாகப் பொருள்படும். ஓகாரம் வினாவைக் குறிக்கும். வரல் நசைஇ- என்பதில் நசைஇ – சொல்லிசை அளபெடை.

——

 

Friday, June 21, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-63

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-63

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: கருவூர்க் கதப்பிள்ளை

குறுந்தொகையில் பாடல் எண்; 64

திணை: முல்லை

————

பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்

புன்றலை மன்ற நோக்கி மாலை

மடக்கட் குழவி யணவந் தன்ன

நோயே மாகுத லறிந்தும்

சேயர் தோழி சேய்நாட்டாரே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, பல பசுக்கள், நெடிய வழியின் கண் நீங்கிச்சென்றனவாக, அவை தங்கியிருத்தற்குரிய புல்லிய இடத்தையுடைய மன்றத்தைப் பார்த்து மாலைக்காலத்தில், மடப்பம் பொருந்திய கண்ணையுடைய கன்றுகள் தலையெடுத்துப் பார்த்து வருந்தினாற் போன்ற தம் வரவு நோக்கிய துன்பத்தையுடையமாதலை அறிந்திருந்தும் நெடுதூரத்தேயுள்ள காட்டுக்குச் சென்ற தலைவர் இன்னும் நெடுதூரத்திலேயுள்ளார்.

——-

புன்றலை மன்ற நோக்கி

——-

இப்பாடலில் சட்டகப்படுத்துதல்  (Framing) தலைவி தோழியிடம் கூறுவதாக இருக்கிறது; பிரிவாற்றாமையில் வாடியிருக்கும் தலைவியைப் பார்த்து தோழி ‘அவர் நின் துன்பத்தை அறிந்திரார்’ என்று சொல்ல அதற்கு பதிலாக ‘அறிந்தும் இன்னும் சேயராயினார்” என்று தலைவி இப்பாடலில் தலைவி தோழிக்கு பதிலுரைக்கிறாள். இதைச் சொல்வதற்கு தலைவி பயன்படுத்தும் உவமை  “பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப் புன்றலை மன்ற நோக்கிய’ கன்றுகள் என்பதாகும். பசுக்களின் இன்மையில் பொலிவிழந்த இடம் புன்றலை ஆகும்; மன்றம் என்பது தொழுவத்தைக் குறித்ததாகும். மேயச்சென்ற பசுக்கள் மாலையில் திரும்பி வருவதை எதிர்நோக்கி தொழுவத்தை கன்றுகள் பார்த்து இருப்பதை தலைவி தன்னுடைய நிலைக்கு உவமையாகக் கூறுகிறாள்.

———

தாய் சேய் அன்பு

——

தாய்ப்பசுவிற்கும் கன்றுக்கும் உள்ள அன்பு தலைவன் தலைவிக்கு இடையிலுள்ள அன்பாக உவமிக்கப்படுவது தமிழ்க் கவிதா மரபுகளில் ஒன்றாகும். அகநானூற்றுப் பாடல் ஒன்றில் “பண்பில் கோவலர் தாய்பிரிதியாதத நெஞ்சமர் குழவி போல நொந்துநொந் தினா மொழிது மென்ப’ என்று தலைவியின் அன்புக்கும், கம்பராமாயணத்தில் குகப்படலத்தில் ‘கன்றுபிரி காராவின் றுயருடைய கொடி’  என்று தாயன்புக்கும், திருவாசகத்தில், ‘காற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே” என்று அடியாரது இறை அன்புக்கும் உவமையாக வருதலை வாசிக்கலாம்.  இப்பாடலில் கன்றுகள் பசுக்களை (எதிர்) நோக்கி, தொழுவத்தைப் பார்த்து ஏங்குகின்றன என்பதில் நோக்குதலின் தூரம் ஏக்கம் ஏற்படுத்திய உணர்வு, உடல் இடைவெளியாகச் சிறப்பு பெறுகிறது. . இப்படி நோக்குதல் உருவாக்குவதை குறியீட்டு களம் எனக் குறியியல் அறிஞர்கள் அழைப்பார்கள். (பார்க்க: Silverman, Kaja. The Subject of Semiotics. Oxford University Press, 1983.)

——

மடக்கண்ணும் மாலை நேரமும்

———

மாலை நேரத்தின் காதல்  மன அலைவுறுதல் இப்பாடலிலும் சொல்லப்படுகிறது.  அந்தியில் தொழுவத்தில் இருள் கவிய அதை மடக்கண்ணுடன் (மன்ற நோக்கி மாலை மடக்கட் குழவி) கன்றுகள் பார்த்து நிற்பது காதல் ஏக்கத்தின் கள்ளமின்மை, மென்நிலை ஆகியவற்றையும் சொல்கின்றன. மடக் கண் குழவி என்பதற்கு  பொ. வே. சோமசுந்தரனார்  மடப்பம் பொருந்திய கண்ணையுடைய கன்றுகள் என்றும் திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் அறியாமையைப் புலனாக்கும் கண்ணையுடைய கன்றுகள் என்றும் உ.வே.சா மென்மை பொருந்திய கண்களுடைய க்ன்றுகள் என்றும் உரை எழுதுகின்றனர். 

———


Thursday, June 20, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-62

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-62

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது

இயற்றியவர்: உகாய்க்குடிகிழார்

குறுந்தொகையில் பாடல் எண்; 63

திணை: பாலை

————

ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்

செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்

கம்மா வரிவையும் வருமோ

எம்மை யுய்த்தியோ வுரைதிசி னெஞ்சே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

நெஞ்சே, இரவலர்க்குக் கொடுத்தலும், இன்பங்களை அனுபவித்தலும் பொருளில்லாத வறியவர்க்கு இல்லையென்று கருதி பொருள் செய்தற்குரிய செயல்களை மிகவும் எண்ணாது நின்றாய். அச்செயல் செய்தார்குத் துணையாக அழகிய மாமைநிறத்தையுடைய தலைவியும் வருவாளோ? எம்மை மட்டும் செலுத்துகின்றாயோ, சொல்லுவாயாக.

——

ஈதலுந் துய்த்தலும்

——-

திருக்குறள் 85, “விருந்தோம்பி மிச்சின் மிசைவான்” என்று கூறுவதற்கு ஏற்ப ஈந்து எஞ்சியவற்றை துய்த்தலே இவ்வாழ்வின் கடப்பாடு ஆதலால் ஈதலும் என்பதை முதலில் சொல்லி அதன் பின்பு தலைவன் துய்த்தலும் என்பதை அடுத்துச் சொல்கிறான். பொருள் தேட வேண்டுமென்று துணிந்த நெஞ்சிடம் ‘பிரிவது அரிது’ என தன் நெஞ்சிடம் சொல்கின்ற தலைவன் ஈதலை முதலில் சொல்லியது கவனிக்கத் தக்கது. 

