Thursday, October 20, 2011

சிந்தனைத்துறை மொழியை கையாள்வது பற்றி

Penny Davenport இன் ஓவியம்

குறிப்பு 1:
நான் இன்று காலை ஜெயமோகனின் கட்டுரைக்கான எதிர்வினையை பதிவேற்றிவிட்டு அலுவலகம் செல்ல காரில் ஏறியதுதான் தாமதம் என்ன விவாதத்திலிருந்து விலகிட்டீர்களாமே என்று குறுஞ்செய்தி மேல் குறுஞ்செய்தியாய் வந்தவண்ணமிருக்கிறது. எங்கே எப்போது சொன்னேன், அப்படி நானே சொல்லிவிட்டேனோ என்ற சந்தேகத்துடனேயே அலுவலகம் போய்ச்சேர்ந்தேன்.  என்ன நடந்தது என்பதை விளக்குவது ஜெயமோகன் எப்படி அவசர முடிவுகளுக்கு வருகிறார் என்பதை விளக்ககூடும்.  
அவர் கட்டுரையில் ஜெயமோகன் எழுதிய கடைசி பத்தியைப் பாருங்கள்: 
மன்னிக்கவேண்டும் எம்.டி.முத்துக்குமாரசாமி. இந்தப் பின்நவீனத்துவ, பின்னைகாலனித்துவ பாவலாக்களை எல்லாம் விட்டுவிட்டு உங்களால் என்ன முடியுமோ அதைப் பேசுங்கள். உங்களால் உண்மையில் என்ன சாத்தியமோ அதைச் செய்யுங்கள். அதன் மூலம் தமிழுக்கு நீங்கள் உண்மையான சில பங்களிப்புகளை ஆற்றமுடியும்
இதை அப்படியே போலி செய்து அவருக்கு என் கட்டுரையின் கடைசிப்பத்தியில் திருப்பிச்சொன்னேன்:
மன்னிக்க வேண்டும் ஜெயமோகன். நிறைய எழுதக்கூடியவராக இருக்கிறீர்கள்,  நிறைய படிக்கிறீர்கள், நல்ல குருக்களிடத்து பாடம் கேட்டிருக்கிறீர்கள். இவன் இவ்வளவுதான், இவன் இடம் இதுதான் என்று தீர்ப்பு கூறி சம்பந்தாசம்பந்தமில்லாமல் ஒப்பீடுகள் நிகழ்த்தி, நான் ஒரு அதாரிட்டியாக்கும், படைப்பாளியாக்கும் என்ற சவடால்கள், தொடைதட்டல்களை விட்டுவிட்டு உங்களால் முடிந்த பங்களிப்புகளை தமிழுக்குச் செய்யுங்கள். உங்கள் நண்பன் உங்கள் பங்களிப்புகளைத் தமிழுக்குக் கோருபவன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இதுவரை எழுதியிருக்கும் non-fiction அனைத்தையும் தயவுசெய்து தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்துங்கள். உங்களை வரி வரியாகப்படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.”
அவர் உடனே நான் விவாதத்திலிருந்து விலகிவிட்டதாகவும் என் மனம் புண்பட்டிருக்குமென்றும் கருதி மன்னிப்பும் கேட்டுவிட்டார். என் தளத்தில் பின்னூட்டம் வேறு தன் தளத்தில் பதிவு வேறு. இந்த அவசரகதியில் நான் விவாதத்திலிருந்து விலகுவதாக சொல்லவேயில்லை என்பதை இப்போதுகூட உணர்வாரா என்று எனக்குத்தெரியவில்லை.  அவருடையமொழியையே அவருடைய நடையிலேயே திரும்பிச்சொல்லும்போது எவ்வளவு வன்முறையானதாக இருக்கிறது என்பதையும் அவர் அறிந்தாரா என்றும் எனக்குத் தெரியவில்லை. 
இதே போலவே நான் சொல்லாத ஒன்றை வைத்தே ‘எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடிப்படை’ என்ற கட்டுரையின் பெரும்பகுதி எழுதப்பட்டுள்ளது.
 நான் என் கட்டுரையில்  நான் முன்வைத்த விமர்சன முறைமை, அவருடைய விமர்சனமுறமைக்கு மாற்று என்றுதானே சொன்னேன். மாற்று என்றால் எதிரிடையா? எதிரிடை என்று சொல்கிறார் இருமையைக் கட்டமைப்பதே இவர்கள் வேலை என்று புலம்பி, நாலைந்து பெருக்கல்குறிகள் போட்டுக்காட்டி, உபதேசம் செய்து, ஏகாதிபத்தியத்தின் கையாள் என்று திட்டி, நாராயண குரு தெரியாமல் குணங்குடியாரை இவர்களுக்கெல்லாம் புரியாது என்று வசைபாடி, நான் இரண்டாயிரம் பக்கம் எழுதியிருக்கிறேன் என்று ஆர்ப்பரித்து, நானே பின் நவீனத்துவத்துக்கு அணுக்கமான விமர்சகன் என்று தம்பட்டம் அடித்து, என் முறை இணைவு முறை என்று கூவி ஒரு கட்டுரை முடிந்துவிட்டது. இப்படியே இரண்டாயிரம் பக்கம் ஒருவர் எழுதுவரானால் என்ன செய்ய? 
குறிப்பு 2:
ஜெயமோகன் நடத்திய பாரதி விவாதத்திலிருந்து இவர் எப்படி பின் அமைப்பியல் கருத்தாக்கங்களைத் தவறாகப் புரிந்துகொள்கிறார், அவற்றின் தத்துவ அரசியல் பின்புலங்களின் ஒத்திசைவை கணக்கிலெடுக்காமல் அடித்துவிடுகிறார் என்பதற்கு ஒரு உதாரணம். பாரதியின் சில வேதாந்தப்பாடல்களே அவரிடம் தேறும் என்று விவாதத்தை ஒரு புள்ளிக்கு ஜெயமோகன் நகர்த்திக்கொண்டு வந்துவிட்டார்; இனி பாரதி மகாகவி இல்லை என்று கட்டுடைத்து(Deconstruction)  demystify பண்ணப்போகிறாராம். 
இலக்கிய அல்லது தத்துவ பனுவலில் (கவனிக்க நான் text என்ற பதத்திற்கு பிரதி என்ற கலைச்சொல்லை நான் இந்த இடத்தில் பயன்படுத்தவில்லை) உள்ள metaphysical claims-ஐயும், பரிபூரண உண்மை (ultimate truth) என்று கூறப்படுவதையும் அணுக்கவாசிப்பின் மூலம் அலசலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பனுவலில் இல்லாமலாக்குவது அல்லது அந்த பரிபூரண உண்மையை சிதைப்பதே deconstruction  மற்றும் demystification. 
இப்பொது ஜெயமோகனின் பாரதி விவாதப்புள்ளிக்கு மீண்டும் வாருங்கள். மகாகவி இல்லை என்று கட்டுடைக்கப்போகிறேன் என்றால் அவருடைய வேதாந்தப் பாடல்களில் உள்ள வேதாந்த  metaphysicsஐ கட்டுடைக்கப்போகிறார் என்றுதானே எதிர்பார்ப்போம்? இல்லையாம். தாகூரை விட குறைவான எண்ணிக்கையில்தான் பாரதியிடம் கவிதைகள் தேறுகிறதாம்; அதனால் பாரதி மகாகவி இல்லையாம் இதற்குப் பெயர் கட்டுடைப்பாம். 


மேலே குறிப்பு 2-இல் சொன்ன முறைதான் இணைவு முறையா என்று ஜெயமோகன் முன்வந்து விளக்கவேண்டும்.

Post a Comment