Monday, October 24, 2011

கோச்சுக்காதே மக்கா!


தாஜா 1
ஜெயமோகன் கோபித்துக்கொண்டுவிட்டார் போலிருக்கிறது. தேநீர் அழைப்பிற்கு பதிலில்லை. பாரதி விவாதம் அவர் தரப்பிலிருந்து தொடர்கிறதா என்று தெரியவில்லை. மாப்பு  கேட்கலாமென்றாலும் ஏன் எதற்கு அவர் கோபித்துக்கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவர்தான் என்னையும் சேர்த்து கட்டவிழுங்கள்  உடைந்து சிதறி மீண்டும் ஒட்ட வைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை என்று பின்னூட்டமிட்டார். சரி என்று கட்டவிழ்ப்பு என்றால் மெய்ய்யியலை, மெய்யியல் வாதங்களை உண்மைகளை தீவிரமாக விமர்சிப்பதே என்று சுட்டிக்காட்டினேன். அவர் என்னை வசைபொழிய நான் அவருக்கு எந்த உரிமையையும் அளிக்கவில்லை ஆனால் அவர் பல இடங்களில் வசை பாடினார். பொறுத்துக் கொண்டேன். உங்களுடைய ரசனை விமர்சனத்தின் கருத்தியல் எந்திரம் என்றால் என்ன என்று விளக்கட்டுமா என்றதற்கு அதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்றார். சரி என்று விட்டுவிட்டேன். அப்புறமும் என்ன கோபம்? சரி கொஞ்சம் தாஜா செய்து பார்க்கிறேன். என்ன அவரை ஒருமையில் அழைக்க வேண்டியிருக்கும். ஆனால் அவர்தான் எனக்கு அவரை கிண்டலடித்துப்பேச உரிமை கொடுத்து அவருடைய வாசகர்களை அமைதிப்படுத்தியிருக்கிறாரே. ஆகையால் கீழே ஒரு பத்தி மட்டும் அவரிடம் பெற்ற சிறப்பு சலுகையை பயன்படுத்தி:
கோச்சுக்காதே மக்கா. நீ பெரிய ஆள்தான். என்ன, தப்புத்தப்பா பேசர. எனக்கு நாகர்கோவில். வடிவீஸ்வரம். நீ நெல்லைன்னு எழுதர. பார்வதிபுரம் சர்குலர பிடிச்சேன்னு வை மீனாட்சிபுரம் ஜங்ஷன்ல எரங்கினா வீடு பக்கம்தான். உள்ளூர்காரன உள்ளூர்னு கூட தெரில. இப்டி எலக்கியத்துலயும் வரலாத்துலையும் பன்ரியா. ஐடியாசையும் தப்பு தப்பா புரிஞ்சிகிற. Literature of the absurd பத்தி எளுதும்போது ‘அபத்த தரிசனம்’ அப்டின்னு எளுதரையா அதப் படிச்சு சிரிச்சேன் பாரு. ஷாஜி ஷாஜின்னு ஒரு பயல் கிடக்கானில்லையா அவனைப்பத்தி நீ எளுதன கட்டுரயப் படிச்சுகூட அவ்ளவு சிரிக்கல, பாத்துக்க. நீ எப்டி கலாப்ரியா ஜெனெரேஷன் ஆன? கிருதா நரச்சுருச்சு, ஆனா நான் ஒன் வயசுக்காரன் டை அடிக்கிரதில்ல அப்டிங்கிறதினாலேயா? நீ ரொம்ப சண்டமாருகம் பன்றியா, அதான். கொஞ்சம் விட்டுப்பிடிடே. அதுக்காக தும்ப விட்டுட்டு வாலப்பிடிக்காத. அப்றம் புலி வாலப் பிடிச்சவன் கத ஆயிடப்போகுது. நல்ல  harmless humor பழகிட்டு வா. ‘கோடோவுக்காக காத்திருத்தல்’ எளுதினான் பாத்தியா அபத்த தரிசனம் கண்ட ஆளு பெக்கெட் அவன் போட்டோவ கீழ கொடுத்துருக்கேன். பாத்துக்க. தாஜா 2 அல்லது ஐயன்மீருக்கு மேலதிகவிளக்கம்
நண்பர்கள் பலர் அவர் என்னுடைய ‘நல்ல’ புகைப்படங்களை அவர் தளத்தில் பிரசுரித்து நான் அவருடைய நல்ல புகைப்ப்டத்தை வெளியிடவில்லை அதனால்தால் தேநீர் அழைப்புக்கு பதிலிலல்ை என்கிறார்கள். ஜெயமோகன் என்ற எழுத்தாளர் மகாகவி பாரதியார் உள்ளிட்ட பிற முக்கியமான எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையும், கவிஞர்களையும் போலவே அல்லலுற்ற ஆத்மா. அவர் விஷ்ணுபுரம் கைப்பிரதியாய் இருந்தபோது அதன் பல படிநிலைப் பிரதிகளையும் பெரிய