கம்மா வரிவையும் வருமோ

——-

நெஞ்சே நீ பொருள் ஈட்டுவதற்காக வேற்று நாட்டுக்குப் போக எண்ணுகிறாய்; அங்கே இத்லைவி வருவாளோ? அவள் வராவிட்டால் நான் மட்டும் போக வேண்டும்; இவளைப் பிரிந்து நான் செல்ல இயலாதே எனத் தலைவன் கவலைப்படுகிறான். இப்படி அழுங்கியது செல்லாமலே இருப்பதற்காக அல்ல என்று உரை எழுதும் உ.வே.சா. தன் மனதிலுள்ள பேரன்பைப் புலப்படுத்தி ஒருவகையாக இவளை சமாதானப்படுத்தி பின் பிரிவதே தலைவனின் கருத்து என்று விளக்கமளிக்கிறார். இதற்கு தொல்காப்பியம் கற்பியலில் வரும் 44 ஆவது சூத்திரம் “ செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே, வன்புறை குறித்தவிர்ச்சி யாகும” என்பதையும் அவர் ஆதாரமாகச் சுட்டுகிறார். தலைவன் தலைவியைப் பிரிய முடியாதே என்று இப்பாடலில் வருந்துவது உண்மையில் பிரிவதற்கே என்பது ஆச்சரியமான மொழிபும் முரணும் ஆகும். ‘கம்மா வரிவையும் வருமோ’ - அழகிய மாமை நிறத்தையுடைய தலைவியும் வருவாளா என்று கேட்பதும் அவள் வரமாட்டாள் என்பதை சொல்வதற்குத்தான். 

இரா. இராகவையங்கார் மட்டும்  அவனுடன் வாராதொழியின் அவள் மாமை சிதையும் என்பது கருதி அம் மா அரிவை என்றான் என விளக்கமளித்திருக்கிறார். 

———

உரைத்திசின் நெஞ்சே

——-

‘கைம்மிக எண்ணுதி’- நீ அதிகமாக அதைப் பற்றிச் சிந்தித்து சொல்வாயாக என்று சொல்லும் தலைவன் இல்லோர்க்கு இல்லென என்று குறிப்பால் செய்வினை என்பது பொருள்செய்வினையைச் சுட்டியது கவனிக்கத்தக்கது. உரைத்திசின் என்பதைல் வரும் ‘சின்’ முன்னிலையோசை. 

———- 

இல்லோர்க்கு துய்த்தலும்  ஈதலும் இல்லை 

———

இல்லோர்க்கு ஈதல் இல்லை என்பதை “இருள்படு நெஞ்சத் திடுமை தீர்க்கும் அருணன் குடைய ராயினு மீதல், பொருளில் லோர்க் அஃதியையா தாகுதல் , யானு மறிவென் மன்னே” என்ற அகநானூற்றுப் பாடல் வரியாலும் அறியலாம். 


இல்லோர்க்குத் துய்த்தல் இல்லை என்று சிறுபாணார்றுப்படை வரும் ‘வறியாரிருமை அறியார்” என்ற வரி சொல்கிறது.


இல்லோர்க்கு ஈதலும் துய்த்தலும் இல்லை என்பதை நற்றிணையில் வரும் ‘இசையு மின்பமு மீதலு மூன்றும், அசைவுடனிருந்தோர்க் கரும்புணர் வின்மென” என்ற வரியாலும் அறியலாம்.

——



Wednesday, June 19, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-61

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-61

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது

இயற்றியவர்: சிறைக்குடி ஆந்தையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 62

திணை: குறிஞ்சி

————

கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை

நாறிதழ்க் குவளையோ டிடைப்பட விரைஇ

ஐதுதொடை மாண்ட கோதை போல

நறிய நல்லோண் மேனி

முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

காந்தள் மலரையும் தோற்றிய முல்லை அரும்பிலிருந்து உண்டாகிய செவ்வி மலர்களாகிய முல்லைப் பூக்களையும் மணக்கின்ற இதழ்களை உடைய குவளை மலர்களோடு இடையிடையே பொருந்தும்படி கலந்து அழகியதாகத் தொடுத்தல் மாட்சிமைப்பட்ட மாலையைப் போல நறுமணத்தையுடைய தலைவியின் மேனியானது தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது; முயங்குவதற்கும் இனியது.

——

ஐதுதொடை மாண்ட கோதை போல

——

தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியதாக இருக்கும் இப்பாடலில் அழகியதாகத் தொடுக்கப்பட்ட மாட்சிமைப்பட்ட மாலையைப் போல (ஐதுதொடை மாண்ட கோதை போல) எனத் தலைவி வருணிக்கப்படுகிறாள். இப்படி வருணிக்கப்படுவதை இரண்டு வகையாக வாசிக்கலாம்: துய்க்கப்பட்ட பெண்ணின் உடலாக,  குரலற்ற, ஆளுமைத் திறனற்ற, செயலூக்கதிற்கான எந்த ஆற்றலுமற்ற, ஆணின் கற்பனையில் தங்கிய  பெண்ணுடலாக இக்கவிதையில் இல்லாத தலைவியை தலைவன் வருணிப்பதாக வாசிப்பது ஒரு முறை. பெண்ணுடல் மலர்களின் ஒப்பீட்டினால் எப்படி காமப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுகிறது என்று வாசிப்பது இன்னொரு முறை. முதல் முறையானது வெளிப்படையாகத் தெரிவது, கவிதையை வாசித்தவுடனேயே சமகால வாசகனுக்குப் புலப்பட்டுவிடுவது. இரண்டாவது முறை காமப்படுத்துதலுக்கு எந்தவகை மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ள என்பதை கவனிப்பது.

இப்பாடலில் காந்தள் மலர்களும் முல்லை அரும்புகளும், குவளை மலர்களும் சேர்ந்து கட்டிய மாலையாகத் தலைவி தலைவன் மனதில் இருத்தப்படுகிறாள். 

—— 

காந்தள் மலர்கள்

——

செங்கோடல் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகிற காந்தள் மலர்களை முருகக்கடவுளுக்கு உரியதாக புறப்பொருள் வெண்பா மாலை சிறப்பித்துக் கூறுகிறது. தொல்காப்பியம் பொருளதிகாரம் 80 ஆவது சூத்திரம் காந்தள் மலரணிந்து வேலன் வெறியாடுவதைச் சொல்கிறது. நாலடியாரில் 283 ஆவது பாடல், கல்லாலே கிளிகளை ஓட்டுதற்கு இடமான காடுகள் சூழ்ந்த நாட்டை உடைய வேந்தனே, பெரிய கற்களையுடைய மலையின் மேல் காந்தள் மலர்கள் மலராதபோது, சிவந்த புள்ளிகளையுடைய வண்டினங்கள் அங்கே போகமாட்டா. அவ்வாறே பொருள் இல்லாதவர்க்கு உறவினர் இல்லை என்று சொல்கிறது. 


இவையனைத்தையும் கூட்டி பொருள் கொள்ளும்போது காந்தள் மலர் தலைவியின் உடல் உண்டாக்கும் பெரும் கவர்ச்சிக்கும், பேராவேசக் காதலுக்கும் இக்கவிதையில் குறியீடாவதாக வாசிக்கலாம்.

——

முல்லை அரும்புகள்

——-

சீவகசிந்தாமணியில் வரும் 686 ஆவது வரி  "தானுடை முல்லை யெல்லாந் தாதுகப் பறித்திட்டானே”,  முல்லை என்பதற்கு கற்பு என்ற பொருளை ஏற்றிருக்கிறது. புறப்பொருள் வெண்பா மாலையில்  9 ஆவது பாடலில் வரும் "முல்லைத்தார்ச் செம்பியன்”, முல்லை என்பதற்கு வெற்றி என்று பொருள் தருகிறது. சிலப்பதிகாரப் பதச்சேர்க்கை (17: பாடல் 3) ‘முல்லைக்குழல் பார்க்க’ என்பது முல்லைக்குப் பொருள் மென்மை என்கிறது. முல்லை இப்பாடலில் அரும்பாகையால் அது இன்னும் மென்மையாக இருக்கிறது. தவிர, திணைப்பகுப்பில் முல்லை காடும் காடு சார்ந்த இடமும் ஆகும்.  காந்தள் போல வெறியேறும் காதலைத் தூண்டுகிற தலைவி முல்லை போல மென்மையானவளாகவும், காட்டியில்புடையவளாகவும்.  கற்புடையவளாகவும், வெற்றியைத் தருபவளாகவும் இருக்கிறாள் என்ற அர்த்த அடுக்கு சேர்கிறது.

