Sunday, October 2, 2011

சீன விளையாட்டு பொம்மைகள்


சீன பிளாஸ்டிக் விளையாட்டு பொம்மைகள் சாலையோரங்கள், சிறு கடைகள், பெரும் கடைகள், தள்ளுவண்டி கடைகள், கோவில்களைச் சுற்றியுள்ள கடைகள், கிராமத்து கடைகள் என எங்கும் சர்வ வியாபகம் பெற்றிருக்கின்றன. சீன விநாயகர் பொம்மைகளும் அம்மன் பொம்மைகளும் கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வீற்றிருக்கின்றன. இந்தியக் குழந்தைப் பருவம் என்பது சீன விளையாட்டு பொம்மைகளால் இன்று தீர்மானிக்கப்படுவதாகிவிட்டது. முன்பு சல்லிசான விலைக்குக் கிடைக்கக்கூடியவை என்பதனால் பிரசித்திபெற்று இந்திய சந்தையைக் கைப்பற்றிய சீன பொம்மைகள் இன்று அவ்வளவு சல்லிசான விலையிலும் கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் விலை ஏறத்தானே செய்யும்? நாம் விரல் சூப்பிக்கொண்டு சும்மா இருக்கத்தானே வேண்டும்? சீன பொம்மைகள் கடையிலிருந்து வீட்டுக்கு வருவதற்குள்  உடைந்துவிடக்கூடும்; இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் தாக்குப்பிடித்து விளையாட ஏதுவாய் இருந்துவிட்டால் முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருப்பதாகக் கொள்ளலாம். இரு குழந்தைகள் இருக்கும் என் வீட்டிலேயே ஓட்டையும் உடைசலுமாய் சிறு குன்றளவு பிளாஸ்டிக் பொம்மைகள் இருக்கின்றன. அவற்றை எடுத்து வீடு முழுவதும் பரப்பினால் ஒரு பெரிய போர்க்களத்தின் சிறு மாதிரி போல இருக்கும். சிறுவர் தொலைக்காட்சி சானல்களில் அமெரிக்க  தயாரிப்புகளான பென் 10, ஹக்கி மாரோ, நிஞ்சா ஹட்டோரி, பேட்மேன், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், எல்லாமே சீன பொம்மைகளாகவும், சிறுவர் உடைகளாகவும், பள்ளிப்பைகளாகவும் இந்தியக் குழந்தைகள் உலகம் முழுக்க நிறைந்திருக்கின்றன. பொறுப்புள்ள தகப்பனாய் சிறுவர் சானல்களை தடை செய்து, சீன யுத்த கருவி பொம்மைகள், ஆயுத பொம்மைகள் ஆகியவற்றை என் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுப்பதைத் தவிர்த்துப் பார்த்தேன். ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. குழந்தைகளின் முகங்கள், அவர்களுடைய உலகம் பறிக்கப்பட்டதில், வாடிவிட்டன. அவர்களுக்கு இதர பள்ளி நண்பர்களோடு உரையாட விளையாட பொதுத் தளம் இல்லாமலாயிற்று. பொம்மைகள் இல்லாவிட்டால் கைகளே துப்பாக்கிகளாக டுப் டுப் என்று ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டிருந்தனர். அம்பாசமுத்திரம், கடையநல்லூர், ஆந்திராவிலுள்ள எட்டிகோப்பா ஆகிய ஊர்களில் இருந்து வரும் மரச் செப்புச்சாமான்கள், மரப்பாச்சி பொம்மைகள், மரத்தாலான ஒரு சில  கார், விமானம் பொம்மைகள் வாங்கிக்கொடுத்துப் பார்த்தேன். இப்போது இந்த பொம்மைகளும் சரி செய்கின்ற கைவினைஞர்களும் அருகிவிட்டார்கள் என்பது மட்டுமல்ல அவை இன்றைய குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப நவீனப்படுத்தப்படவில்லை. ஆகையால் சீன-அமெரிக்க கூட்டுக்கொள்ளை இந்தியக் குழந்தைப்பருவத்தினை ஆக்கிரமித்திருக்கிறது. ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இதே நிலைமைதான் என்பதை என் பயணங்களின்போது கவனித்திருக்கிறேன். என் பயணங்களிலிருந்து ஊர் திரும்பும்போது ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலிருந்தும் என் குழந்தைகளுக்காக வாங்கி வந்த பொம்மைகள் சீனத் தயாரிப்புகளாகவே இருந்திருக்கின்றன.

இது தொடர்பான சிந்தனைகளும் அதிகம் இல்லையென்றே தோன்றுகிறது. உம்பர்டோ ஈக்கோ தன் குழந்தைக்கு பொம்மைத் துப்பாக்கி வாங்கித்தருவதில்  அவருக்குள்ள தயக்கங்களைக் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

சீன இந்திய வர்த்தக பேச்சுவார்த்தைகளின்போது சீனா இந்தியக்கடவுளர்களின் பொம்மைகளைச் செய்து இந்திய சந்தைகளை நிறைப்பது, காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளைத் தயாரிப்பது ஆகியவற்றிற்கு இந்திய அரசுப்பிரதிநிதிகள் ஆட்சேபம் தெரிவித்தபோது, சீனப் பிரதிநிதிகள் திபெத்தியர்கள் இந்தியாவில் சீனக் கம்பளம் போன்றவற்றைத் தயாரிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள் என்று கூறியதாக அறிகிறேன். சீனத் தயாரிப்புகளான சிறு நகவெட்டிகள், டார்ச் லைட்டுகள், அலுவலக உபகரணங்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என ஆயிரக்கணக்கான சிறு பொருட்களையும் தடை செய்துதான் பாருங்களேன் என்றாராம் சீனப் பிரதிநிதி. இந்த வியாபாரப் பேச்சுவார்த்தைகளைப் பற்றிய விபரங்கள் அறிந்த இந்திய அதிகாரி நல்ல வேளை சீனர்கள் இந்தியாவில் அரிசி விற்கவில்லை அப்படி விற்றார்கள் என்றால் அவர்களால் கிலோ 25 பைசா 50 பைசா என்று தரமுடியும்; சல்லிசாகக் கிடைக்கிறதே என்று வாங்கினோமென்றால் இந்திய விவசாயப் பொருளாதாரமே இரண்டே நாளில் அழிந்துவிடும் என்றார். சீனப் பூண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபின் இந்தியப் பூண்டு சந்தையிலேயே இல்லை என்பது கண்கூடு. பூண்டு பயிரிட்டவர்கள் என்ன ஆனார்களோ பூண்டு விவசாயம் என்ன கதியில் இருக்கிறதோ, யாருக்குத் தெரியும்?

இதை எழுதிக்கொண்டிருக்கும்போது என் குழந்தைகள் சீன பொம்மைத் துப்பாக்கிகளை என் முதுகில் வைத்து மழலையில் ‘அப்பா ஹேண்ட்ஸ் அப்’ என்கிறார்கள். கைகளைத் தூக்கிவிட்டேன். அடுத்து பட படவென்று சுடுவார்கள். நான் ஐயகோ என்று கீழே விழுந்து சாவேன். வேடிக்கை மனிதரைப் போலே.

பின்குறிப்பு:

இந்திய சந்தையில் சீனப்பொருட்களின் ஆதிக்கத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள நண்பர் வாசு தேவன் அனுப்பிய இணைப்பை இங்கே படிக்கலாம்.
Post a Comment