Sunday, October 23, 2011

வாருங்கள் ஜெயமோகன் தேநீர் அருந்தலாம்

பாரதி விவாதம் ஆரம்ப நிலையில் இருந்தபோது ஈழத்து கவிஞர் றியாஸ் குரானா ஃபேஸ்புக்கில் எனக்கொரு தேநீர் அழைப்பு அனுப்பியிருந்தார். அந்த அழைப்பினை உங்களுக்கும் நான் அனுப்ப விரும்புகிறேன். ஞாயிறு காலை உங்களிடமிருந்து அணக்கத்தையே காணோமா, கவலையிலிருக்கிறேன். இல்லை தூங்கி ஓய்வெடுத்து எழுதுங்கள் என்றதால் தூங்கிக்கொண்டேயிருக்கிறீர்களா? நான் சொல்வதைக் கேட்கும் வழக்கம்தான் உங்களுக்கு கிடையாதே. இல்லை நீங்கள் ரசனை விமர்சனத்தின்படி சொன்னதற்கு மேலதிகமாக என் பின் நவீன பின் காலனீய விமர்சனை முறையினால் நான் ஏதும் புதிதாகச் சொல்லிவிடவில்லை என்று மீண்டும் சொல்லப்போகிறீர்களா? நம் அகத்தோடு பேசும் குரலை பாரதியிடத்தில் கேளுங்கள் என்றேன். அது ஒன்றுதான் விசேஷம் என்றால் (நான் அது ஒன்றுதான் விசேஷம் என்று சொல்லவில்லை) சென்ற அரை நூற்றாண்டில் பாரதியின் மேல் வைக்கப்பட்ட மிகப்பெரிய வசை என்று சொன்னீர்கள். பொறுத்துக்கொண்டு உங்களுக்கு அகச் செவியில்லை என்று எழுதினேன். மீண்டும் மீண்டும் இன்றைக்கு பாரதி என்று பேசும்போது இன்றைக்கு என்பதற்கு என்ன பொருள் கொள்கிறீர்கள் என்று கேட்டேன். அரசியல்வாதி போல அயோத்திதாசர், வ.வே.சு. அய்யர், க.நா.சு. என்று பாண்டி ஆடிக் கொண்டிருந்தீர்களே தவிர ஒரு மெய்யில்வாதியாகவோ, கலைஞனாகவோ, விமர்சகனாகவோ, அறம் காக்கின்ற சிந்தனையாளனாகவோ நீங்கள் பதில் சொல்லவில்லை. நீங்கள் உங்களுக்காகவே வரித்துக்கொண்ட அடையாளங்கள் இவை. இவையெல்லாம் நீங்கள் இல்லையென்றால் நீங்கள் யார் ஜெயமோகன்? வெறும் வரலாற்றுத் தகவல்கள் தொகுப்பாளரா? நீங்கள் எப்படி நம் சம காலத்தின் முக்கிய எழுத்தாளர் ஆனீர்கள்? நம் உரையாடலின்போது பாரதியின் அத்வைதக் கவிதை என்று நீங்கள் நம்பும் ஒன்றை கட்டவிழ்த்துக்காட்டுங்கள் என்றேன். மிக அழகான சந்தர்ப்பம் அது. ஒவ்வொரு காலத்திலிலும் சிந்தனையாளர்களும் கவிகளும் தங்கள் மெய்யியல் மரபுகளை தீவிர விசாரணைக்குட்படுத்தி அல்லது என் விமர்சன முறை அழைப்பதுபோல கட்டவிழ்த்து கட்டவிழ்த்துதான் தங்கள் முறைமைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். மெய்யியல் மரபு சொல்லும் பரிபூரண இறுதி உண்மையை தொடர்ந்து தீவிர விசாரணைக்குட்படுத்தியே நம் தத்துவங்கள் வளர்ந்திருக்கின்றன. சமணமும், பௌத்தமும், சைவமும், வைணவமும் தங்கள் மெய்யியல் உண்மைகளை ஒன்றினை வைத்து மற்றொன்றினை மறுத்து, உரையாடியே தங்களை புதுப்பித்துக்கொண்டன, அவையனைத்தும் தங்கள் வழிமுறைகளையும் தர்க்கவிவாதங்களையும் செயல்வடிவங்களையும் வெளிப்படையாகவே வைத்திருக்கிண்றன. எதையும் பூடகமாக்கவில்லை. பாரதியாரே தன்னுடைய மெய்யியல் மரபை கடுமையாக விமர்சனத்துக்குள்ளாக்கியே தன் கவிக்குரலில் ஆத்மார்த்தமும் அந்தரங்க சுத்தியும் ஏறச்செய்தார். பாரதியின் தத்துவ மரபு என்ற கட்டுரையில் முப்பால் மணி எழுதியுள்ளதை வாசியுங்கள்
 “தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் பிறப்பாலேயே அத்வைதிகள். இந்நிலையில் மேற்கூறிய அத்வைதக் கருத்தியல் பின்னணியிலேயே முதலில் பாரதியார் இருந்தார். அப்போது “தேகம் என்பது யான் அன்று, மேலும் அகவயமான யானும் பிரம்மம் அன்று, வாழ்வு என்பது கனவு” என ஏற்றிருந்தார். அதாவது சார்வாகம், உலகாயதம் போற்றியுரைத்த தேகாத்மம் என்பதை அப்போது இயல்பாகவே தமது சுயமரபு காரணமாக மறுப்புக்கொண்டிருந்தார், தேகமே ஆத்மாவாக உள்ளது, ஆத்மா எனத் தனியாக ஒன்றும் இல்லை என்பது தேகாத்ம வாதம், ஆனால் பாரதி இதை ஏற்கவில்லை, அவர் தேகம் வேறு, ஆத்மா வேறு, அவை தனித்தனி என்பதையே மேற்கொண்டு இறுதிவரை இப்படியே திகழ்ந்தார், "அகவயமான யான் என்பதே பிரம்மம் மற்றும் வாழ்வு என்பது கனவு" என்பன சங்கரரின் அகவய-அத்வைதம், இது அவருடைய சுயமரபு. இதிலிருந்துதான் அவர் மாறுபாடு அடைகிறார்.

