Saturday, October 29, 2011

முத்தம்


ஆந்த்ரே தார்கோவ்ஸ்கியின் படங்களை நான் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். பல முறை பார்த்ததால்  தார்கோவ்ஸ்கியின் அத்தனை படங்களும் என் நினைவுகளின் அடுக்குகளாய் சேகரமாகிவிட்டன. என் பகற்கனவுகளிலும், பிரேமைகளிலும் தார்க்கோவ்ஸ்கியின் படக்காட்சிகள் அவ்வபோது வந்து போகின்றன. அவைகளின் சங்கேதங்களை முழுமையாக நான் புரிந்து கொண்டுவிட்டேனென்றால் வாழ்வின் மேலுள்ள நம்பிக்கைகள் அனைத்தும் குலைந்துவிடுமோ என்ற பீதி எதிர்பார்க்காத தருணங்களில் என்னை பீடிக்கவே செய்கிறது. புரிபடாத அழகுகளின் பிம்ப நூலகமாக தார்கோவ்ஸ்கியின் படக்காட்சிகளை என்னுள் சேமித்து வைத்திருப்பதால் வேண்டும்போதெல்லாம் விரும்பிய காட்சியை என் மனத் திரையில் விரித்து ஊக்கம் கொள்வேன்.
தானாக என் பகற்கனவில் தோன்றும் போது  பேரழகின் புதிர்களென என்னைக் கலங்க அடிக்கும் தார்க்கோவ்ஸ்கியின் படக்காட்சிகள் என் விருப்ப அகத் திரையிடல்களில் நம்பிக்கைகளின் ஆதாரமாவதன் மர்மமென்ன?
சோலாரிஸ் படத்தில் விண்வெளிக் கப்பலின் ஜன்னல் வழி வியாபகம் பெறும் பௌதீக அண்டத்தின் காட்சிகள் என் கனவா அல்லது துகளிலும் அணுவிலும் கூட இருக்கின்ற யதார்த்தமா? ஐயா, அம்மா எனக்கெதற்கு இப்படியொரு காட்சி? இங்கேயொரு காட்சிப்பிழையில்லையோ? 
ஆப்பிள் கணிணித் திரைதீய வழிகாட்டி விதவிதமான நிலப்பகுதிகளின் வழி பதில் சொல்வதாய் அழைத்துச் செல்கிறான். குறியீடுகளுக்கும் படிமங்களுக்கும் உள்ள அர்த்த எல்லை என்ன என்று காட்டிவிட்டு மறைந்து விடுகிறான். தார்க்கோவ்ஸ்கி நீ கட்டைல போவாய், நீ நாசமாய் போவாய் என்று புழுதி வாரித் தூற்றிவிட்டு ‘Stalker’ படம் பார்த்துவிட்டு மனம் குமுறுகிறேன்.

Stalker படக் காட்சி

ஆந்த்ரே ரூபலேவ் படத்திலா, மிர்ரெர் படத்திலா என்று நினைவில்லை. எழுதும்போதே பகற்கனவுக்குள் சென்றுவிட்டேனோ? பழம்பெரும்  மாளிகையொன்றில் அலங்கார ஆளுயர நிலைக்கண்ணாடி முன் தவழும் குழந்தை, ஸ்லோ மோஷனில் மேலெழும்பிப் பறக்கும் காய்ந்த சருகுகள், முள் கம்பி வேலியைப் பிடித்தபடி நிற்கும் அந்தப் பெண்ணின் முகம், Sacrifice படத்தில் தீப்பற்றி எரியும் அந்த வீடு என எல்லா காட்சிகளும் கலந்து தோன்றி மறைகின்றன.

மிர்ரெர் படக்காட்சி

Sacrifice படத்தில்

எனக்கு நேர்கோட்டில் எழுதவே வருவதில்லை. தொழில் முறையாக எழுத்தை இன்னும் பயிலவில்லை. எல்லா தார்க்கோவ்ஸ்கி பிம்பங்களும் என்னுள் குழம்பிவிட்டன. Tarkovsky retrospective is a failure. ஏதேனும் ஒரே ஒரு காட்சி அதை மட்டும் பிடித்தே நான் தப்பிக்க வேண்டும். சாப்பிடவேண்டும். வேலை செய்ய வேண்டும். உயிர் பிழைத்துக்கிடக்க வேண்டும்.
பன்னிரெண்டே வயதான இவான் இரண்டாம் உலகப்போரின்போது குழந்தை உளவாளியாய் இருக்கிறான். இந்த இவானின் குழந்தைப்பருவம் என்ற தார்க்கோவ்ஸ்கியின் படம் அவருடைய முதல் படம். கனவுகளின் தொகுப்பெனவே நகர்கிறது கதை. விக்கிபீடியாவில் கதையைப் படித்து திரும்பத் தமிழில் சொல்வதற்குத்தான் இன்னும் பலர் இருக்கிறார்களே. இவானின் குழந்தைப்பருவம் படத்தில் அந்தப் பைன் மரக் காட்டினூடே அந்த ராணுவ வீரன் அந்தப் பெண்ணின் பின்னாலே காதலுடன்  செல்கிறான். விழுந்து கிடக்கும் நீண்ட மரத்தின் மேலேறி அவள் நடந்து செல்கிறாள். மரத்திலிருந்து கீழிறங்கிச் செல்லும் அவள் பள்ளம் ஒன்றைத் தாண்டவேண்டும். அதைத் தாண்ட அவளுக்கு உதவ அவள் கைபற்றி தூக்கிவிடுகையில் தன் வசமிழந்து அவளை முத்தமிடுகிறான். பின்னணியில் குண்டுகளின் முழக்கம் கேட்ட வண்னமிருக்கிறது. குண்டுகளை சட்டை செய்யாமல் உணர்ச்சிக்கு ஒப்புக்கொடுத்த முத்தம். நன்றி ஆந்த்ரே, இந்த ஒரு காட்சியை வைத்தே நான் உன்னிடமிருந்து தப்பிவிட்டேன். இல்லை இல்லை உன்னிடம் மீண்டும் சிக்கிக்கொண்டேன்.

இவானின் குழந்தைப்பருவம் என்ற படத்தில் முத்தக் காட்சி
தொடர்புடைய பதிவுகள்:  
இல்லை

Post a Comment