Tuesday, October 18, 2011

ஜெயமோகனுடன் விவாதத்திற்கான முதல் மூன்று சட்டகங்கள்

இன்று காலை ஜெயமோகனின் தளத்திலிருந்த எனக்கான நல்வரவு கட்டுரையைப் பார்த்து உடனடியாக அதிலுள்ள சில தகவல் பிழைகளை களையுமாறு கடிதமெழுதினேன். அப்பிழைகளை அவர் களைந்துவிட்டது கண்டு மகிழ்ச்சி.

அவர் கட்டுரைகளில் பொதுவாகக் காணப்படும் சில அம்சங்கள் எனக்கு நல்வரவு கூறிய கட்டுரையிலும் இருப்பதால் அந்த அம்சங்களைச் சுட்டிக்காட்டி விவாதத்தை முன் எடுத்து செல்வதற்காக முதல் மூன்று சட்டகங்களை முன் வைக்க விரும்புகிறேன்.

விவாத முறைமை: வெற்றி தோல்விகளை நோக்கிய ஒன்றாக விவாதங்களை அவர் கருதுகிறார். விவாதமொழியை அடிமுறையாக அவர் கருதுவதினால்தான் மொழி வர்மானி என்று அவர் தன்னை தன் கடிதத்தில் குறிப்பிட்டுக்கொள்கிறார். எதிராளியை ஏமாற்றி அடிகொடுத்து வெற்றிபெறுவது அடிமுறையில் வேண்டுமென்றால் பாராட்டப்படலாம் ஆனால் விவாதத்தில் உதவாது. இரண்டு திருதராஷ்டிர தழுவல்கள் இரண்டு அடிவயிற்று உதைகள் என்று அவர் எனக்கான நல்வரவினை எழுதியிருப்பதை கவனியுங்கள். தமிழவன், நாகார்ஜுனன், நான் முக்கியமான அறிமுகங்களையும் இன்றைக்கும் விவாதங்களை நிர்ணயிக்கின்ற பங்களிப்புகளை நிகழ்த்தியிருக்கிறோமாம். சரி சந்தோஷம். ஆனால் அடுத்த சில வரிகளிலேயே ‘இந்த கும்பல் இன்றைக்கு காலாவதியாகிவிட்டது‘ என்ற விவரணை வருகிறது.  எப்படி ஐயா ‘கும்பல்‘ ‘காலாவதி‘ என்றெல்லாம் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் இல்லையே நான் அவர்களுடைய பங்களிப்பை மறுக்கவில்லையே என்பார். ஆனால் விவாதமோ சிறுமைப்படுத்துதல்களை நோக்கியே போய்க்கொண்டிருக்கும். விவாதிப்பவர்கள் வேறு வேலையைப்பார்ப்போம் என்று போய்விடுவார்கள். விவாதங்கள் வெற்றி தோல்விகளை நோக்கி நகர்பவை அல்ல, தவறென்றால் திருத்தி மேலெடுத்துச் செல்லப்படுபவை இந்த நோக்கமே தனக்கும் இருக்கிறது என்று ஜெயமோகன் தன் விவாத முறைமையை நெறிப்படுத்திக் காட்டவேண்டும். நல்வரவு முகமனே இப்படி மல்லர் வணக்கம் போல் இருக்கிறதே!