1906 முதல் 1913 வரை அவரது வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. சொந்தக் குடும்பம், அரசியல், பத்திரிகை-எழுத்து என அவை பொலிவுபெற்றன. 1912-ஆம் ஆண்டில் அரசியல், பத்திரிகை ஆகியன தொடர்ச்சியற்றுவிட்டன. 1911-ஆம் ஆண்டில் குள்ளச்சாமி பழங்குப்பை, பழம்பொய் எனச் சுட்டிக்காட்ட, பாரதியார் கடந்தகாலத்திலிருந்து விடுதலை பெற்ற புதியவன் ஆனார். புதிய காற்றால் புதிய உயிராய்ப் பிறந்துவிட்டார். கோவிந்த ஞானியின் தொடர்பு கண்ட பின் எல்லாமுமே அனைத்துமே பிரம்மம், பரம்பொருள். தெய்வம், பரசிவம் எனத் தெளிந்தார். இதனோடு நிற்காமல் சம்சார விருத்திகள் பரம்பொருளின் விருத்திகள், செயல்கள் எல்லாம் சிவன் செயல்கள் எனத் தெளிந்து பகவத் கீதைக்கு முன்னுரை எழுதினார். விருத்தி என்பது இல்லையெனில் அழிவு, காதல் போயின் சாதல், விருத்தி என்றால் பிறப்பு-செயல்-மாற்றம்-இன்னொரு பிறப்பை ஈன்று விட்டு ஏகமாதல், இதுவே அத்வைத நிலை, முக்தி ஆகும் என்ற உறுதிக்கு வந்தடைந்தார். இதுவே அவரது மாற்றம், இயலுலக வாழ்வில் விருத்தி என்பது சமூக விருத்தி ஆகும்.” தன் மரபு மெய்யியலை விமர்சித்ததால்தான் பாரதிக்கு நம் அகத்தோடு பேசுகின்ற கவிக்குரல் கூடி வந்தது.

