Sunday, October 9, 2011

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் Photo From http://azhiyasudargal.blogspot.com/2011/12/blog-post_11.html

எம்.எஸ்.ராமசாமி பாரதியாரின் ‘காற்றே வா’ கவிதையை ஆங்கிலத்தில் wind come என்று ஆரம்பித்து மொழிபெயர்த்திருந்ததை சிறுபிள்ளைத்தனமாக திட்டி ஒரு முறை எழுதியிருந்தேன். இதைப் படித்த திலீப்குமார் நேர்ப்பேச்சில் பின் எப்படித்தான் இந்த வரியை மொழிபெயர்ப்பதாம் என்று கேட்டார். O wind come என்று மொழிபெயர்த்துவிட்டால் ‘காற்றே வா’ என்ற வரியின் கவித்துவம் ஆங்கிலத்திற்கு பெயர்ந்துவிடுமா என்ன என்றும் கேட்டார். பாரதிக்கு என்று மட்டுமில்லாமல் நவீன தமிழ் எழுத்து என்று நாம் கொண்டாடும் பல கவிதைகளுக்கும் உரைநடைக்கும் கூட இந்த ஆங்கிலத்திலோ இதர இந்திய மொழிகளிலோ மொழிபெயர்க்கமுடியாத தன்மை இருக்கிறது. லஷ்மி ஹோல்ம்ஸ்றாமின் ந.முத்துசாமி கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பிலுள்ள ‘செம்பனார் கோவிலுக்குப் போவதெப்படி?’ என்ற கதையில் அப்படி என்ன விசேஷம் என்று கேட்டார் என் மலையாள நண்பர். நிலப்பிரபுத்துவ மனோநிலை இயக்கமற்று தேங்கிப்போவதை வண்டி வண்டியாய் எழுதி மலையாள நாவல்கள் சாதிப்பதை ஒரு சிறுகதையில் சாதிக்கிறார் முத்துசாமி என்றேன்; அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் படம் தருகின்ற அனுபவத்தைத் தருகின்ற சிறுகதை அது என்றும் வாதிட்டேன். என்னால் அந்த மலையாள நண்பரை புரிந்துகொள்ளவைக்க முடியவேயில்லை.

இந்த மொழிபெயர்க்க முடியா தன்மை தமிழின் உள் கலாச்சார முகம் நோக்கித் திரும்பி தமிழ் நுண்ணுர்வுகளோடும் தமிழ் பண்பாட்டுக் குழுஉ குறிகளோடும் செறிவாகிவிட்ட தமிழ் நவீனத்துவத்தின் பண்பாகும். இந்த தமிழ் நவீனத்துவ பண்பை தமிழ்க்கவிதைக்கு தீர்மானமாக தீர்க்கமாக உருவாக்கிக்கொடுத்தவர் சுப்பிரமணியபாரதியார் ஆவார். அதனாலேயேதான் அவரை நாம் மகாகவி என்கிறோம்.

இந்த தமிழ் நவீனத்துவ பண்புகள் பாரதியின் கவிதைகளில் என்னென்னவாக இருக்கின்றன என்று சற்றே பார்ப்போம். நான் ஏற்கனவே குறிப்பிட்ட ‘காற்றே வா’ வரியில் எது மொழிபெயர்க்கமுடியாமல் போகிறது என்றால் அதன் நிகழ்த்து தன்மை (Performative quality). காற்றை தூலமான பொருளாக, ஆளாக உருவகித்து விளிக்கும்போதே அந்த வரி ஒரு நிகழ்த்துதன்மையை இரண்டே வார்த்தைகளில் அடைந்துவிடுகிறது. சங்க அக இலக்கியங்களிலிருந்து கவிதைக்கு ஒரு நிகழ்த்துதன்மையைத் தருகிற மரபின் நவீன நீட்சி இது. ‘மழை’, ‘அக்னிக்குஞ்சு’ ஆகிய குறுங்கவிதைகளிலும் ‘வள்ளிப்பாட்டிலும்’ இந்த நிகழ்த்துதல் அக நாடகீயமாய் உச்சம் பெறுவதைக்காணலாம். இந்தத் தன்மை ஏன் நம்மாழ்வாரில் இல்லையா, பெரியாழ்வாரிடம் இல்லையா, ஆண்டாளிடம் இல்லையா ஏன் மாணிக்கவாசகரிடமும் திருநாவுக்கரசரிடமும் இல்லையா என்று ஒருவர் வினவலாம்தான். பாரதியிடம்தான் இந்த நிகழ்த்துதன்மை கண்ணன் பாட்டு போன்ற பக்தி மரபு பாடல்களோடு நின்றுவிடாமல் ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவியைப் போலே’, போன்ற பாடல்களுக்கும் நீள்கின்றன. பக்தி மரபுக் கவிஞர்கள் சங்க இலக்கிய அகப்பாடல்களின் நிகழ்த்துத்தன்மையினை புறத்திலுள்ள பரம்பொருள் நோக்கிப் பேசும் கவித்துவ குரலின் நிகழ்த்துத்தன்மையாக மாற்றினார்கள் என்றால் பாரதி மீண்டும் அதை அகம் நோக்கிப் பேசுகின்ற நிகழ்த்துதன்மையுடைய நவீன குரலாக மீட்டெடுக்கிறார்.

எளிய ஒப்பீடு ஒன்றினை பாருங்கள். அபிராமி பட்டரின் ‘தனம் தரும் கல்வி தரும் தளர்வறியா மனம் தரும்’ அந்தாதியும் பாரதியின் ‘மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்’ கவிதையும் பிரார்த்தனை வடிவங்கள்தான். ஆனால் பாரதியிடத்து அது தனக்குத்தானே பேசிக்கொள்ளும் குரலாக மாறுகிறது. வாசகனுக்கோ அது தன் சுய குரல் போலவே ஒலிக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே தன் அகம் நோக்கிப் பேசுகின்ற கவித்துவ குரல் பாரதியால் கட்டமைக்கப்படுகின்ற மகத்தான தருணமது. இந்த கவித்துவ குரல் பாரதியிடத்து நாம், நீ, வாடா போடா என்ற உரையாடல் பாங்குகள் பெற்ற சுதந்திரப் போராட்ட விடுதலைக் கவிதைகளாக நீட்சி பெறும்போது அவை அவற்றின் சரித்திர சூழலினால் மக்கள் திரட்சிப் பாடல்களாகின்றன. பாரதியின் கவிதைகளில் இதனால் உச்ச உணர்ச்சிகளின் உன்மத்தம் எளிய வரிகளில் எளிதில் தொடப்படுகிறது.

பாரதிக்கும் தாகூருக்கும் இந்திய சுதந்திரப்போராட்டம் நவீன இந்தியாவின் அகக்கவித்துவக் குரலையும் எனவே அதன் சுயத்தையும் கட்டமைக்கின்ற வாய்ப்புகளை சமமான அளவிலே தந்திருந்தபோதும் பாரதி அளவுக்கு தாகூரால் தன் மொழி சார்ந்த நாட்டுபுறப் பாடல்களை நவீன கவிதைகளுக்குள் இணைக்கமுடியவில்லை. தனித்துவ பண்பாட்டின் வரலாற்றிலேயே உலகளாவிய மனிதனுக்கான விழுமியங்களை காணவேண்டும் என்று தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தாலும் கூட. தமிழ் பக்தி மரபின் கவிஞர்கள் பாரதிக்கு கொடுத்த சௌகரியம் தாகூருக்கு இருந்திருக்கவில்லை. இதனாலேயே தாகூரின் கவிதைகளுக்கு உலகளாவிய வாசிப்புத்தன்மை அதிகமானபோது பாரதியின் நவீனத்துவம் தமிழ் நவீனத்துவமாய் தனித்துவம் பெற்றது. ஆழ்வார் பாசுரங்களில் எடுத்தாளப்பட்ட அம்மானை, தாலாட்டு, ஊஞ்சல்பாட்டு ஆகிய தமிழ் நாட்டுப்புற பாடல் வகைமைகள் நிஜ மனிதர்களுக்கு பதிலாய் கடவுளை தங்கள் பாடல்பொருட்களாய் மாற்றுவதில் மட்டுமே வெற்றி பெறுகின்றன. பாரதியிடமோ சொல்லப்பட்ட நாட்டுப்புற வகைமைகள் தவிர சித்தர் பாடல்கள், சிந்து, வாய்மொழி காப்பியம் (பாஞ்சாலி சபதத்தை தமிழ் மகாபாரத வாய்மொழிக்காப்பிய மரபின் நீட்சியாகவே வாசிக்க வேண்டும்; இது பற்றி பின்னொரு சமயத்தில்) ஆகிய வடிவங்களும் நவீன வடிவம் பெறுகின்றன. இது எப்படியென்றால் அருணாச்சல கவிராயரின் காவடிச்சிந்தினை காவடி எடுத்துச்செல்லும்போது வழி நடைப்பதமாகவேதான் பாடமுடியும் இதர சூழல்களில் பாடுவதென்பது தாலாட்டினை குழந்தையோ தொட்டிலோ இல்லாத இடத்தில் பாடுவது போலாகும். பாரதியே இந்த சூழல்சார் நாட்டுப்புற வகைமைகளை (contex bound forms) சூழல் மீறிய நவீன கவிதை வடிவங்களாக்குகிறார் (context free modern forms). இது எளிதான சாதனை அல்ல. உலகம் முழுவதும் தங்கள் மொழிகளில் இவ்வாறாக நாட்டுப்புற இலக்கிய கலை வகைமைகளை நவீனப்படுத்துபவர்களோ அல்லது நவீன வடிவங்களுக்குள் உள்வாங்கும் இலக்கியகர்த்தாக்களோ சாதனையாளர்கள் என்றே கொண்டாடப்படுகிறார்கள். ரெபெலெய்சின் நாவல்களின் இலக்கிய சாதனையாக மிகைல் பக்தின் குறிப்பிடுவதும் இதைத்தான்.

பல சூழல் பொருத்தப்பாடுள்ள தமிழ் கவித்துவ அகத்தின் குரலாக பாரதியின் கவிதைகள் இருப்பதாலேயேதான் அவை என்றென்றைக்குமான தமிழரனைவருக்குமான கவிதைகளாகின்றன. தமிழ் மரபுகளின் பல நீட்சிகள் பாரதியில் சங்கமிப்பதால் அவற்றின் நுண்ணுணர்வுகள் தமிழ் நாளங்களையே மீட்டுவதால் ‘தமிழரனைவருக்குமான’ என்று சொல்ல நேரிட்டது; இல்லையென்றால் உலகத்தினரெல்லோருக்கும் என்று மகிழ்ச்சியாகச் சொல்லியிருக்கலாம்.

இது தவிர, வித விதமான இசையமைப்புகளில் பாரதியின் கவிதைகள் வேறுபட்ட அனுபவங்களைத் தருவதை நாம் உணர்ந்திருக்கிறோம். பாடல்கள் முதிர்ந்து கவிதைகளாகிவிட்டதை அடையாளம் காட்டும் எளிய சமிக்ஞைகள் அவை.  எல்.வைத்தியநாதனின் இசையமைப்பில் வந்த பாரதி கவிதைகள் என்னுடைய தனிப்பட்ட விருப்ப  தேர்வுகள். ஆயிரம் பாடலாசிரியர்கள் வந்தாலும் பாரதியின் இந்த சாதனையையும் யாரும் எட்ட முடியுமா என்று தெரியவில்லை.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தமிழின் அளப்பிற்கரிய செல்வம்; அவரை மகாகவி என்றழைப்பது தமிழ் இலக்கிய பாரம்பரியத்தின் நவீனத்துவ வாசலை திறப்பதற்கு நம்மளவிலான சிறு முயற்சியே ஆகும்.

வங்காளத்தில் எந்த ஒரு வாசகனும் தாகூர் மகாகவி என்று நிரூபிப்பதற்கான காரணங்களை அடுக்க நிர்ப்பந்திக்கப்படமாட்டான்.

தமிழர்களுக்கென்றால் எல்லாமே தனிதானே.Post a Comment