——

குவளை மலர்கள்

—-

"குவளை... கொடிச்சி கண்போன் மலர்தலும்"  என்ற ஐங்குறுநூற்றின் 299 ஆவது பாடல் வரியும்,   "விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை” என்ற  சீவகசிந்தாமணி வரியும், "நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் நுதலிய செய்குறியீட்டம்"  என்ற பரிபாடல் வரியும் குவளையை மகிழ்ச்சியின் மலர்தலின் குறியீடாக்குகின்றன. 


இப்பாடலில் வரும் முயங்குதலுறுத்தல் மெய்யுறு புணர்ச்சியாகும். தொல்காப்பியம் அகத்திணையியல் களவியல் சூத்திரம் 6 தலைவனின் இம்மாதிரியான கூற்றுகளை புணர்ந்துழி மகிழ்ந்து கூறியது என வகைப்படுத்துகிறது. 

—-


Tuesday, June 18, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-60

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-60

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி கூற்று

இயற்றியவர்: தும்பிசேர் கீரனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 61

திணை: மருதம்

————

தச்சன் செய்த சிறுமா வையம்

ஊர்ந்தின் புறாஅ ராயினுங் கையின்

ஈர்த்தின் புறூஉ மிளையோர் போல

உற்றின் புறேஎ மாயினு நற்றேர்ப்

பொய்கை யூரன் கேண்மை

செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தச்சனாற் செய்யப்பட்ட சிறிய குதிரை பூட்டிய வண்டியை ஏறிச் செலுத்தி இன்பமடையாராயினும், கையால் இழுத்து இன்புறும் இளையோரைப் போல மெய்யுற்று இன்பமடையேமாயினும் நல்ல தேர்களையும் பொய்கையையுமுடைய ஊர்க்குத் தலைவனது நட்பை மென்மேலும் பெருகச் செய்து இன்பமடைந்தோம். அதனால் வளைகள் கழலாமல் இறுகியமைந்தன.

———

இப்பாடலின் சூழல்

——-

இப்பாடலுக்கு உரிய சூழலாக பரத்தையின் பொருட்டு பிரிந்த தலைவனுக்கு தூதாக வந்த பாணர் முதலியோரை நோக்கி வாயில் மறுத்து தோழி கூறியதாக உ.வே.சா குறிப்பிடுகிறார். தலைவன் இங்கே வந்து இன்புற்று இருக்காவிடினும் அவனது நட்பை மனதால் நினைத்து அமைதியாகத் தலைவி இருப்பதால் அவள் வளையல்கள் நெகிழாமல் செறிந்திருக்கின்றன. ஆகையால் தலைவன் வந்து செய்யும் குறை ஏதுமற்று இருக்கிறது எனத் தோழி வாயில் மறுக்கிறாள்.

——

உள்ளப் புணர்ச்சி

—-

இப்பாடல் அங்கதமாக உள்ளப்புணர்ச்சியாலேயே தலைவி திருப்தியுற்றிருக்கிறாள் என்று கூறுகிறது. திருக்குறள் 785 “புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான், நட்பாங் கிழமை தரும்” என்று கூறுவது போல தலைவியின் நடப்பார்ந்த உள்ளப்புணர்ச்சியே புணர்ச்சிக்குரிய பயனாகிய வளை செறிதலை உண்டாக்குவதாக இருக்கிறது. 


இதை மேலும் விளக்குகிற உ.வே.சா. விளையாட்டுத் தேரை இழுத்து இன்புறும் பருவம் கடந்து மெய்த்தேரை ஊர்ந்து இன்புறுவார் போல களவுக்காலம் முடிந்து மெய்யுறு புணர்ச்சியை இடையீடில்லாமற் பெறுதற்குரிய கற்பு காலத்தில் யாம் சிறாரைப் போலக் களவுக்குரிய உள்ளப்புணர்ச்சியையே உடையவர்களானோம் என்ற குறிப்பும் பெறப்படும் என்று எழுதுகிறார். 

—-

பொய்கை யூரன் கேண்மை

——

நற்றேர்ப் பொய்கை ஊரன் என்றது, தலைவன் தன் தேரில் ஏறிப் பரத்தையருடன் பொய்கை நீராடுவான் என்று தோழி அறிந்ததைக் குறித்தது. இரா. இராகவையங்கார்  பொய்கை ஊரன் என்றது எல்லோரும் தோயும் நீர்நிலை போல வரையாது தோயப்படுவான் எனக் குறித்ததாம் என மேலும் விளக்கமளிக்கிறார். கேண்மை என்பது நெஞ்சற் பயின்ற நட்பு எனப் பொருள்படும் அதுவே உள்ளப்புணர்ச்சியாக விரிகிறது.

——-  

தச்சன் செய்த சிறுமா வையம் ஊர்ந்தின்

——

தச்சன் செய்தவை மாவும் வையமுமாகிய இரண்டும் ஆகும். சிறுமா என்பது சிறு வையமாகும். நற்றேரையுடைய ஊரனைப் பற்றி சொல்லப்புகுவாள் அத்தேரோடு தொடர்புடைய உவமையைக் கூறினாள். 


இளையோர் பெரியோர் ஊரும் பெருந்தேரை ஊர்ந்து இன்புறாவிடினும் அத்தேரை நினைத்து பண்ணிய சிறு தேரை ஈர்த்து அப்பெரியோர் அடையும் இன்பத்தைப் பெறுவது போல பரத்தையர் பெறும் மெய்யுறுபுணர்ச்சியை அதன் இன்பத்தை தலவனை நினைத்து உள்ளப்புணர்ச்சியால் பரத்தையர் பெற்ற அதே இன்பத்தை யாமும் பெற்றோம் எனத் தலைவியைப் பற்றி தோழி கூறுகிறாள். தேரோட்டி விளையாடுதல் என்பது மெய்யுறுபுணர்ச்சிக்கும், உள்ளப்புணர்ச்சிக்கும் உவமையாகிறது. 


இளையோர் சிறு தேரை இழுத்து விளையாடுவது என்பது பட்டினப்பாலையில் ‘பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும் முக்காற் சிறுதேர்”, என்றும்  மணிமேகலையில் ‘விளையாடு சிறுதே ரீர்த்து மெய் வருந்தி , யமளி துஞ்சும்” என்றும் குறிப்பிடப்படுகிறது. இப்பாடலில் தேரிழுத்து விளையாடுதல், உண்மையாகத் தேரிழுத்தல் இரண்டும் உள்ளப்புணர்ச்சிக்கும், மெய்யுறு புணர்ச்சிக்கும் உவமைகளாகச் சொல்லப்படுவது கவனிக்கத்தக்கது. 

