மகாபாரதம் கதை சொல்லலாகவும் கூத்தாகவும் சடங்குகளுடன் கூடிய திருவிழாவாகவும் வட தமிழ் மாவட்டங்களில் கிராமங்களில் நிகழ்த்தப்படுகிறது. 1985-இலிருந்து மகாபாரதக் கூத்தினை நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன். ஆரம்பத்தில் கூத்தினை நாடகமாக மட்டுமே ஆய்வு செய்து வந்த நான் முழு மகாபாரதத் திருவிழாவையும் அதன் சடங்குகளையும் என் ஆய்வுப்பொருளாக 2000 த்திலிருந்து விரிவு செய்தேன். காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள 51 கிரமாங்களில் பாரத விழா எப்படியெல்லாம் நிகழ்த்தப்படுகிறது என்று படித்து வந்த நான் 2007-இலிருந்து காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள தக்கோலம், தூசி, அரியனூர் கிராமங்களின் பாரதவிழாக்களை எங்கள் மையத்தில் வேலை செய்த நண்பர்களின் மூலம் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறேன்.
மகாபாரத விழாவில் துரியோதனனை பீமன் கொல்வது படுகளம் என்ற பெயரில் நாடகமாகவும் சடங்காகவும் நிகழ்த்தப்படுகிறது. இந்தப் படுகளம் நிகழ்வு போரும் அதன் பேரழிவும் எப்படி நம் ஒவ்வொருவரின் பங்களிப்பினாலும் தவிர்க்கவியலாமல் ஏற்படுகிறது என்பதை நிகழ்த்திக்காட்டுகிறது என்பது என் வாதமாகும்.
படுகளம் நிகழ்வு பற்றிய என் ஆய்வுக்கட்டுரையை நாளை சென்னை நேரம் மாலை 7.45க்கு அமெரிக்க நாட்டுப்புறவியல் கழகத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் ஐஐடியிலுள்ள வீடியோகான்ஃபெரென்ஸ் மூலம் படிக்கிறேன். என்னுடன் மகாபாரத பிரசங்கியார்
ஏ.கே. செல்வதுரையும், அரியனூர் கிராமத் தலைவர் ஜெயச்சந்திரனும் பங்குபெறுகிறார்கள். உலகக் கதை சொல்லும் நிறுவனத்தின் இயக்குனர் எரிக் மில்லர்
தலைமை வகிக்கிறார். அமெரிக்க நாட்டுப்புறவியல் கழகத்தின் வருடாந்திரக் கூட்டம் நடைபெறும் இண்டியானா பல்கலைக்கழகத்தில் அமெரிக்க நாட்டுப்புறவாழ்வு மையத்தில் பணிபுரியும் கேத்ரின் ஹெர்ஸ்ட் தலைமை வகிக்கிறார். அண்ணன்மார்சுவாமி கதையை ஆய்வு செய்த பிரெண்டா பெக் என் கட்டுரை சார்ந்து விவாதிக்கிறார். அதைத் தொடர்ந்து எரிக் மில்லர் வீடியோ கான்ஃபெரன்சினை மானிடவியல் ஆய்வுகளுக்கு பயன்படுத்துவது குறித்த தன் ஆய்வுக்கட்டுரையை வாசிக்கிறார்.
இந்த நிகழ்வில் விருப்பமுள்ளோர் அனைவரும் இணைய வெப்காஸ்ட் மூலம் பங்கேற்கலாம். என்னுடைய கட்டுரை, எரிக் மில்லரின் கட்டுரை, நிகழ்ச்சிநிரல், பங்கேற்போர் விபரம் அனைத்தையும் கீழுள்ள சுட்டியில் காணலாம்:
http://www.storytellinginstitute.org/36.html
விருப்பமுள்ள நண்பர்கள் இணையம் வழி பங்கேற்குமாறு அழைக்கிறேன்.
இணையதள வெப்காஸ்ட் தளம் அக்டோபர் 15, சென்னை நேரம் மாலை 7.45 முதல் கீழுள்ள சுட்டியில் நீங்கள் பங்கேற்கத் தயாராக இருக்கும்.
http://www.indiana.edu/~video/stream/liveflash.html?filename=afs-wsi
No comments:
Post a Comment