சூட்கேசில் தூக்கிக்கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன். உட்கார்ந்த இடத்தை விட்டு சிறுநீர் கழிக்கக்கூட எழுந்துபோகமுடியாமல் compulsive- ஆக தொடர்ந்து 120 பக்கங்களெல்லாம் ஒரே இருப்பில் எழுதியதை எனக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த nervous energy வெளிப்படும் ஜெயமோகனோடுதான் என்னுடைய என்றென்றைக்குமான நட்பு இருக்கிறது. பைத்திய நிலையும் நனவின் அறிவுக்குமிடையே ஊசலாட்டத்தில்தான் கலையும் எழுத்தும் பிறக்கின்றன. அப்படி அலைக்கழிக்கப்படும் மனத்தை எலியட் போல கோட் சூட்டு போட்டிருந்தாலும்சரி பஞ்சப் பனாரியாய் கஞ்சாவும் அபினும் உட்கொண்டு புரட்சியாளனாய் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் தேடப்பட்டு உருக்குலைந்து அழிந்த பாரதியாய் இருந்தாலும் சரி   ஊடுருவிப்பார்த்து இனம் கண்டு கொண்டாடி காப்பாற்றுவதே விமர்சனம், கலை இலக்கியச் செயல்பாடு. ஜெயமோகனுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ ஒரு முறை சுந்தர ராமசாமி வீட்டில் அவரைப்பார்த்தபோது அவர் நகத்தைக் கடித்து கடித்து நகக்கண்ணிலிருந்து ரத்தமே வந்துவிட்டதைப் பார்த்தேன். என் நினைவில் அந்தக் காட்சியே அவரது படிமமாய் தங்கிவிட்டது. அந்த அல்லலுற்ற ஜெயமோகனை நான் இந்தத்தளத்தில் எடுத்துப்போட்டிருக்கும் புகைப்படத்தில்தான் மீண்டும் அடையாளம் கண்டேன். ஆகவேதான் நண்பர் ஜெயமோகன் என்ற தலைப்பில் பிரசுரித்தேன். இந்தப் பைத்திய கணங்களுக்கு கலை இலக்கிய வெளிப்பாடுகளில் போற்றத்தக்க இடம் இருப்பதாகவும் அதற்கென்று விழுமியமொன்று இருப்பதாகவும் நான் நினைக்கிறேன். இது பற்றி  நான் சமீபத்தில் நான் எழுதிய பைத்திய நிலையும் கலை இலக்கியமும் என்ற கட்டுரையையும் விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம். என் தனிப்பட்ட வாழ்க்கையையோ பழக்க வழக்கத்தையோ வேறு யாரும் குறிப்பிடுவது எனக்கு சம்மதமில்லாத ஒன்று. ஆனால் ஜெயமோகன் தன் வாழ்க்கையும் பழக்க வழக்கங்களையும் தன் இலக்கியத்தின் பகுதியாகவே கருதி விவாதிக்கவேண்டும் என்கிறார். 
பாரதி விவாதத்திற்கு இந்தக் குறிப்பு எதற்குத் தேவைபடுகிறது என்றால் பாரதி ஒரு பைத்தியக்காரனாகவே அவர் வாழ்ந்த காலத்தில் சித்தரிக்கப்பட்டார். அவர் வந்தேறியாக பாண்டிச்சேரிக்கு ஓடிபோனது, தீவிரமாக தன் மரபு மெய்யியலை பரிசோதித்து புது மனிதனாய் மாறியது எல்லாமே கடுமையான அல்லலுற்றதினால் ஏற்பட்டவை. அவர் வாழ்ந்த காலத்தில் பாரதி ஆங்கிலேயருக்குக் கைகட்டி சேவகம் செய்த ஆதிக்க வர்க்கத்தினருக்கு எதிரான anti establishment எதிர் கலாச்சார கலை இயக்கத்தினரே. உலகெங்கும் முன்னோடி கவிஞர்கள் இவ்வாறாகவே எதிர் கலாச்சார சிறு குழுக்களிடத்தில் உருவாகிறார்கள். ஜெயமோகன் தமிழ் சிற்றிலக்கியச் சூழலில் உருவாகியது போல. நான் இதுவரை பாரதி விவாதத்தில் எதிர் கலாச்சாரம் என்ற பதச் சேர்க்கையைப் பயன்படுத்தவேயில்லை. ஜெயமோகனே மீண்டும் மீண்டும் என் விமர்சன முறைமையை சிறுமைப்படுத்தும் முகமாக எதிர்கலாச்சாரம்  (ஒருவகையான negative connotation உடன்) என்பதையும் நான் பயன்படுத்திய பின் நவீனத்துவ பின் காலனீய என்ற பதங்களோடு சேர்த்து சொல்லியதால் இதை எழுத நேரிட்டது. 