——-


Monday, June 17, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-59

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-59

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி கூற்று

இயற்றியவர்: பாணர்

குறுந்தொகையில் பாடல் எண்; 60

திணை: குறிஞ்சி

————

குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்

பெருந்தேன் கண்ட விருக்கை முடவன்

உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து

சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்

நல்கார் நயவா ராயினும்

பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

குறிய அடியையுடைய கூதளஞ்செடி அசைந்த உயர்ந்த மலையிலுள்ள பெரிய தேனடையைக் கண்ட எழுந்து நிற்றற்கு இயலாமல் இருத்தலையுடைய முடவன் உள்ளங்கையாகிய சிறிய குவிந்த பாத்திரத்தை குழித்து அம்மலையின் கீழே இருந்தபடியே அந்தத் தேனிறாலைப் பலமுறைச் சுட்டி உள்ளங்கையை நக்கி இன்புற்றதைப் போல தலைவர் தண்ணளி செய்யாராயினும் விரும்பாராயினும் அவரைப் பலமுறைப் பார்த்தலும் எனது நெஞ்சிற்கு இனிமை தருவது.

———

குறுந்தாட் கூதளி

———

கூதளி என்ற செடி கூதளம், கூதாளமெனவும் பல பாடல்களில் வருகிறது. தொல்காப்பியம் உயிர்மயங்கியல் 44 ஆவது சூத்திரத்திற்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர் புணர்ச்சிக்கண் அம்முப்பெற்றும் குறுகியும் வரும் என்று எழுதுவதற்கு ஏற்ப கூதாளி என்பது இந்தப் பாடலில் கூதளி எனக் குறுகி வந்தது. குறுந்தாளை உடைய கூதளியை முடவன் எழுந்து நிற்க முடியாததற்கு உவமையாகச் சொல்ல வேண்டுமென்பதை பொ. வே. சோமசுந்தரனார்  குறுந்தாளை முடவனுக்கேற்றுக என்று எழுதுகிறார். கூதாளியின் மலர் வெண்மை நிறமுடையது; அது கூதிர் காலத்தில் மலர்வது. 

———

பெருந்தேன் கண்ட விருக்கை முடவன்

——-

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டாற் போல  என்ற பழமொழி  பாணரின் இந்தப்பாடலிலிருந்து வந்திருக்கக்கூடும். தேனைக் கண்ட முடவன் அதை விரும்புவது சிறுபாணாற்றுப்படையில் ‘கொடுங்குன்றினீள்குடுமி மேற்றேன் விரும்பு முடவனைப் போல’ என்ற வரியிலும் வருகிறது. முடவனால் தேனை எடுப்பது இயலாது எனினும் அதைக் கண்ட உடனேயே மகிழுவுற்றது போல தலைவி தான் தலைவனைப் பார்த்தே இன்பமடைவதாக சொல்கிறாள். பார்வையே தன்னளவில் இன்பம் நல்குவதாகவும்,  இன்பத்தைப் பெருக்குவதாகவும் இருப்பதைப் பற்றி (Gaze as pleasure) நவீன குறியியல் பல முக்கியமான ஆய்வுகளை முன்வைத்துள்ளது. அதில் ஆணின் பார்வைக்கேற்ப (male gaze) பெண் தன் உருவத்தை, உடலை, ஆடையை வடிவமைத்துக்கொள்வது பற்றிய ஆய்வுகள் கவனிக்கத்தக்கவை. இதனால் பார்வை என்பது இன்பமளிப்பது மட்டுமாக இல்லாமல் அதிகாரமாகவும் மாறுவதை (gaze as power) நாம் அவதானிக்கலாம். இந்தப் பாடலில் தலைவி தலைவனைக் கண்டு இன்புறுவதாகக் கூறினாலும் அவளுடைய நிலைமை அதிகாரமற்றதாக இருப்பதை தேனடையை விரும்பிய முடவனின் உவமை சொல்கிறது. தலைவியின் அதிகாரமற்ற, ஏதுமற்ற நிலைமை அவன் தன்னைக் கண்டுக்கொள்ளாமல் போனாலும் தனக்கு இன்பமே என்று சொல்வதிலிருந்து வெளிப்படுகிறது. இதைத் திருக்குறள் 1283 "பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக், காணா தமையல கண்" என்று கூறும். 


காதலர் நல்கார் நயகார் ஆயினும் பல்கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிது என தலைவி கூறுவதும் கவனிக்கத்தக்கது. காண்டலும் என்பதிலுள்ள உம்மை இழிவுச் சிறப்பு பெற்றது. பல்காற் காண்டலும் என்பதிற்கேற்ப பல்கால் என்பதை உவமைக்கும் கூட்டி வாசிக்கவேண்டும். 

——

உட்கைச் சிறுகுடை

—-

உள்ளங்கைக் குழிவை தலைவி இப்பாடலில் ‘உட்கைச் சிறுகுடை’ என்று சொல்லுதல் அழகான விவரிப்பு. அப்படிக் குழிந்த கையிலிருந்து தேனை நக்கிச் சாப்பிடுவதை தலைவி விவரிக்கிறாள். குடை என்பது இங்கே பனையோலையால் செய்யப்பட்டு நீர் எடுப்பதற்கும், பருகுவதற்கும், உணவுப்பொருள் வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டப்  பனையோலை முடிப்பைக் குறிக்கும். 


Sunday, June 16, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-58

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-58

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம்  கூறியது

இயற்றியவர்: மோசிகீரனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 59

திணை: பாலை

————

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்

அரலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்

குவளையோடு பொதிந்த குளவி நாறுநின்

நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்

சுரம்பல விலங்கிய வரும்பொருள்

நிரம்பா வாகலி னீடலோ வின்றே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

கிணையை இயக்கும் தாளத்தையுடைய பாணர் முதலிய இரவலரைப் பாதுகாப்பவனது அரலையென்னும் குன்றத்தின் கண் உள்ள அகன்ற வாயையுடைய ஆழமுள்ள சுனையின்கண் அலர்ந்த குவளைமலர்களோடு சேர்ந்து கட்டிய காட்டுமல்லிகையின் மணம் வீசும் நினது நல்ல நெற்றியை தலைவன் மறப்பானோ? பல நாள் நின்று முயற்சிகளைச் செய்தாலும் பாலை நிலம் முற்றக் கைகூடாவாதலின் முற்றும் பெற்றே மீள்வேமென்று கருதித் தலைவன் காலம் நீட்டித்துத் தங்குதல் இலதாகும்; ஆதலின் நீ வருந்துதலை ஒழிவாயாக.

——-

அரலைக் குன்றம்

——

இப்பாடலில் வரும் அரலைக் குன்றம் என்பது சேலம் ஓசூர்ப் பகுதியிலுள்ள அரலிக்குண்டா என்று இப்போது அழைக்கப்படுகிற மலையாகும் என்றும் ஆண்டே நள்ளி என்னும் பெருவள்ளலுடைய தோட்டி மலையாகிய அங்குசகிரியும் உண்டு என்றும்  இவற்றால் இப்பாடலில் சொல்லப்படுபவன் நள்ளி என்பது பொருந்தும் என்றும் 

இரா. இராகவையங்கார் எழுதியிருக்கிறார். உ.வே.சாவோ அரலைக்குன்றமென்பது ஒரு குன்றத்தின் பெயரென்று தோன்றுகிறது; ஆயினும் அதன் தலைவன் இன்னானென்பதும் அதன் இருப்பிடமும் இப்போது விளங்கவில்லை என்று எழுதுகிறார்.

———

பதலைப் பாணி

——

பதலை எனப்படுவது ஒருகண் மாக்கிணையென்னுன் பறை. ‘நொடிதரு பாணிய பதலை’ என்று மலைபடுகடாமில் வரும் வரியும் பதலை எனும் பறையைக் குறிப்பிடுகிறது. பதலை எனும் பறையை குறிப்பிட்ட பாணியில் இசைக்கும் பாணருக்குப் பரிசில் வழங்கி பாதுகாக்கின்ற கோமான் என்று தலைவன் இப்பாடலில் புகழப்படுகிறான். 

— 

குண்டுசுனைக் குவளையோடு பொதிந்த குளவி

——

குண்டு சுனை என்பது ஆழமான சுனை என்ப பொருள்படும். அப்படி ஆழமான சுனையில் பூத்த நீலக்குவளை மலர்களோடு காட்டுமல்லிகை (குளவி) மலர்களும் சேர்த்து கட்டிய மாலையைத் தலைவி தன் நெற்றியில் அணிந்திருக்கிறாள். புறநானூற்றுப்பாடலொன்றில் வரும் “பொல நறுந் தெரியல்’ என்ற வரி இம்மாலையை பொன்னானியன்ற நல்ல மாலை எனச் சிறப்பிக்கிறது. குவளை பொதிந்த குவளைக்கண்ணியை நெற்றி மாலையாக அணிந்தமையால் நெற்றி அம்மலர்களின் மணங்கமழ்ந்தது. அதைத் தலைவியின் நெற்றியின் இயற்கை மணம் எனத் தோழி கூறுவதாகவும் வாசிக்கலாம்.

——-

நாறுநின் நறுநுதன் மறப்பரோ

——-

தலைவியின் நெற்றியின் நறுமணத்தை தலைவன் மறப்பானோ என்று தோழி வினவுவது நறுமண புலனின்பத்தின் அழகை (sensuous beauty) முன்னிறுத்துவது. தலைவன் தலைவியின் நெற்றியை நீவிப் பிரிந்து சென்றிருக்க வேண்டும். நறுமணம் என்பது காலத்தால் குறையக்கூடியது. பிரிவு நீட்டிக்குமென்றால நறுமணமும் எனவே அழகும் குறையும் என்பதை அறிந்த தலைவன் தன் நோக்கம் நிறைவேறாவிட்டாலும் கூட சீக்கிரம் திரும்பி வந்துவிடுவான் என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். இதை உ.வே.சா. அன்புடையார் காலம் நீட்டிப்பப் பொருள்தேடிநில்லாரென்பதைப் புலப்படுத்துவதாகக் குறிக்கிறார். 

—-

 


Saturday, June 15, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-57

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-57

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தோழனிடம்  கூறியது

இயற்றியவர்: வெள்ளிவீதியார்

குறுந்தொகையில் பாடல் எண்; 58

திணை: குறிஞ்சி

————

இடிக்குங் கேளிர் நுங்குறை யாக

நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்

கையி லூமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெ யுணங்கல் போலப்

பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

இடித்துரைக்கும் நண்பரே, உங்களது காரியமாக எனது நோயை நிறுத்தினால், மிக நன்று. எனது விருப்பமும் அதுவே. ஞாயிறு காயும் வெம்மையையுடைய பாறையினடத்தே கையில்லாத ஊமையன் தன் கண்ணினால் பாதுகாக்க முயலுகின்ற உருகிய வெண்ணெயைப் போல என்னிடம் உண்டான காமநோய் பரவியது பொறுத்துக்கொண்டு நீக்குதற்கு அரிதாயிருக்கின்றது.

———-

கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல்

——-

பெருங்கதையில் “ சொல்லருங் கடுநோய்க் காமக் கனலெரி” என்றொரு அழகான வரி காமம் சொற்களால் கூட்டுவதற்கு அரிதாக எப்படி கனலாய் எரிக்கும் என்று சொல்கிறது. அது போலவே காமத்தினால் எரியூட்டப்பட்ட தலைவன் தன் தோழனிடம்  காமத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இயலாததை இப்பாடலில் சொல்கிறான். 


பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய் ஞாயிறின் வெப்பத்தினால் உருகிப் பரவுவது போலக் காமம் நோயாய்ப் படர்ந்தது; அவ்வெண்ணெய் உருகாமல் காக்கும் பொருட்டு கைகளற்றவனாகவும் ஊமையாகவும் இருக்கும் ஒருவனால் எப்படி இன்னொரு இடத்தில் வெண்ணெயை எடுத்து வைத்து பாதுகாக்கவோ அல்லது பிறரை அழைத்து பாதுகாக்கச் சொல்லவோ இயலாதோ அதே நிலைமையில் இருக்கிறேன் எனத் தலைவன் தன் தோழனிடம் சொல்கிறான். 


தொல்காப்பியம் களவியல் சூத்திரம் பதினொன்றுக்கு உரை எழுதும் இளம்பூரணர் தலைவன் கூற்றின்தன்மை பாங்கன் இடித்துரைத்ததை மறுத்து தன் நெஞ்சின் வருத்தங்களைக் கூறுவதாக கழற்றெதிர்மறையாக நிகழும் எனக் கூறுகிறார். இறையனார் அகப்பொருளுரை களவியல் சூத்திரம் இருபத்தி ஆறும் இப்பாடலில் வரும் தலைவன் கூற்று போன்றவற்றைக் கழற்றெதிர்மறையாக அடையாளப்படுத்துகிறது.

———

கழற்றெதிர்மறையில் வரும் பன்மைச் சொற்கள்

——

இடித்துரைத்த தோழனை மறுத்து தலைவன் பேசுகையில் கேளிர், நும், எனப் பன்மை சொற்கள் வந்தாலும் அவை நண்பன் ஒருவனையே குறித்தன. நவீன குறியியல் ஒருவரை நோக்கி சொல்லப்பட்ட பன்மைச் சொற்கள், கவிதையில், வாசகருக்கான இடத்தை (subject position of readers) விளிக்கப்பட்டவரின் இடமாக மாற்றும் என விளக்கமளிக்கும். எனவே இக்கவிதையை வாசிப்பவர்கள் தோழனினின் இடத்தில் சூசகமாக உள்ளிழுக்கப்படுகிறார்கள். இது எல்லா கூற்றுகளிலும் நிகழ வேண்டிய அவசியமில்லை; பிற கூற்றுகளில் வாசகர்கள் இருவருக்கிடையில் நிகழும் பேச்சை பார்வையாளர்களாகவோ, ஒட்டுக்கேட்பவர்களாகவோ கவனிக்கக்கூடிய்வர்களாக இருக்கலாம். 

——-

மன் எனும் இடைச்சொல்

———

 தொல்காப்பியம் இடையியல் சூத்திரம் நான்கு, கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே என வரையறுக்கிறது. இக்கவிதையில் இரண்டாவது வரியில் வரும் ‘மற்றில்ல’ என்பது மன், தில்ல ஆகிய இடைச்சொற்கள் புணர்ந்ததால் வந்ததாகும். மன் என்பது மிகுதிக்குறிப்பு, தில்ல என்பதிலுள்ள ‘தில்’ விருப்பத்தின் கண் வந்த இடைச்சொல் ஈறு திரிந்து வந்தது. மற்றில்ல என்பதற்கு பிற இலவாகும் என பொ. வே. சோமசுந்தரனார் உரை எழுதியிருப்பது பொருத்தமானது. 

—-


Friday, June 14, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-56

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-56

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: சிறைக்குடி ஆந்தையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 57

திணை:   நெய்தல்

————

பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன

நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்

பிரிவரி தாகிய தாண்டாக் காமமொ

டுடனுயிர் போகுக தில்ல கடனறிந்

திருவே மாகிய வுலகத்

தொருவே மாகிய புன்மைநா முயற்கே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

செயக்கடவனாகிய முறையை அறிந்து பிறவிதோறும் தலைவனும் தலைவியுமாகிய இருவேமாகப் பயின்று வந்த இவ்வுலகத்தில் பிரிவினால் ஒருவராகிய துன்பத்தினின்றும் நாம் நீங்கித் தப்புதற்கு பூவானது தம் இடையிலே பட்டாலும் அக்காலம் பல ஆண்டுகள் கடந்தாற்போன்ற துன்பத்தை உண்டாக்கும் தன்மையுடையது. நீரின்கண் உறைகின்ற மகன்றிற் பறவைகளின் புணர்ச்சி போல, பிரிவு அரிதாகிய குறையாத காமத்தோடு ஒருங்கே எம் உயிர் போவனவாகுக. இது என் விருப்பம்.

———

பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன

——-

இப்பாடலின் ஆரம்ப வரியான ‘பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன’ என்பது மிகவும் அழகான கவித்துவம் மிக்க வரி.  ஒன்றையொன்று பிரியாமல் வாழும் நீர்ப்பறவைகளான மகன்றிற் பறவைகள்  பல சங்கப்பாடல்களில் இணைபிரியா காதலர்களுக்கு உவமையாகக் கூறப்படுகின்றன. பரிபாடலில்  வரும்  ‘அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி’  ஐங்குறுநூறு 381 ஆவது பாடலில் வரும் , ‘குறுங்கால் மகன்றில் அன்ன உடன் புணர் கொள்கை’  அகநானூறு 220  ஆவது பாடலில் வரும்  ‘நோலா இரும்புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்’ ஆகிய வரிகளில் மகன்றில் பறவைகளுக்கான குறிப்புகள் வருகின்றன. அன்றில் பறவைகளின் ஒரு வகையாக  மகன்றில் பறவைகள் கருதப்படுகின்றன. 

  

தலைவன் தன்னைத் தழுவும்போது பூ(அற்ப) அளவுக்கால இடைவெளி தோன்றினாலும் அதனை ஓராண்டு இடைவெளி போல இருப்பதாக தலைவி இப்பாடலில் குறிப்பிடுகிறாள்.  இப்படி பூவிடை இடைவெளி கூட அற்றுத்  தழுவுவதுதான் மகன்றில் போன்ற புணர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. உ.வே.சா. வேறுவிதமான விள்க்கமும் கொடுக்கிறார்; அவர்  “மகன்றில் பறவைகள் மலர்களிற் பயில்வனவாதலின் உடனுறையுங் காலத்தில் அப்பூ இடைப்படுதலும் கூடுமாதலால் ‘பூவிடைப்படினும்’ என்றாள்” என்று எழுதுகிறார். 

பூ இடைப்படினும்  என்பதிலுள்ள  உம்மை இழிவு சிறப்பும்மை ஆகும். 


கணவனும் மனைவியும் இணைந்து வாழும் இல்லற முறைகளைக் கடனென்றும், பலபிறவிகளிலும் விடாது தொடரும் உறவை இருவேமாகிய உலகம் என்றும் தலைவி கூறுவது அவர்களுக்கிடையிலுள்ள அபாரமான பிணைப்பையும் காதலையும் சொல்வதாக இருக்கிறது. 

—-

உயிர் போகுக

—-

தலைவனைப் பிரிந்திருத்தலிலும் உயிர் நீத்தல் சிறப்புடையது என தலைவி ‘உயிர் போகுக’ இப்பாடலில் சொல்கிறாள். அப்படி பிரிய நேரிட்டால் அதைத் தலைவி ‘புன்மை’ எனக் குறிப்பிடுகிறாள். புன்மை என்ற சொல்லுக்கு  பொ. வே. சோமசுந்தரனார் சிறுமை எனவும்  உ. வே. சா. துன்பம் எனவும்   தமிழண்ணல் இழிவு எனவும் பொருளுரைக்கின்றனர். 


Thursday, June 13, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-55

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-55

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் கூற்று

இயற்றியவர்: சிறைக்குடி ஆந்தையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 56

திணை:   பாலை

————

வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்

குளவி மொய்த்த வழுகற் சின்னீர்

வளையுடை கைய ளெம்மோ டுணீஇயர்

வருகதில் லம்ம தானே

அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே.

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

வேட்டையை மேற்கொண்ட செந்நாய் தோண்டி உண்டு எஞ்சியதாகிய காட்டுமல்லிப்பூ மூடிய அழுகல் நாற்றத்தையுடைய சில்வாகிய நீரை வளையையுடைய கையளாய் எம்மோடு சேர்ந்து உண்ணுதற்கு தலைவி வந்தால், என் நெஞ்சின்கண் விரும்பிப் பொருந்திய தலைவி மிகவும் இரங்கத்தக்காள்!

————

பாலை நிலத் தீமைகள் கனவா, நனவா?

——-

பாலை நிலத்தில் உள்ள தீமைகளைக் கண்டு தலைவன் கூறியதாக அமைக்கப்பட்டுள்ள இப்பாடலில் அவன் காட்சிகளைக் கனவில் கண்டானா நனவில் கண்டானா என்பதற்கு இரண்டிலும் கண்டான் என்பது போன்ற விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. தொல்காப்பியம், பொருளாதிகாரம், அகத்திணையியல் 44வது சூத்திரத்திற்கு இளம்பூரணரின் உரையைப் பின்பற்றி இரா. இராகவையங்கார் இது களவில் தலைவன் தலைவியை உடன்கொண்டு போகத் துணிந்தது என குறிக்கிறார். அகத்திணையியல் 44வது சூத்திரம் தலைவன் கூற்று தலைவியின் தமர் ஏற்றுக்கொள்ளாதபோது பருவநிலை, சுரம் பற்றிக் கூறித் தலைவி உடன்வருதலைத் தடுப்பதற்காகப் பேசுவதாக இருக்கும் என்று சொல்கிறது. இப்படிக் கொள்ளப்படும்போது தலைவன் பாலை நிலத்தின் தீமைகளை போவதற்கு  முன்பாகவே கனவிலோ கற்பனையிலோ கண்டு சொன்னதாகக் கருதப்படும். 

தொல்காப்பியம் கற்பியல் சூத்திரம் ஐந்திற்கு நச்சினார்க்கினியரின் உரையை வைத்து இப்பாடலின் சூழலை விளக்கும்போது அது கற்பின் தலைவன் தோழி கேட்கக் தலைவன் பாலை நிலத்தின் கொடுமைகளை எடுத்துச் சொன்னதாகக் கருதப்படும்.

———

வேட்டச் செந்நாயின் ஊண் மிச்சிலும் குளவி மொய்த்த அழுகல் சின்னீரும்

——————-

பாலை நிலத்தில் நீரற்ற சுனையில் தோண்டி அங்குள்ள சிறிது நீரை விலங்குகளும் மக்களும் அருந்துதல் வழக்கம் என்பதை அகநானூற்றுப் பாடலில் வரும் ‘ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத் துண்ட சிரு பல கேணி’ என்ற வரியால் அறியலாம். பாலை நிலத்தில் வேட்டைச் செந்நாய் விட்டு சென்ற ஊண் மிச்சத்தையும் அழுகல் நீரையும் தலைவி உட்கொள்ளவேண்டுமே எனத் தலைவன் புலம்புகிறான்.  குளவி என்பது காட்டு மல்லலிகைப் பூ. குளவி  என்பதற்கு பொ. வே. சோமசுந்தரனார்  காட்டு மல்லிகை, ஈண்டு அதன் சருகிற்கு ஆகுபெயர் என்று மேலும் விளக்குகிறார்.  அருகிலிருந்த மரங்களிலிருந்து  உதிர்ந்த குளவிமலர்கள் மூடி நெடுநாளிருத்தலால் அவை அழுகி நீரில் அழுகல் நாற்றத்தை உண்டாக்கின. சில் நீர், சின்னீர் என்பது சிறிய அளவிலான நீர். ‘குடத்துள்ளும் பிறகலத்துள்ளும் இருந்த நீரைச் சிறிதென்னாது சிலவென்றலும் வழக்கம்’ என தொல்காப்பியம் கிளவியாக்கம் 17 ஆவது சூத்திரம் சொல்கிறது. 

———

வருகதில்

——

வருகதில் என்ற சொல்லிலுள்ள ‘தில்’ விழைவுப் பொருளும் ஒழியிசைப் பொருளும் ஒரு சேரக் குறித்து நின்றது, எனவே வருகதில் என்பதற்கு வருவாளாக என்பது பொருள் என பொ. வே. சோமசுந்தரனார் உ.வே.சாவைப் பின்பற்றி உரை எழுதுகிறார். உ.வே.சா. தலைவி வருவாளென்றால் அவள் பாலை நிலத்தின் இந்தக்கொடுமைகளையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று எழுதி ‘வருகதில்’ என்பதற்கு ‘வருவாளென்றால்’ எனப் பொருளுரைக்கிறார். நமது தமிழாசிரியர்களும்  உரையாசிரியர்களும் எப்படி ஒவ்வொரு சொல்லையும் அணுக்கமாக வாசித்தார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

———

அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே

——-

தலைவி பிரிந்திருந்தால் பிரிவைத் தாங்க முடியாமல் துன்புறுபவளாவாள், உடன் வந்தாலோ பாலை நிலத்தின் தீமைகளைத் தாங்க முடியாதவளாவாள் ஆகையால் தலைவன் அவளை ‘அளியள்’ என்றழைக்கிறான். ‘அளியளோ வளியல்’ என்றது மிகவும் அளியல் எனப் பொருள் பெறும். இப்படி அளியளோ வளியளாகி இருப்பவள் வளையலணிந்த மென்மையான கையுடையவள் என்பது தலைவியின் மென்மையை மேலும் சிறப்பிப்பதாகும். தலைவியைப் பிரிந்து வந்தேனென்றாலும் எப்போதும் அவளையே நினைக்கும் நிலையிருப்பதால் தலைவன் அவளை நெஞ்சமர்ந்தோளே என விளிக்கிறான். 

இத்தகைய காதலின் மென் உணர்வுகள் (tenderness) அபூர்வமானவை அவற்றை நாம் மனித வாழ்வின் விழுமியங்களாக அடையாளம் காணவேண்டும். 

—-

Wednesday, June 12, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-54

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-54

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவனிடம் கூறியது

இயற்றியவர்: நெய்தல் கார்க்கியர்

குறுந்தொகையில் பாடல் எண்; 55

திணை:  நெய்தல்

————

மாக் கழி மணிப் பூக் கூம்பத் தூத்திரைப்

பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்

கையற வந்த தைவரல் ஊதையொடு

இன்னா உறையுட்டு ஆகும்,

சின்னாட்டு அம்ம, இச் சிறு நல்லூரே

————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தலைவன் வேலிப்புறத்திலே கேட்கும் அண்மையில் நின்ற காலத்து அவன் விரைந்து தலைவியை மண்ம புரிய வேண்டும் என்று அறிவுறுத்துவாளாய் இவ்வூர் சில நாலே வாழ்வதற்குரியதாகவும் இன்னாமையையுடைதாகவும் இருக்கிறது என்று கூறி திருமணம் செய்துகொள்ளாவிடில் தலைவி உயிர் நீப்பாளென்று தோழிப் புலப்படுத்தியது.

இந்த சிறிய நல்ல ஊரானது, கரிய கழியினிடத்திலேயுள்ள நீலமணி போன்ற பூக்கள் குவியும்படி, தூய அலையிடத்துப் பொங்கிய பிசிராகிய துளியோடு மேகத்தைப் பொருத்தி பிரிந்தோர் செயலறும்படி வந்த தடவுதலையுடைய வாடைக் காற்றோடு, துன்பத்தைத் தரும் தங்குமிடத்தையுடையதாகின்ற சில நாட்களையுடையது.

———-

கூம்பிய மணிப்பூ

——

மணிப்பூ என்பது நீலமணி போன்ற முள்ளிச்செடியின் மலராகும் என்பதை சிறுபாணாற்றுப்படை 140 முதல் 153 அடிகள் வருணிக்கும் நீலமணி பூத்த நெய்தல் நில விவரிப்புகளால் அறியலாம்.  குறிப்பாக சிறுபாணாற்றுபபடையின் பின் வரும் வரிகள் அழகானவை:

“அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும்,

தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்,

கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,

நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்,

கானல் வெண்மணல் கடல் உலாய் நிமிர்தர, 

பாடல் சான்ற நெய்தல் நெய்த நெடுவழி

மணி நீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய

பனி நீர்ப் படுவின் பட்டினம் படரின்”

கூடவே மதுரைக்கஞ்சியில் வரும் 282 ஆவது வரி

“சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்மணி மருள் நெய்தல் உறழ காமர்” என்பதும் இப்பாடலில் சொல்லப்படுகிற மணிப்பூ ஒரு வகை முள்ளிச் செடியினது என் அறியலாம். 

மணிப்பூ கூம்பியிருப்பதாகத் தோழி சொல்வதால் பொழுது மாலைப்பொழுது என்றும் அறியலாம். 

———

தூத்திரைப் பொங்கு பிதிர்த் துவலை

——-

தூய அலையிடத்து பொங்கிய பிசிராகிய துளியோடு கூம்பிய மணிப்பூவும் ஊதைக்காற்றும் மேகமும் (மங்குல் தைஇ) சேர்ந்திருக்கும் நெய்தல் நிலக்காட்சி இப்பாடலில் தலைவியின் நிலைமைக்கு படிமமாகிறது. மணிப்பூ போல கூம்பியிருக்கும் அவள் ஊதைக்காற்றினால் நடுங்கியிருக்கிறாள், கடலலைகளின் நீர்த்துளி பிசிறுவது மேகத்தோடு இணைவது தலைவி உயிர் நீக்கவும் இவ்வுலகு நீங்கத் தயாராக இருப்பதற்கும் உவமையாகிறது. இதில் பிதிர்த் துவலை  என்பது பிதிராகிய துளி, இருபெயரொட்டாகும். மங்குல் தைஇ என்பதில் தைஇ  சொல்லிசை அளபெடை ஆகும். 

——

இன்னா உறையுட்டு ஆகும், சின்னாட்டு அம்ம, இச் சிறு நல்லூரே

——

‘இன்னா உறையுட்டு ஆகும்’ ‘இச் சிறு நல்லூரே’ எனத் தோழி ஊரின் மேல் வைத்து சொன்னாலும் தலைவி இன்னும் சின்னாளே ஈவ்வூரில் உயிர் வாழ்வாள் அச் சின்னாளும் இன்னாமை தரும் இயல்புடையன எனத் தோழி கூறுவதாக உ.வே.சா. உரையெழுதுகிறார். அது ஊரின் குறையல்ல என்பதால் அதைச் சிறு நல்லூர் என்கிறாள். 

——-

Tuesday, June 11, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-53

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-53

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: மீனெறி தூண்டிலார்

குறுந்தொகையில் பாடல் எண்; 54

திணை:  குறிஞ்சி

————-

யானே யீண்டையேனே, என் நலனே 

ஏனல் காவலர் கவண் ஓலி வெரீஇக்

கான யானை கைவிடு பசுங்கழை

மீன் எறி தூண்டிலின் நிவக்கும்

கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே.

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

———

தோழி, நான் இவ்விடத்திலுள்ளேன். என்னோடு முன்பு ஒன்றியிருந்த பெண்மை நலன் இப்போது இல்லை. தினைப்புனங் காப்பாற் விடும் கவண் ஒலிக்கு அஞ்சி தான் உண்ண விரும்பி வளைத்த மூங்கிலை காட்டு யானை கைவிட்டது; அங்ஙனம் கைவிடப்பட்ட  பசிய மூங்கிலானது மீன் அகப்பட்ட காலத்தில் மீன் பிடிப்பவன் மேலே விரைவாக எடுக்கும்போது தூண்டில் நிமிர்தலைப் போல விரைந்து மேலே சென்றது.  மேலே செல்லுதற்கு இடமாகிய காட்டையுடைய தலைவனோடு நாங்கள் பழகிய அவ்விடத்தே என் பெண்மை நலன் நீங்கியது.

——-

மீனெறி தூண்டிலார்

——-

யானையால் கைவிடப்பட்டு நிமிரும் மூங்கிலுக்கு மீனெறி தூண்டிலை உவமை கூறிய சிறப்பினால், இப்பாடலை இயற்றிய நல்லிசைச் சான்றோர் மீனெறி தூண்டிலார் என்னும் பெயர் பெற்றார். தண்டியலங்காரம் நான்காம் சூத்திரத்தின்படி இது தொழிலும் பண்பும் பற்றி வந்த உவமையாகக் கருதப்படும். 

——-

கான யானை கைவிடு பசுங்கழை

———-

உ. வே. சா. யானை வளைக்குங் காலத்தில் வளைந்து அது கைவிடத் தூண்டிலைப் போல மூங்கில் நிமிரும் நாடன் என்றது தன் நெஞ்சத்து அன்புளதாகிய காலத்து நம்பால் மருவிப் பணிந்து ஒழுகி அன்பற்ற காலத்துப் பணிவின்றித் தலைமை செய்து நம் நலங்கொண்ட தன் கொடுமை போன்ற ஒழுகுகின்றான் எனத் தலைவி தலைவனைப் பற்றிக் கூறுவதாக உரை எழுதுகிறார்.   திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன், ஏனலைக் காப்பவரது கவணின் ஒலியை அஞ்சி யானை நுகர்தற்கு வளைத்த கழையைக் கைவிட்டுச் செல்லுமாறு போல, ஊரார் தூற்றும் அலரை அஞ்சித் தன் எண்ணத்தின்படி தாழ்த்தி நுகர்ந்த என்னைக் கைவிட்டுச் சென்றான் என்று உரை எழுதி இதை உள்ளுரை என வகுக்கிறார். 

‘கான யானை கைவிடு பசுங்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும்’ என்ற உவமை பிற சங்கப்பாடல்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன. குறுந்தொகை 74 இல்  ‘விட்ட குதிரை விசைப்பினன்ன விசும்பு தோய் பசுங்கழை’ என்பதும்  புறநானூறு 302 இல்  ‘ வெடி வேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும் மாவே’ என்பதும்  ஐங்குறுநூறு 278 இல் ‘கழைக்கோல் குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி மீன் எறி தூண்டிலின் நிவக்கும்’ என்பதும் கவனிக்கத் தக்கன. 

——-

யானே யீண்டையேனே

——-

நான் இங்கே கிடக்கிறேனே , (யானே யீண்டையேனே,) எனத் தலைவி  தோழியிடத்து புலம்புவது சொல்லப்படாத பெண்மை நலன் இழப்பின் கதையொன்றையும் உள்ளடக்கியிருக்கிறது. யானே, நலனே ஆகியவற்றிலுள்ள ஏகாரங்கள் தலைவியின் பிரிந்திருக்கும் நிலையைக் குறித்தன.  

—-

புணருங்காற் புகழ் பூத்தது

——

‘கானக நாடனொடு ஆண்டு’ என்று தலைவி சொல்வது தலைவனோடு களவுக்கூட்டம் நடந்த இடத்தை. கானக நாடனொடு ஒழிந்தன்று என்றதால் அவன் மீண்டு வந்தால் என்பால் ஒன்றலாம் என்று தலைவி கூறுவதாக வாசிக்க வேண்டும். இப்படி வாசிப்பதற்கு உ.வே.சா. கலித்தொகைப் பாடலில் வரும் வரிகளை சான்றாதாரங்களாகக் காட்டுகிறார்:

“நீங்குங்கானிறஞ்சாய்ந்து புணருங்காற் புகழ்பூத்து

நாங்கொண்ட குறிப்பிவணலமென்னுந் தகையோன்’

உ.வே.சா. மேற்கோள் காட்டும் வரிகளிலுள்ள ‘புணருங்காற் புகழ்பூத்து’ என்ற பதச்சேர்க்கை கவனிக்கத்தக்கது. 

——-

பசுங்கழையின் அனுபவ நெகிழ்ச்சி

——-

திடுக்கிட்ட யானையால் கைவிடப்பட்ட பச்சை மூங்கில் தண்டு, தலைவியின் அனுபவத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க உருவகம். இது ஆரம்பத்தில் திடமாக நிமிர்ந்து இருக்கிறது ஆனால் கைவிடப்பட்டபோது , ​​அது ஒரு ஆச்சரியமான நெகிழ்ச்சியுடன் மீண்டும் எழுகிறது. இது தலைவியின் சொந்த பின்னடைவையும்  துன்பங்களை எதிர்கொள்ளும் தன்மையையும் எதிரொலிக்கிறது. மீனெறி தூண்டில் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படும் இந்த உணர்வை மேலும் வலியுறுத்துகிறது, ஆசையும் அதன் நிரைவேற்றமும்  இவ்வாறாக ஒரு சுழற்சியில் இருக்கின்றன. 

சொல்லப்படாத கதைகளால் இப்பாடல் நிரம்பியிருக்கிறது. வன நிலங்களைச் சேர்ந்த மனிதனுடனான தலைவியின் உறவு பெண்மை நலன் இழப்ப்பத் தவிர வேறெதையும் உணர்த்தாமல் தெளிவற்றதாக இருக்கிறது.  அதனால் இது பல விளக்கங்களை அனுமதிக்கிறது. கவண் ஒலிக்கு  யானையின் எதிர்வினை ஒரு பெரிய மோதலைக் குறிக்கிறது. இழப்பிற்கும்  தனிமைப்படுதலுக்குமான  குறிப்புகள்  இருந்தபோதிலும், பாடல் இறுதியில் எதிர்ப்பின் குரலாகவே பரிணமிக்கிறது.  தலைவி அவளுடைய மீறுதலை ஒப்புக்கொள்கிறாள் ஆனால் அவள் அதற்காக வருந்தவில்லை; சமூக எதிர்பார்ப்புகளுக்கு இணங்க மறுத்து, தன் தனிமையையும் தன் விருப்பத்தையும் தழுவிக் கொள்கிறாள். இப்பாடல் தனிமனித விருப்பத்தின் ஆற்றலையும், தன் சொந்த பாதையை உருவாக்கும் சுதந்திரத்தையும் கொண்டாடுகிறது. அழகான பாடல்.  

——