Saturday, October 22, 2011

ஆத்மார்த்தமாக பேசும் கவிக்குரல்கள்: பாரதியும் டி.எஸ்.எலியட்டும்


முன் குறிப்பு: எதிர் அறம் என்ற பதச்சேர்க்கையை நேற்று காலை தட்டச்சு செய்யும்போது மனம் கூசியது; உட்சுருங்கி உடைந்து மௌனமாகி ‘மனதில் உறுதி வேண்டும்’ பாடலை மனனமாகச் சொல்லிப்பார்த்து மீண்டே எழுதினேன்.
பிக்காஸோவின் புகழ் பெற்ற, ஸ்பானிஷ் போருக்கு பிந்தைய ஓவியம், குவர்னிகா, எழுத்தாளர் ஆபிதீன் தளத்திலிருந்து எடுத்தது

டி.எஸ்.எலியட்டின் மொத்த படைப்புகளையுமே பாரதியின் படைப்புகளைப் போலவே ஒரு புத்தகத்திற்குள் அடக்கிவிடலாம். விரல் விட்டு எண்ணத்தக்க படிமங்களும், உவமைகளுமே எலியட்டின் கவிதைகளில் காணக்கிடைக்கின்றன. பூனைகள், காலைப்பனி, மேஜையில் மயக்க நோயாளியைப் போல கிடந்த மாலை,தெருவோர அனாதைக் கிழவன், காஃபி ஸ்பூனால் அளந்த எண்ணங்கள், என்று எளிதாக பட்டியலிட்டு விடலாம். அயோத்திதாசர் பாரதியை பார்ப்பனர் என்றது போலவே எலியட்டின் ஒரு சில வரிகளை வைத்து அவரை யூத வெறுப்பாளர் என்று அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்கள் இருந்தார்கள். நல்ல வேளையாக பாரதியைப் போல எலியட் வறுமையில் உழலவில்லை, வங்கி அதிகாரியாக இருந்தார்.
எலியட்டை விட வயதில் மூத்த பவுண்ட் எலியட்டை விட எராளமாக எழுதிக்குவித்த பவுண்ட், எலியட்டையே கவி என்று கொண்டாடினார்.  நவீன காப்பியமான யுலிசஸ் எழுதிய ஜாய்ஸ், தத்துவ அறிஞரும் கடவுள் மறுப்பாளருமான ரஸ்ஸல் எலியட்டையே கவி என்றறிந்திருந்தனர்.  எதனால்? எலியட்டின் கவிதையிலே வாசகனின் அகத்தோடு ஆத்மார்த்தமாய் பேசக்கூடிய குரல் இருந்தது. முதலாம் உலகப்போருக்குப் பின் எழுதுகிற எலியட்டின் கவிதையில் பேசுகிற குரல் ஐரோப்பிய சமூக ஆன்மாவின் குரல். பாழ் நிலத்தில் அந்தக்குரல் தெள்ளத்தெளிவாய் Four quartets ஐ விட அணுக்கமாக வாசகனிடத்தே பேசுகிறது. அந்தக் குரல் உடைந்து போயிருக்கிறது; அவநம்பிக்கையுடனிருக்கிறது. கடவுள் கைவிட்டுவிட்ட குரல் அது. அல்லது கடவுளை கை விட்டு விட்டதால் பாதுகாப்பற்று அமைதியின்மையில் அலைவுறும் குரல். எதையாவது பற்றிக்கொள்ள முடியாதா என்று பரிதவித்து இலக்கிய பிரதிகளெங்கும் அலைந்து உகந்த வரிகளைத் தேடி அவைகளை கோர்த்து கோர்த்து சில சமயம் உரையாடலாய் சில சமயம் பிதற்றலாய் சில சமயம் தெருச்சொல்லாய் பிருகதாரண்ய உபநிடத்திலிருந்து சில வரிகளையும் சேர்த்துக்கொண்டு ஹிரானிமோ மீண்டும் பைத்தியமாகிவிட்டான் ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஒரு collage ஆக அமைகிறது. போருக்குப் பிந்ததைய சமூகத்தின் தீவிர நெருக்கடி ஒவ்வொரு பிரஜையின் மனத்திலிருக்க அந்த மனத்தின் குரலாகவே எலியட்டின் கவித்துவ குரல் பாழ் நிலத்தில் அந்தரங்க