Tuesday, October 18, 2011

ஜெயமோகனுக்கு வந்தனம்

அன்பிற்குரிய ஜெயமோகன்:

உங்கள் நல்வரவு கட்டுரையை வாசித்தேன்.
குற்றாலம் கவிதைப் பட்டறையில் மௌனி-பார்ப்பாரக்குட்டி காமெண்ட் நான் சொல்லவில்லை. கட்டுரை முழுக்க நான் பேசாததையோ, எழுதாதையோ -மற்றவர்கள் சொன்னதை என் மேல் ஏற்றி-'திரண்ட பொருள்' காண வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தினமணி சுரா கட்டுரை செய்ததாக நீங்கள் வருத்தப்பட்ட தவறை நீங்களே செய்யக்கூடாது.மற்றபடி நான் எழுதியதை உங்கள் விருப்பம் போல் வாசிக்கலாம். நகுலன், மௌனி கட்டுரைகள் உட்பட. இன்னொரு தகவல் பிழை உங்கள் விஷச்செடி கதை பற்றி நான் ஒன்றும் விரிவான வாசிப்பை முன் வைக்கவில்லை. 'மேலும்' இதழ் பேட்டியொன்றில் கேட்ட கேள்விக்கு பதிலாய் சொன்னேன். அதற்கு நீங்கள் 40 பக்க கடிதம் பதில் எழுதினீர்கள். அதில் மேலாண்மை பொன்னுசாமி பற்றிய குறிப்பு இல்லை. இப்போது நீங்கள் quote செய்யும் வரி கூட உங்களைப் பற்றியில்லை உங்களைத் தாண்டிய ரசனை விமர்சனம் பற்றித்தான் என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும். மற்றபடி நகைச்சுவையோடு, தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்காமல் உரையாட எனக்கும் விருப்பம்தான். என்ன உங்களைப் போல் உடனடியாக பல பக்கங்களை எழுதிவிட முடியாது. நான் பதிலெழுதுவதற்குள் தாமிரவருணியில் தண்ணீர் நிறைய ஓடிவிடும்தான். தட்டுத் தடுமாறி effective-ஆன ஒரு பத்தி பதிலை எப்போதாவது எங்கேயாவது எழுதிவிடுவேன். மதிப்பில்லாமல் உரையாடுவது எனக்கும் பழக்கம் இல்லை.
நல்வரவுக்கு வந்தனம்,
அன்புடன்,
எம்.டி.முத்துக்குமாரசாமி
பார்க்க: எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு

No comments: