Thursday, October 27, 2011

நான் அதி புத்திசாலியேஸ்பெயினிலுள்ள பார்சலோனாவில் 1874-1918 வரை நாடகங்களுக்கான அரங்க அமைப்பு
பார்க்க புத்தகம்: http://www.fabernett.com/cgi-bin/fab455/45908.html


நான் ஒரு மக்கு, மண்டூகம் என்பது உலகப் பிரசித்தமாக இருக்கையில்தான் நான் அதிபுத்திசாலியா என்ற பொதுவிவாதத்தைத் தொடங்கினேன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னோடு விவாதித்தவர்கள் அனைவருமே நான் புத்திசாலி என்பதை நிரூபிக்கவே படாதபாடுபட்டபோது அவர்கள் எப்படி என்னை அதி புத்திசாலி என்று நிறுவமுடியும்? இந்த சந்தர்ப்பத்திலே நண்பர்கள் என் கருத்தாக்கமான நான் மக்கு மட்டுமல்ல இடி மக்கே என்ற என் வாதத்திற்கு எதிராக நானே வாதாடி நான் அதி புத்திசாலியே என்று நிறுவமுடியுமா என்று கேட்டார்கள். ஆர்வமூட்டும் வினா.
நான் அதி புத்திசாலியா விவாதத்தை என்னோடு விவாதித்தவர்கள் வாதம் முன்னகர உதவினாலும் எனக்கு உவகையூட்டும் வகையில், திருப்தி அளிக்கும் வகையில் அவர்கள் வாதத்தை முன்னெடுத்துச் செல்லவில்லை. ஆகையால் எதிர்தரப்பு சொல்லியதையெல்லாம் என் தரப்பினதாக மாற்றி நான் வாதிட்டிருந்தால் நான் அதி புத்திசாலியே என்று எப்படி நிறுவுவேன் என்பதை விளக்கிக்காட்டப் போகிறேன்.
அபத்த தரிசனம் என்ற என் பதச்சேர்க்கைதான் என் வாசிப்பு என் விமர்சன முறைமையின் அளவுகோல் என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே வந்துள்ளேன். நல்ல மனிதன் என்ற பதச் சேர்க்கையியில் சொல்லப்படும் மனிதன் நல்லவன் என்ற பொருள்படுகிறது, அது போலவே அபத்த தரிசனம் என்றால் தரிசனம்தானே அபத்தம் என்று பொருள்படும், தரிசனம் அபத்தமானால் அது எப்படி தரிசனமாகும் என்ற கேள்வி நல்ல கேள்வியே. 
தரிசனங்கள் அனைத்தும் அபத்தமானவை என்றே மேலை கீழை தத்துவங்கள், இலக்கியங்கள், வரலாறுகள் எல்லாவற்றையும் வாசித்து வந்திருக்கிறேன். பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் ஆகிய பதார்த்த சேர்க்கைகளில் பின் என்றால் மனித உடலின் பின் பாகம் என்று நான் புரிந்துகொண்டதும், கொத்து பரோட்டா போட்டதும் அபத்த தரிசனத்தின் வழியே. என் இலக்கிய கோட்பாடுகள் கட்டுரையைப் படிப்பவர்கள் நான் நகைச்சுவை என்று அதை வில்லை அடையாளப்படுத்தியிருப்பதை சும்மா என்று கண்டுகொண்டு சீரியசான கட்டுரையாகவே வாசிப்பார்கள் என்று நான் உணர்ந்தே இருக்கிறேன். இளம் வாசகர்களை உய்விக்கும் பொருட்டு நான் எழுதிய என் இதர புத்தகங்களின் சாராம்சமும் பின் பாகங்களைப் பற்றியதே என்றும் உலகம் அறியும்.
இவ்வாறாக என் அபத்த தரிசனத்தோடு என்னை வளர்த்தவர்கள், என்னோடு விவாதம் புரிந்தவர்கள் ஆகியோரின் கருத்துக்களை உறிஞ்சி உறிஞ்சியே நான் என் புத்தகங்களை எழுதினேன் என்று காலங்களின் சுவடுகளை விட்டுச் சென்ற எழுத்தாளர் புலம்பு புலம்பென்று புலம்பியிருக்கிறார் என்பது நான் அறிந்ததே. அவர்களை கேவலப்படுத்துவதிலும் நான் சளைத்தவனில்லை. அவரின் மயானத்தை நோக்கி நானொரு சிறு குரூர புன்னகையே சிந்தமுடியும். காலங்கள் அகாலமாகும் என்பதை அறியாதவர் அவர். நொடி பக்கவாட்டில் விரிவடைந்து அகாலமாவது அறியாமல் காலம் கடற்கரையில் விட்டுச் செல்லும் சுவடுகளை எழுதியவர் அவர். சுவடுகளுக்கு குறடுகளே, பாதக் குறடுகளே எஞ்சும்.
ஜமேதார்கள் வெள்ளிப்பூண் கம்புகளையும், இரும்புத் தடிகளையும் கையிலேந்தி முன் நடக்க, விக்கிப்பீடியாவைப் பார்த்து பார்த்து டிவைன் காமெடி மொழிபெயர்ப்பைப் புரிந்துகொள்ள நான் படாத பாடுபட்டுக்கொண்டிருக்கையில் என் தலை மயிரில் தாந்தேயும், கதேயும், கம்பனும், வியாசனும் இழை இழையாய் துள்ளிக் குதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொன்னால் பிடுங்கித் தாருங்கள் ஓரிரு இழைகளை என்றுதானே கேட்கிறது என் முன்னே கைகட்டி, வாய்பொத்தி நிற்கும் கூட்டம். யாருக்குத் தெரியும் இன்று பூமணி எழுதி முடித்திருக்கும் நாவலுக்கான மானியத்தின் மூல நிதியும், கதா விருதுகளுக்கான மூல நிதியும், புதுமைப்பித்தன் ஆவணக் காப்பகத்திற்கான மானியத்தின் மூல நிதியும், க்ரியாவின் தற்காலத் தமிழகராதி தயாரிப்பதற்கான நிதியுதவியும், புரிசை கண்ணப்பத்தம்பிரானை இன்று உலகுக்கு அறியச் செய்த கூத்துப்பட்டறைக்கும், ரோஜா முத்தையா நூலகத்திற்கும் நிதி ஃபோர்ட் ஃபவுண்டேஷனிலிருந்து வந்ததுதான் என்று. இவையெல்லாம் ரகசியங்களல்ல. பொது வெளியில், இணையத்தில் காணக்கிடைக்கின்ற தகவல்களே. ஆனால் யார் தேடி எடுத்து படிக்கிறார்கள்? இந்த விபரங்களுக்கே இப்படியென்றால் இலக்கியம், இலக்கிய விமர்சனம், தத்துவம், ஆகியவற்றின் கதி என்ன? எல்லோரும் என்னுடைய ஓரிரு மயிரிழைகளுக்காகத்தானே காத்திருக்கிறார்கள்? ஆகவேதான் ஓடி விளையாடு பாப்பா என்று ஓடி விளையாடிவிட்டேன் 'இலக்கிய கோட்பாடுகள்' கட்டுரையில்.
அசடுகளுக்கும் பிசடுகளுக்கும் அகத்திறப்புகளை நிகழ்த்துதே என் பணி என்பதினால் மாற்று வாசல்கள் அனைத்தையும் இறுக்கி சாத்திவிட்டேன் என்பதினாலும், எல்லோரையும் அவர்கள் உழைப்பினையும், அவர்கள் படிப்பறிவையும் சுலபமாக நான் கேவலப்படுத்திவிட்டேன் என்பதினாலும், நான் மக்கு அடி மக்கு என்ற என் தரப்பு வாதத்தில் தோற்றுவிட்டேன் என்பதினாலும், என்னை அதிபுத்திசாலியில்லை என்று யாராலும் நிரூபிக்கமுடியவில்லை என்பதினாலும் நான் அதி புத்திசாலியே என்று முடிக்கிறேன். 

Post a Comment