சுத்தியுடன் பேசுகிறது. எலியட்டின் ஆத்மார்த்தமாகப் பேசும் கவித்துவ குரலை பவுண்டின் மேதமையே உடனடியாக அடையாளம் காணுகிறது. பின்னாளில் எலியட் தன்னுடைய இலக்கிய வம்சாவழியை தன்னுடைய முந்தையத் தலைமுறையினரான ரொமாண்டிக் கவிகளைத் தவிர்த்துவிட்டு ஆங்கில மெய்யியல் கவிஞர்களையே கவிதைகளையே தன்னுடைய இலக்கியப் பிரதிகளின் மூதாதைகளாக அடையாளம் காட்டுகிறார். ஆங்கில இலக்கிய பாரம்பரியமும் நவீனத்துவமும் ஒரே சமயத்தில் எலியட்டின் வாசகனுக்குக் கிடைக்கிறது.  ஒட்டு மொத்த சமூகமும் ஒருங்கிணைய தன்னை மீட்டெடுத்துக்கொள்ள தன்னை சுத்தி பண்ணிகொள்ள கலாபூர்வமாக மீண்டெழ வாய்ப்புகள் உருவாகின்றன. 
எலியட்டின் ஆத்மார்த்தமாக அந்தரங்க சுத்தியுடன் பேசும் கவிக்குரலுக்கு நிகரானது நம்முடன் பேசும்  பாரதியின் கவிக்குரல். எலியட்டின் கவிக்குரல் உள்ளடங்கி இருக்கிறதென்றால் பாரதியின் கவிக்குரலில் உணர்ச்சி தூக்கலாய் இருக்கிறது. பாரதிக்கு தமிழிலக்கிய பாரம்பரியம் பக்தி கவிதைகளின் மூலமேதான் வந்தடைகிறது. காட்சிப்படிமங்களுடன் கூடிய சங்க அகப்பாடல்களை இன்றைக்கு நாம் அடங்கிய தொனியுள்ளதாய் கணிப்பதும் எனவே ஏ.கே.ராமனுஜனின் மொழிபெயர்ப்பினால் எந்த சேதாரமும் இல்லாமல் எல்லோரையும் போய்ச்சேர்வதையும் வைத்து அவை நிகழ்த்துகலைகளாக இருந்தபோது அதே அடங்கிய தொனியோடு இருந்தவை என்று சொல்வது கடினம். ஏனெனில் நாட்டிய சாஸ்திரம் போல் தொல்காப்பியம் சாந்தத்தை தன்னுள் ஒரு மெய்ப்பாடாகவும் வைத்திருக்கவுமில்லை முதன்மைப்படுத்தவுமில்லை. இரண்டாவதாக திணை மயக்கப்பாடல்களை இறுதி வகைப்படுத்துதல்கான   முறையை சொல்லுமிடத்து உரிப்பொருளை வைத்தே அதாவது உணர்ச்சியை வைத்தே கவிதையைப் பிரிக்கவேண்டும் என்கிறது. இந்த இடத்தில் ஏ.கே.ராமானுஜனின் மொழிபெயர்ப்பில் நம்மாழ்வாரின் பாசுரங்கள் சங்கப்பாடல்கள் அடைந்த அதே வரவேற்பை கவிதைகளாய் பெறவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
பக்தியின் விசிஷ்டாத்வதமும், உணர்ச்சி உத்வேகமும் பெற்ற கவிக்குரல் பாரதியிடத்தே இயலுலக விருத்தி, தேக விருத்தி, சமூக விருத்தி, தேச விருத்தி, விடுதலை விருப்பம் கொண்ட எனவே தனித்துவமும் சுத்தியும் தீவிரமும் கொண்டதான உள் கலாச்சார முகம் நீக்கி திரும்பிவிட்ட ஆத்மார்த்தமாக வாசகனின் அகம் நோக்கி பேசக்கூடிய குரலாகிவிடுகிறது. தமிழின் நவீன கவிகளிலே  நகுலனிடத்தே இந்தக்குரலின் நீட்சியை தூக்கலாகக் கேட்க முடியும். நகுலன் தன்னுடைய ‘இன்று’ நாவலில் கைவல்ய நவநீதத்தை தன் உரையாடல் பிரதியாகக் கொண்டிருப்பதை நுட்ப வாசகர்கள் கவனிக்க வேண்டும். நகுலன் மகாபாரதத்தை வைத்து நீண்ட கவிதைகள் எழுதியிருப்பதையும் கவனிக்க வேண்டும்.  இப்போது பாரதியின் மனதில் உறுதி வேண்டும் கவிதையை வாசித்துப் பார்ப்போம்.
மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிரே பெருமை வேண்டும்,
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவமண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும்,
ஓம், ஓம், ஓம்
முதல் வரியில் ஆத்மார்த்தமாக வாசக அகம் நோக்கி பேசுகிற குரல் தனக்குத்தானே கவிதைக்குள் பேசுகிற குரலாக இருப்பதையும் அது விரைவிலேயே சமூக விருத்தி வேண்டுகிற குரலாகவும் மாறிவிடுவதையும் கவனியுங்கள். அதாவது எலியட்டிடம் போருக்கு பிந்தைய சமூகத்தின் குரலாக உருப்பெற்ற  கவித்துவ குரல் பாரதியிடத்தே தன் விடுதலையை சமூக விடுதலையோடு நிரந்தரமாகப் பிணைத்துவிட்ட குரலாக தீவிரமடைகிறது. பாரதி கவிதைகளில் நிகழ்த்துதல் இந்த தனி மனிதனின் நீட்சியாகிவிட்ட  சமூகம் என்ற ஊடாட்டத்தில் நிகழ்வதால் ‘நல்லதோர் வீணை செய்தே’ போன்ற பாடல்களில் எலியட்டின் கவிக்குரலுக்கு நிகராக வாதையுற்ற குரல் நம்மோடு பேசுகிறது. 
பாரதியின் கவிக்குரல் தமிழின் உள் கலாச்சார முகம் நோக்கித் திரும்பிவிட்டதால்தான் அவருக்குப்பின் வந்த திராவிட இயக்க கவிகளுக்கும் பாரதியே ஆதர்சமாகிறார். பாரதி எழுதிய தமிழ் மொழியையும் தமிழ் நாட்டையும் தன் கவித்துவகுரலின் நீட்சியாக்கி எழுதிய பாடல்களை நாம் ஊன்றிப்படிக்க வேண்டும். அவையே தமிழ் இலக்கிய பாரம்பரியம் பாரதியிடத்து சங்கமிப்பது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை நவீன கவிகளுக்கும் வெகுஜன கவிகளுக்கும் தோற்றுவாயாய் இருக்கிறது. பக்தி இயக்கம், விடுதலைப் போராட்டம் போலவே திராவிட இயக்கமும் வெகுஜன இயக்கமாய் தமிழ் நாட்டில் பரிணமித்தபோது சுதந்திர இந்தியாவின் இதர பிராந்திய வெகுஜன மொழி இயக்கங்களில் இருந்து வேறுபட்ட திராவிட இயக்கம் கடவுள் மறுப்புக்கொள்கையை பிரதானமாய் கொண்டிருந்தது. பாரதியோடு  திராவிட இயக்கம் திறந்திருக்க வேண்டிய தமிழ் கவிதா மரபின் வாசல் அடைக்கப்பட்டு பக்தி இலக்கியங்கள் பொதுத்தளத்தில் வாசிக்கப்படாமல், பாரதி தனியே சங்க இலக்கியங்கள் தனியே என்று மரபின் தொடர்ச்சியோடு உறவுபடுத்தப்படாமலேயே பொதுத்தளத்தில் வாசிக்கும்படியாயிற்று. கன்னடியர்களுக்கும், மலையாளிகளுக்கும் அவர்களின் மொழிப்பாரம்பரியமும் நவீனமும் சேர்ந்து வெகு ஜன தளத்தில் கிடைத்துபோல