பிரம்மஞான சபை, அது பரப்பிய வேதாந்தம் என்று ஜெயமோகன் குறிப்பிடுகிற விபரமெல்லாம் ராமச்சந்திர குகா போன்றோரின் பெருங்கதையாடல் வரலாறு எழுத பயன்படுமே தவிர இலக்கிய விமர்சனத்திற்கு உதவாது. ஏனெனில் அந்தப் பெருங்கதையாடல் வரலாறு பாரதி எழுதிய தமிழ் நாடு, தமிழ் நாகரீகம் ஆகியவற்றைப் புகழ்ந்து எழுதிய பாடல்களையும் அதனால் அவர் பின்னால் வந்த திராவிடக் கவிஞர்களின் மேல் அவர் செலுத்திய தாக்கத்தையும் பார்க்கவிடாமல் தடுக்கிறது. 
தவிர, வரலாற்று ஆசிரியர்கள் எல்லோருமே ஒரு காலகட்டத்தின் பெரு நிகழ்வை வைத்து மட்டுமே காலகட்டங்களைப் பிரிப்பர். ஆகஸ்ட் 15, 1947 என்ற இந்திய சுதந்திர தினம் இந்திய வரலாற்று தொடர்ச்சியில் ஒரு பெறும் பிளவினை ஏற்படுத்திய ஒன்றாக சாதாரண பள்ளிக்குழந்தை கூட புரிந்துகொள்ளக்கூடியதே. இதனாலேயே சுதந்திரத்திற்கு முன் சுதந்திரத்திற்குப்பின் என்று வரலாற்று காலகட்டங்கள் பகுக்கப்பட்டு ஆராயப்ப்டுகின்றன. பின் நவீனத்துவம் வரலாற்றின் பெரும் நிகழ்வுகள் என்பவற்றை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அறிவுத்தோற்றவியல் பிளவினையும் (epistemological break) கணக்கிலெடுத்துக் கொள்கிறது. இதையே நான் ஜெயமோகனுக்கு புரிகிற வகையில் “‘இன்றைக்கு பாரதியின் மதிப்பு’  என்றால் நாட்காட்டியிலுள்ள தேதியைக் குறிப்பதல்ல  இன்றைக்கு என்ற சொல். அமைதியாய் ஓடும் கங்கையில் வரலாற்றின் சுழிப்புகளைப் பார்த்துத் தொகுப்பதைச் சுட்டுவதல்ல இன்றைக்கு என்ற சொல். ஆகாயகங்கை ஆவேசமாய் தரையிறங்கும்போது சிவனின் ஜடாமுடி தொடும் தருணத்திற்குப் பெயரே இன்றைக்கு.” என்று எழுதினேன். 
அரிதாகவே வரலாற்று நிகழ்வும் அறிவுத்தோற்றவியல் பிளவும் ஒருங்கே நிகழ்கின்றன.  தென்னிந்தியாவில் அமர ஜீவி என்றழைக்கப்படும் பொட்டி ஶ்ரீராமுலு உண்ணவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்த டிசம்பர் 16, 1952 ஆம் தேதியே இந்திய விடுதலை நாளுக்குப் பின் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதும் மொழி வழி தேசிய கற்பிதங்கள் உருவாவதற்கான அடுத்த அறிவுத்தோற்றவியல் பிளவு உண்டான நாளாகும். தமிழர் சரித்திரத்தில் அடுத்த அறிவுத்தோற்றவியல் பிளவு என்பது துரதிருஷ்டவசமாக ஈழத் தமிழர் படுகொலையான கால கட்டமேயாகும்.
புலி ஆதரவு, புலி எதிர்ப்பு, புலிகள் சிறுபான்மையினோர் உறவும் உறவின்மையும் என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் நிரம்பிய சொல்லாடலுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அது என் துறையும் அல்ல. ஆனால் எட்டு கோடித் தமிழர் பார்த்திருக்க சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதும் முள் கம்பி இருப்பிடங்களில் அடைக்கப்ட்டதும், கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக சுமார் மூன்றரை லட்சம் மக்கள் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து அலைந்ததுமே நமது இன்றைய அறிவுத்தோற்றவியல் சட்டகமாக இருக்கமுடியும். இந்த அறிவுத்தோற்றவியல் பிளவுக்கான மெய்யியல் என்ன அதன் வழி ஆத்மார்த்தமாக நம் அகத்துடன் பேசுகின்ற குரல் எங்கேயென்று தேடினால் பாரதியின் கவிக்குரல் ஒன்றே நம் மனத்திற்கு கிட்டக்கூடியதாய் இருக்கிறது.
இந்த தாஜா, மேல்விளக்கம் இவைகளுக்கும் ஜெயமோகனிடருமிந்து நேரடி பதிலில்லையானால் அவர் விவாதத்திலிருந்து விலகியதாகவும் சுப்பிரமணிய பாரதியார் மகாகவி என்றும் எல்லா விமர்சன அடிப்படைகளின்படியும் ஒத்துக்கொள்வதாகவும் நான் கருதுவேன். 
பாரதியின் கவிதைகளை கட்டவிழ்த்து வாசித்தல், க.நா.சு விமர்சன முறை, தமிழ் நவீன கவிதைகள் வாசிப்பு,  Kant- Marx குறிப்பு பற்றி பின்னூட்டத்தில் வந்தகேள்வி ஆகிய விவாத இழைகளை ஜெயமோகன் வந்தாலும் வராவிட்டாலும் நாம் தொடர்வோம்.
நம் உரையாடலைத் தொடர்வதற்காக றியாஸ் குரானாவின் கவிதையை வாசியுங்கள். 
வீட்டில் எவருமில்லாத நேரத்தில் பழைய 
நினைவுகளை பதுக்கிவைத்திருக்கும் 
பொருட்களையெல்லாம் அகற்றிக்கொண்டிருந்தேன்.
சில தற்காலிக சொற்களும்,சில பொருட்களும் 
மேசையிலிருந்து ஜன்னலவழியே பறந்துகொண்டிருந்தன.
அரவணைத்துக்கெண்டு புகைப்படத்திலிருந்த அவளும் 
அவனும் கண்ணீர் மல்க பிரிந்துகொண்டிருந்தனர்.வீட்டை
துப்பரவு செய்வதில் நான் கரிசனமுள்ளவனுமில்லை.
சோம்பேறியைவிட அசட்டையானவன்.வீடெங்கும் ஒரே
பிணநெடி.பலநாள் செத்துக்கிடந்த உடல்களினதைப்போன்ற
நாத்தம். இனிமேலும் சகிக்க முடியாது என்றுதான் சுத்தம் 
செய்ய இன்று தொடங்கினேன்.பாரதியின் கவிதைகள்தான் 
இதற்குக் காரணமென்று கண்டுபிடித்துவிட்டேன்.
அவனுடைய புத்தகத்தை எரிப்பதா புதைப்பதா 
ஒருவாறாய் எரித்து சாம்பலைப் புதைத்துவிட்டு 
வந்ததோடு எனது வேலை முடிந்துவிட்டது.
இறப்பற்று நெடுங்காலம் வாழக்கூடிய கவிதைகளை 
அவன் பெற்று வளர்க்காதது எனக்கும் வருத்தம்தான்.
மேசையில் புத்தகம் இருந்த இடத்தில் ஒரு முறை 
அவனைக்கண்டேன்.ஆவியாகிய அப்புத்தகம் எனது 
வீடெங்கும் அப்போதெல்லாம் அலைகிறது.புத்தகத்தின் 
பக்கங்களைப் புரட்டுவது மாதிரி சப்தங்கள் அறையெங்கும் 
கலவரப்படுத்துகிறது.நேரங்கெட்ட நேரமெல்லாம் யாரோ 
உரத்தகுரலில் கவிதைகளை படித்துக்கொண்டிருக்கிறார்கள். 
எனினும் எனக்கு அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே....

Post a Comment