Friday, October 21, 2011

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் விவாதம் தொடர்ச்சி


மீண்டும் சொல்கிறேன். தரவரிசைப்படுத்துதல் இல்லாத விமர்சனை முறைமையை கையாளும் நான் என் விமர்சன முறைக்கு பொருந்தாத வகையில் பாரதியாரை மகாகவி என்றழைக்க விரும்புகிறேன். Canonize பண்ண விரும்புகிறேன். அந்த முடிவை நோக்கி விவாதத்தை நகர்த்தி செல்ல விரும்புகிறேன். ஆனால் அதற்காக விவாதம் முடியும் வரை வாசகர்களைக் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். whistles and frills ஐ பொறுத்துக்கொண்டு வாதத்தைப் பின் தொடருங்கள், பங்களிப்பு செய்யுங்கள்.
இடையீடாக ஒன்று: வாசகனை, வாசிப்பை, இன்றைய காலகட்டத்தை, கவிதையில் வாசகனின் அகத்தோடு பேசும் குரலை  முன் வைக்கும் போன கட்டுரையில் ஜெயமோகனுக்கு பாரதி வேஷம் போடும் திட்டம் போட்டோமா அதை அவர் அப்படியே literal-ஆக எடுத்துக்கொண்டு மீசை மட்டும் வளர்த்துக் கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறார். அதற்கு அர்த்தம் பாரதியின் கவிதைகளிலுள்ள வாசகனின் அகத்தோடு பேசும் குரலை அந்த பேசும் குரல் தருகின்ற   subject positionsஐ  பாவனை செய்து பாருங்கள் என்பதே. இலக்கியப்பிரதியிலுள்ள உருவகங்களையும் படிமங்களையும் அத்வைத வேதாந்த நோக்கில் கவிதையின் உள் பாவனைகளாக , மொழி பாவனைகளாக அகத்திறப்பு, தரிசனம் என்றெல்லாம் பூடகப்படுத்தி பூடகப்படுத்தி எழுதும் ஜெயமோகனுக்கு செவியில்லை என்கிறேன். அகக்கண் மட்டும் பார்த்தால் அல்லது பார்ப்பது போல் பாவனை செய்தால் மட்டும் போதாது ஜெயமோகன்   கவிதை வாசிப்பின்போது அகத்தின் செவியும் திறந்திருக்கவேண்டும். இதைப் புரிந்து கொள்ளாமல் மீசை வளர்க்கிறாராம். கொண்டுகூட்டி பொருள் கொள்ளுங்கள் ஜெயமோகன்.

காட்சிப்பிழை போல் யாராவது தகவல்பிழை, புரிதல் பிழை என்று யாரும் பத்திரிக்கை ஆரம்பித்தால் சொல்லுங்கள் அதற்கு ஜெயமோகனை ஆசிரியராக பரிந்துரைசெய்கிறேன்.
சரி, நாம் எலியட்டுக்கு மீண்டும் வருவோம். அவரின் நீண்ட நெடுங்கவிதையான ‘பாழ் நிலம்’ ஏராளமான literary references கொண்டது. ஆங்கில இலக்கிய பாரம்பரியத்தை மொத்தமாக ஊடாடி 30 பக்கங்களுக்குள் கவிதையாக முன்வைப்பது. ஜெயமோகனின் மொழியில் சொல்வதானால் உச்சம்தொட்ட படைப்பு.  தமிழில் எலியட்டின் பாழ் நிலம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரு முறை. மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களை மறந்துவிட்டேன். மன்னிக்கவும். பிரம்மராஜன் நடத்திய மீட்சி இதழில் பிரசுரமானதாக ஞாபகம். 
ஒரு முறை தமிழ் மட்டுமே கற்கும் மாணவர்களுக்காக எலியட்டின் பாழ் நிலம் பற்றி வகுப்பெடுக்க சென்றேன். பரணர், இளங்கோ, கம்பன் என்று கரைத்துக்குடித்த மாணவர்கள். சுத்தமாக ஆனால் ஆங்கிலம் தெரியாது. கிட்டத்தட்ட இரண்டு வாரம் வகுப்பெடுத்தேன். பாழ் நிலம் கவிதை என்று அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை. மொழிபெயர்ப்பு வேலை செய்யவில்லை. தமிழ் மட்டுமே படித்த மக்கள் எலியட்டின் பாழ் நிலத்தை கவிதையாகவே ஒத்துக்கொள்ளவில்லை அதனால் அவருக்கு கொடுத்த இலக்கியத்திற்கான நோபல் பரிசை திரும்பப் பெற்றுவிடுங்கள் என்று ஜெயமோகன் தலைமையில் ஸ்வீடிஷ் அகாடமிக்கு கடிதமெழுதுவோமா? இல்லை ஐயோ எலியட் மொழிபெயர்ப்பு தமிழில் வேலை செய்யவில்லை என்று ஆங்கில அமெரிக்க விமர்சகர்கள் தங்கள் கவிதைகளின் நுண்ணுர்வையும், நுண் ரசனையையும் உயர்த்திக்கொள்ளத்தான் கட்டுரைகள் எழுதிக்குவிப்பார்களா? சரி வேண்டாமய்யா, ஹோமரையும் எலியட்டையும் தராசையும் படிக்கல்லையும் வைத்துகொண்டு எந்த அமெரிக்க ஆங்கில விமர்சகனேனும் 30 பக்கங்கள்தானே பாழ் நிலம் ஹோமர்தான் ஐரோப்பாவிலேயே மகாகவி, எலியட் போனால் போகிறது ஒரு முக்கியமான ஆங்கிலக்கவி என்று கட்டுரை எழுதுவானா? ஐரோப்பா முழுக்க கலாச்சார இலக்கிய பரிவர்த்தனை இருந்துகொண்டுதானே இருக்கிறது. புழங்கும் கரண்சி கூட ஒன்றுதான்.  
மொழிபெயர்ப்புகளிலும் வேலை செய்யக்கூடிய கவிதைகளே தரமான கவிதைகள் அவற்றை எழுதவே தமிழ்க்கவிஞர்கள் உத்தேசிக்க வேண்டும் அவற்றை உலக சந்தையில் விற்கவேண்டும் என்றால் சரி ஏதோ வியாபாரத்திட்டம் என்று பேசாமல் இருந்துவிடலாமென்றால் இல்லையாம் ரசனை மதிப்பீட்டின்படி உள்ள அளவுகோலாம்.
இன்னும் சில எட்டுக்கள்தான் நம் பாரதி மகாகவி என்பதை நாம் உலகுக்கு சொல்வதற்கு.  

Post a Comment