கலைச்சொற்கள் பயன்பாடு: எங்களுடைய பங்களிப்புகள் வெறும் கலைச்சொற்களே என்று நல்வரவுக்கட்டுரையிலும் இதர பல கட்டுரைகளிலும் தொடர்ந்து சொல்லிவரும் ஜெயமோகன் இந்தக்கலைச்சொற்களைத் தன்னுடைய ரசனை விமர்சன கட்டுரைகளில் மிக அதிகமாகப் பயன்படுத்துபவராக இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. பிரதி, பனுவல், சொல்லாடல், கதையாடல், மொழிபு ஆகியவை உள்ளடக்கி  இன்று சுலபமாக எல்லோராலும் பயன்படுத்தப்படும் பல கலைச்சொற்கள் தமிழவன், நாகர்ஜுனன், பிரேம், மற்றும் பலரால் உருவாக்கப்பட்டவை. Text என்ற வார்த்தைக்கு நேரடி மொழிபெயர்ப்பு ‘பாடம்’ என்பதுதான். Text வாசிப்பினால் பல அர்த்தங்களை ஆசிரிய நோக்கங்களை மீறி பெறுகிறது என்பதை சுட்டுமிடத்தில் ‘பிரதி’ என்ற சொல்லையும் முடிந்தபொருளை, ஒற்றைப்பொருண்மையை குறிக்கின்ற மதச்சூழல்களில் எனவே கட்டவிழ்ப்பினை வேண்டி நிற்கின்ற சூழல்களில் ‘பனுவல்’ என்ற பதத்தையும் பயன்படுத்தினோம். Discourse என்ற அமைப்பியல் கலைச்சொல்லை ‘சொல்லாடல்‘ என்று தமிழில் பயன்படுத்த தமிழவனும் நாகார்ஜுனனும் தங்களுக்குள் நிகழ்த்திய உரையாடலை நாகார்ஜுனன் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். பின் நவீன சொல்லாடலை தமிழில் உருவாக்குவது எங்களுக்கு சுலபமானதாக இருக்கவில்லை.  தமிழவன் பிரதியென்கிறார், முத்துக்குமாரசாமி பனுவல் என்கிறார் என்று மட்டுமே புரிந்துகொள்கிற ஜெயமோகன் அமைப்பியல், பின் நவீனக் கலைச்சொற்களை அவற்றின் தத்துவ அரசியல் பின்புலங்களை கொஞ்சமும் மதிக்காமல் தன்னுடைய ரசனை விமர்சன கலைச்சொற்களான உள்ளொளி, தரிசனம், முதலியவற்றோடு சேர்த்து சகட்டுமேனிக்கு கட்டுரைகள் எழுதிக்குவித்துள்ளார். இவ்வாறாகவே தாமிரவருணியில் மழை பெய்ததும் வெள்ளம் கரை புரண்டு ஓடியதும். வெவ்வேறு கலைச்சொல்லாக்கங்களின் வெவ்வேறு தத்துவப்பின்புலங்களை அறிந்தவர்களுக்கு ஜெயமோகனின் பயன்படுத்துதல்கள் கடுமையான dissonance ஐ தருகின்றன. அவர் கே.சச்சிதானந்தன், நாகராஜ், நித்தி ஆகியோருடன் நிகழ்த்திய உரையாடல்கள் எந்த பயனையும் தந்ததாகத் தெரியவில்லை. எங்ககளைவரையும் துண்டு துண்டாய் அறிமுகப்படுத்தியவர்கள், புது மோஸ்தர் என்பதினால் அறிமுகப்படுத்தியவர்கள் என்றெல்லாம் புகார் சொல்லும் ஜெயமோகன் நாங்கள் யாராவது இரு வேறுபட்ட தத்துவ அரசியல் பின்புலங்களையுடைய கலைச்சொற்களை அவரைப்போல் ஏதேனும் ஒரு கட்டுரையிலாவது சகட்டுமேனிக்கு பயன்படுத்தியிருக்கிறோமோ என்று அவர் சுட்டிக்காட்டவேண்டும்.இல்லை ராஜ் கௌதமன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, நோயல், பூரணச்சந்திரன், எஸ். சண்முகம்,ஜமாலன், வளர்மதி, ராஜன் குறைஅ.மார்க்ஸ்,யமுனா ராஜேந்திரன், ரவிக்குமார்,ஆர்.முத்துகுமார்,வாசுதேவன்  என்று யாராவது அமைப்பியல், பின் நவீனக் கலைச்சொல்லாக்கங்களை எந்தக் கட்டுரையிலாவது அவற்றின் தத்துவ அரசியல் பின்புல ஒத்திசைவில்லாமல் பயன்படுத்தியிருக்கிறார்களா என்றும் அவர் சொல்லவேண்டும். அப்படி சகட்டுமேனிக்கு பயன்படுத்துபவர் ஜெயமோகன் ஒருவர்தான். ஆரம்பத்தில் அவர் தன்னுடைய வலதுசாரி அரசியலுக்கு ஏற்ப அமைப்பியல், பின் நவீனத்துவ கலைச்சொற்களை co-opt செய்கிறார், appropriate-செய்கிறார் என்றே நான் நினைத்ததுண்டு. அவர் தன்போக்கில் பயன்படுத்துகிறார் என்பது அவர் நடத்திய பாரதி விவாதங்களின்போதுதான் நான் கண்டுகொண்டேன். இப்போது நடக்கப்போகிற விவாதத்திலாவது ஜெயமோகன் கலைச்சொற்களை சரியானபடி அவற்றின் தத்துவ அரசியல் பின்புலன்களுக்கு ஏற்ப பயன்படுத்தவேண்டும்.

தகவல் பிழைகள்: பொதுவாக ஜெயமோகன் தன்னுடைய தகவல்களை சரிபார்ப்பதில்லை. இந்த நல்வரவு கட்டுரையிலேதான் எவ்வளவு தகவல் பிழைகள்!. சிலவற்றுக்கு உடனடியாக கடிதமெழுதினேன். இன்னும் பலவற்றைப்பாருங்கள்: நான் ரோலன் பார்த், மிகைல் பக்தின் பற்றி ஒரு கட்டுரை கூட தமிழில் இன்றுவரை எழுதியிருக்கவில்லை. தமிழவனும் நாகார்ஜுனனும்தான் எழுதியிருக்கிறார்கள். அப்புறம் எப்படி நான் எழுதி, நாகர்ஜுனன் வந்த பிறகு நான் பின்னகர, அதன் பின் பிரேம் வரமுடியும்? எழுதப்பட்டவைகளையாவது சரியாகப்படிக்க வேண்டுமா இல்லையா?  போதாக்குறைக்கு நகுலனை நான் போற்றி எழுதியகட்டுரையை தூற்றி எழுதியதாய் குற்றச்சாட்டு வேறு. பேசப்படும் பொருளுக்கு சம்பந்தமில்லாத  அதிகப்படி தகவல்களையும் அவர் தவிர்ப்பது நல்லது.

இன்றைக்கு இந்த முதல் மூன்று சட்டகங்களை எழுதவே நேரம் கிடைத்தது. நாளை அவர் பதிலளித்தபின் மேலும் சில.

ஜெயமோகனும் அவருடைய விவாதசட்டகங்களை முன் வைக்க வேண்டும்.வாசகர்களும் முன்வந்து விவாதம் ஆரோக்கியமாக நடைபெற உதவலாம்.
Post a Comment