தன் மரபு மெய்யியல்களை தயவு தாட்சண்யமில்லாமல் விமர்சித்தே நாரயண குரு தத்துவ ஞானியானார். மெய்யியல் மரபுகளை விமர்சிக்கச் சொல்லித்தருபவனே நம் மதிப்பிற்குரிய குரு. அது நாராயண குருவாயிருந்தால் என்ன ழாக் தெரிதாவாயிருந்தால் என்ன, அவரவர் பாத்திரத்திற்கு ஏற்ற பிச்சை. மெய்யியல் மரபுகளை விமர்சிக்காமல் கிளிப்பிள்ளை போல் திரும்பச்சொல்பவன் மேலும் மேலும் பூடகமாக்குபவன் மதவாதி அரசியல்வாதி உண்மையை அறிவதில் ஆர்வமற்றவன், அதிகாரத்தில் பற்றுள்ளவன், தன் திறனின் உண்மையான பயன்பாடு தெரியாமல் சீரழிப்பவன். கவிஞர்களும் சிந்தனையாளர்களும் அறம் அறம் என்று சும்மா பேசிக்கொண்டிருப்பதில்லை. கவிஞர்கள் அறம் பாடக்கூடாது என்றே ஒரு இலக்கிய முது மொழி இருக்கிறது. கவிஞர்களும் சிந்தனையாளர்களும் புனைவெழுத்தாளர்களும் அறம் என்பதை வெளிசொல்லாமலேயேதான் தங்கள் படைப்புகளை முன் வைப்பார்கள். வாசகர்களே அவற்றைக் கண்டடைவார்கள்.
மெய்யியல் பற்றிப்பேசுவதால் நான் கருத்துமுதல்வாதி என்று களித்திருக்கும் நண்பர்கள் சிலருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் தெரிதாவின் ‘Spectre of Marx’ என்ற நூலை வாசித்துப்பாருங்கள். மார்க்சீயத்தினால் தீர்க்கப்ப்டாத தத்துவப் பிரச்சைனைப்பாடு ஒன்று உண்டென்றால் அது Kantian problematic தான். இம்மானுவேல் காண்ட் வர்க்கம் தாண்டி, சாதி மத பேதம் தாண்டி, பேசுபவனின் தகுதி தாண்டி காலம் இடம் தேசம் வர்த்தமானம் தாண்டி முழுத் தூய்மையான (absolute) அறத்தின் அகவயமான குரல் எப்படி ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். அந்த ஊற்றுக்கண்ணிலிருந்தே பகுத்தறிவு ஆரம்பிக்கிறது என்றார். மேலை தத்துவத்தில் இது Kantian project என்று அறியப்படுகிறது. தெரிதாவின் கட்டவிழ்ப்பு விமர்சனம் காண்ட்டின் பகுத்தறியும் செயல்பாட்டினை Critical Praxis ஆக மாற்றுவது என்றே நான் எண்ணுகிறேன். அவ்வாறாகவே நான் எழுதுவதாகவும் நினைக்கிறேன்.
பாரதிக்குத் திரும்புவோம். பாரதியின் ஆன்மிகப்பாடல்கள் தொடங்கி, தேசப் பற்று பாடல்கள், தமிழ் புகழ்ச்சிப் பாடல்களெல்லாவற்றையும் கட்டவிழ்த்து படித்தோமென்றால் இந்திய தேசத்தில் எல்லாம் சௌக்கியம் என்று சொல்லிக்கொண்டிருக்க மாட்டோம். பாரதியின் கவிதைகளில் ஆத்மார்த்தமாகப் பேசும் குரலுக்கு செவி மடுத்திருந்தோமென்றால் அவர் சொல்லும் தேசம் எங்கிருக்கிறது, அதன் மக்கள் என்னவாயிருக்கிறார்கள், அந்த தேசத்தையும் மக்களையும் மீட்டெடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் ஆன்மீகம் என்றால் என்ன என்று நமக்குத் தெரிந்திருக்கும். நம்முடைய அகத்தோடு பேசும் பாரதியின் கவிக்குரலை நாம் கேட்டிருந்தோமென்றால் நம்மிடையே தனியாகவும் கூட்டாகவும் செயல்படுவதற்கான முறைமை (individual and collective agency)  இந்நேரம் உருவாகியிருக்கும். நாம் பாரதியைக் கட்டவிழ்த்துப் படிக்கவில்லை என்பதினால்தான் இப்படித் திக்கு தெரியாமல் திண்டாடி தெருவில் நிற்கிறோம்.
நான் இந்த வாதத்தில் உங்களிடம் தோற்றுப்போய்விட்டேன் ஜெயமோகன். உங்கள் எழுதும் ஆற்றல், சிந்தனைத் திறன் ஆகியவற்றின் முன்னால் நான் தவிடு பொடி ஆகிவிட்டேன். மொழிபெயர்ப்பிலும் வேலை செய்யவேண்டும், அதிக எண்ணிக்கையிலிருக்க வேண்டும், காப்பியக் கவி கம்பனோடும் ஒப்பிடத்தகுந்ததாக இருக்க வேண்டும் என்ற ஏற்கனவே வலுவற்ற உங்கள் அளவுகோல்களை முழுமையாக வலுவிழக்கச் செய்யவே என்னால் முடிந்தது. உங்கள் ரசனை விமர்சனத்தினால் என்ன சொல்லமுடிந்ததோ அதற்கு மேல் புதிதாக ஏதும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. உங்கள் மலைப்பாம்பு போல நீளும் பல கட்டுரைகளில் பாரதியை தமிழ் நவீனத்துவத்தின் முன்னோடி என்று அழைத்து அவர் ஏன் மகாகவி என்பதை விளக்கி, பல இடங்களில் மகாகவி என்றே அழைத்திருக்கிறீர்கள். நம் நண்பரொருவர் நீங்கள் பாரதியாரை மகாகவி என்றழைத்த இடங்கள் எல்லாவற்றையும் ஸ்க்ரீன் ஷாட்டுகளாகத் தொகுத்து அனுப்பியிருக்கிறார். நானும் வாதத்தில் தோற்றுவிட்டபடியால் நீங்கள் ரசனைவிமர்சனத்தின் படி எழுதிய அத்தனையையும் தொகுத்து நம் பாரதி மகாகவிதான் என்று உலகுக்கு அறிவித்துவிடுங்கள்.
றியாஸ் குரானாவின் தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறது. சீக்கிரமாய் வாருங்கள். நீங்கள் அருந்துவது தேநீர் நான் அருந்துவது காபி என்றாலும் நம் மேஜை ஒன்றுதானே.
என் அழைப்பிற்கு உங்கள் பதில் பார்த்துவிட்டு என் பதிவினை எழுதுகிறேன்.  

Post a Comment