Tuesday, October 25, 2011

ஜென் தருணத்திற்கான முடிவுறா சந்தர்ப்பங்கள் (ஜெயமோகனுக்கு)


அன்புள்ள ஜெயமோகன்:
உங்களுடைய நன்றிக் கடிதம் படித்தேன். நாகர்கோவிலில் மின் தடை இவ்வளவு அதிகமாக இருப்பது கவலையைத் தருகிறது. சிறு தொழில்கள் என்ன ஆகும்?
நான் முன் வைத்த வாதத்தை நீங்கள் புரிந்து கொண்ட முறையில் இன்னும் சில பிழைகள் இருக்கின்றன. ஆத்மார்த்தமான அக எழுச்சி பாடல்களை எழுதியிருக்கிறார் பாரதி என்று நான் சொல்லவில்லை. நீங்கள் சொல்வது போல பிழைபட்டுச் சொல்கையில் அக எழுச்சிப்பாடல்கள் என்பவை பாரதி எழுதிய இதர வகைப்பாடல்களான விடுதலைப்போராட்ட பாடல்கள், பக்திப் பாடல்கள் போல இவையும் ஒரு வகை என்பதாகக் குறுகுகிறது.  
ஆத்மார்த்தமாக நம்முடைய (வாசகனுடைய) அகத்தோடு பேசக்கூடிய குரலைக் கொண்டிருப்பவை பாரதின் பாடல்கள் என்பதே என் மைய வாதம். இந்தக் குரலின் தன்மையைச் சுட்டிக்காட்டவே டி.எஸ். எலியட்டின் ‘பாழ் நிலத்தோடு’ நான் ஒப்பிட்டுக்காட்ட வேண்டியிருந்தது. கவிதையில் ஆத்மார்த்தமாக பேசும் இந்தக் குரலின் அந்தரங்க சுத்தியை மேலும் மேலும் தூய்மையாக்கவே சங்க அகப்பாடல்களிலும் சரி, பக்திக் கவிதைகளிலும் சரி தீவிர கவித்துவ முயற்சி நடந்திருக்கிறது. இந்தக்குரலை இலக்கியப்பாரம்பரியமாகப் பெறும் பாரதி, தன் மரபு மெய்யியலை தீவிரமான விசாரணைக்குட்படுத்தி தன் விடுதலை, சக மனித விடுதலை, சமூக விடுதலை மூன்றையும் நிரந்தரப் பிணைப்பிலிருத்தும் கவிக்குரலை உருவாக்குகிறார். இதனால் பாரதியின் அத்தனை பாடல்களுமே -ஒரு சில என்று நீங்கள் குறிப்பிடுவதுபோலில்லாமல்- மெய்யியல் கவிதைகளாக இருக்கின்றன.
அவ்வாறு பாரதி தன் கவிக்குரலை சுத்தியுடையதாய் செய்தது நீங்கள் குறிப்பிடுகிற பத்தொன்பதாம் நூற்றாண்டின் நவ வேதாந்த இயக்கமா, முப்பால் மணி குறிப்பிடுவதுபோன்ற பாண்டிச்சேரி தலைறைவு  வாழ்க்கையில் பாரதி விசிஷ்டாத்வைதத்திற்கு மாறியதா என்ற வரலாற்றுத் தரவு சார்ந்த காரண காரியங்களைச் சற்றே விவாதத்திலிருந்து விலக்கிவைப்போம். ஏனெனில் அத்வதை வேதாந்தம் பாரதியின் கவிக்குரலை உருவாக்கத்தக்க ஆற்றல் கொண்டதா, இந்திய மரபுகளில் அத்வைத வேதாந்தம் என்ன பங்காற்றியிருக்கிறது, அதற்கும் இந்திய அழகியலுக்குமிடையிலுள்ள தொடர்புகள் என்ன என்பதெல்லாம் தனியான நீண்ட விவாதத்திற்கும் பரிசீலினைக்கும் உரியவை.