நமக்குக் கிடைக்கவில்லை. வெகு ஜன தளமில்லாத தமிழின் முதல் நவீன கவிகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன் தவிர வேறு யாருக்கும் தமிழ் செவ்விலக்கியத்தில் பரிச்சயமில்லை. திராவிட வெகு ஜன இயக்கத்தில் பங்கேற்காத அவர்களுக்கு சங்க இலக்கியமும் கிடைக்கவில்லை பக்தி இலக்கியமும் கிடைக்கவில்லை. பாரதியோடு ஒரு உப்புக்கு சப்பாணி உறவே இருந்தது. ஆங்கில நவீன கவிதையை ஆங்கிலத்தில் படித்து தமிழில் எழுதும் நவ காலனீய கவிகளாய் அல்லது அவர்களை முன் மாதிரியாகக் கொண்டு எழுதும் கவிகளாய் ஒரு தலைமுறை சேர்ந்துவிட்டது.
பாரதியின் ஒரு துண்டே நம்மிடம் இன்று இருக்கிறது. அந்த ஆத்மார்த்தமாக அந்தரங்க சுத்தியுடன் நம் அகத்தோடு பேசக்கூடிய குரலாக பாரதியின் குரல் மட்டுமே இருக்கிறது. ‘தந்தையர் நாடெனும் பேச்சினிலே‘  என்று சொல்லும்போது விட்டகுறை தொட்டகுறையாக கண் கலங்கத்தான் செய்கிறது. 
‘நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ’ என்பதை வாசிக்கும்போது நெஞ்சு விம்மித்தான் தணிகிறது.
ஆனால் இன்று பாரதியை நாம் துண்டு துண்டாகவே அறிகிறோம். அவர் மூலம் திறக்கும் வாசல்களின் வழி பக்தி இலக்கியத்தையும் சங்க இலக்கியத்தையும் எனவே காப்பியங்களையும், இலக்கண நூல்களையும், உரை நூல்களையும் பாட்டன் சொத்தாக நாம் இன்னும் சுயபோகமாகப் பெற்றிருக்கவில்லை. 
அதனால் நாம் இழந்தது என்ன தெரியுமா? 
தனி நபர் விடுதலையும், சக மனித விடுதலையும், சமூக விடுதலையும் நிரந்தரப் பிணைப்பிலிருத்தும் கவிக்குரலை. We have lost access to our transcendental ethical inner voice.
ஐயா பொதுஜனங்களே ‘இன்றைக்கு பாரதியின் மதிப்பு’  என்றால் நாட்காட்டியிலுள்ள தேதியைக் குறிப்பதல்ல  இன்றைக்கு என்ற சொல். அமைதியாய் ஓடும் கங்கையில் வரலாற்றின் சுழிப்புகளைப் பார்த்துத் தொகுப்பதைச் சுட்டுவதல்ல இன்றைக்கு என்ற சொல். ஆகாயகங்கை ஆவேசமாய் தரையிறங்கும்போது சிவனின் ஜடாமுடி தொடும் தருணத்திற்குப் பெயரே இன்றைக்கு.
ஐயா பொது ஜனங்களே ஈழத்தில் நடந்து முடிந்துவிட்ட தமிழினப் படுகொலைக்குப்பின் நாம் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் வையுங்கள்.  
இன்னும் ஓரிரு பதிவுகளில் என் தரப்பு வாதம் முற்றுப்பெறும்.

Post a Comment