பாரதி இவ்வாறாக உருவாக்கிக்கொண்ட கவிக்குரல் காண்ட் குறிப்பிடுவதுபோன்ற Transcendental ethical inner voice என்றும் நான் சொல்லியிருப்பதை கவனியுங்கள். பாரதி தன் கவிக்குரலைக் கண்டுபிடித்தபின் எழுதிய அத்தனை கவிதைகளுமே தேசபக்திப்பாடல்கள், பக்திப்பாடல்கள் என அனைத்துமே இறுதியான பரிபூரண உண்மையைச் எடுத்தியம்புகின்ற பாடல்களாகிவிடுகின்றன. தேசம், மொழி, பெண் விடுதலை, சாதிகளும் வர்க்கங்களுமற்ற சமூகம் எல்லாமே பாரதியிடத்து மெய்யியலின் பரிபூரண இறுதி உண்மைகளாகின்றன. மாகாளியும், பராசக்தியும், சுதந்திர தேவியும், பாரத மாதாவும் பாரதியிடத்தே ஒத்த ஆன்மீக வடிவங்களாகின்றனர். 
சுதந்திரப் போராட்ட காலத்தில் பல்லாயிரக்கணக்கோரை  செயலுக்குத் தூண்டும் சக்தியை (agency) கொடுக்கும் வல்லமை பாரதியின் கவிதைகளுக்கு இருந்ததும் அதனால்தான். சுதந்திர இந்தியா, திராவிட இயக்க காலகட்டம், ஈழத்தமிழர் இனப்படுகொலை ஆகிய மூன்று அறிவுத்தோற்றவியல் சட்டகங்களுக்குள்ளே (epistemological frameworks)  வைத்து பாரதியின் கவிதைகளை கட்டவிழ்த்துப் படித்தாலே கவிதையயும் நம் காலகட்டத்தையும் நாம் அறிந்துகொள்வோம் என்பது என் வாதத்தின் முறையான நீட்சியாகும். ஈழத்துக் கவிஞர் றியாஸ் குரானாவின் 'எனது அறையில் பேயாகி அலைகிறது பாரதியின் கவிதைகள்' என்ற கவிதை பாரதியின் தேச பக்திப்பாடல்களிலுள்ள மெய்யியல் உண்மையான தேசம் என்பதினை நம் காலகட்டத்திற்கேற்ப கட்டவிழ்த்து காட்டுகிறது என்பது என் துணிபு.
மற்றபடி தன் மெய்யியல் மரபுகளைத் தீவிர விமர்சனத்திற்கு உள்ளாக்கி transcendental ethical inner voiceஐ அடையாளம் கண்டு அதை நம் அகத்தோடு  ஆத்மார்த்தமாக பேசுகிற கவிக்குரலாய் சுவீகரிப்பவனை எல்லா மொழிகளுமே, எல்லா பண்பாடுகளுமே மகாகவி என்று மட்டுமல்ல அதி மானுடன், யுக புருஷன் என்றெல்லாம் கூட கொண்டாடத்தான் செய்யும். நீங்கள் இப்பொழுது எழுதியிருக்கும் பாரதி மகாகவியே என்ற கட்டுரை உங்களுக்கு நீங்களே எழுதிக்கொண்ட self help recipeயே தவிர வேறொன்றுமில்லை. உங்களைத்தவிர எல்லோருக்கும் இலக்கிய அடிப்படைகளின்படி பாரதி மகாகவி என்று நன்றாகத் தெரிந்தேயிருக்கிறது.
என் விமர்சன முறைமையோடும் அது சொல்கிற விஷயங்களோடும் நீங்கள் உரையாடுவதும் உரையாடமலிருப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் அவற்றைப் பிழைபட புரிந்துகொள்ளலாகாது. 
றியாஸின் தேநீர் சீக்கிரம் ஆறிவிடுகிறது. என் தேநீர் விருந்தினில் தேநீரின் சூடும் ஆறுவதில்லை சுவையும் குன்றுவதில்லை. உங்கள் ஜென் தருணத்தினை தேர்ந்தெடுப்பதற்கு முடிவுறா சந்தர்ப்பங்கள் காத்துக்கிடக்கின்றன.
அன்புடன்,
எம்.டி.முத்துக்குமாரசாமி

Post a Comment