Wednesday, October 12, 2011

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் -கடிதங்களும் விவாதங்களும்

என்னுடைய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கட்டுரையை இரண்டே நாளில் ஓராயிரம் பேர் வாசித்துவிட்டதாக அறிகிறேன். இதுவரை 292 கடிதங்கள் வந்திருக்கின்றன; இதில் இந்திரா பார்த்தசாரதியின் சிறிய கச்சிதமான பாராட்டுக்கடிதத்தை தவிர மீதி கடிதங்கள் அனைத்துமே ஜெயமோகன் தன் தளத்தில் நடத்திவரும் பாரதி விவாதங்களின் மூலம் அவர் பாரதியை சிறுமைபடுத்துவதாகக் கருதி கடுமையான மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளானவர்களின் கடிதங்கள். இந்தக் கடிதங்களுக்கு எப்படி பதிலளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.

ஏனெனில் ஜெயமோகன் என்ற நண்பரைத் தாண்டி அவர் கையாளும் ரசனை விமர்சனமும் அதன் தரவரிசைபடுத்துதல்களும் அபத்தமானவை, வன்முறையானவை, அதிகாரப்பிரயோகமுடையவை, உலகளாவிய அளவைகளோடு உறவுடைய ஒற்றை இந்தியா என்ற அரசியல் கருத்தினை நேரடியாகவோ மறைமுகமாகவோ முன் வைப்பவை. இன்னும் சொல்லப்போனால் ரசனை விமர்சனம் என்பது  சந்தைப் பொருளாதாரத்தின் அரசியலை அப்படியே இலக்கியத்திற்குள் கொண்டுவருகிற விமர்சன முறையாகும். தரம் வாய்ந்த பொருள் அதிக மதிப்பீடு உடையது அதிக எண்ணிக்கையில் அது உற்பத்தி செய்யப்படவேண்டும் அதன் தர நிர்ணயம் ரசனையை அறிந்த நிபுணர்களுக்குத்தான் சாத்தியம் ஆகிய மதிப்பீடுகள் சந்தை விதிகளில்லாமல் வேறு என்ன? இது தவிர பல மொழிகள், பல பண்பாடுகள், பல இனக்குழுக்கள், பல சாதிகள், பல வர்க்கங்கள் என்றுள்ள பன்மைச் சமூகத்தில் ஒற்றை அளவீடு ஒன்றை நிறுவி அந்த அளவீட்டின்படியே அத்தனை விதமான பண்பாட்டு முறைமைகள் இலக்கிய வெளிப்பாடுகள் அனைத்தும் இயங்கவேண்டும் என்று வலியுறுத்துவது கொடூரமான வன்முறையாகும். நான் சார்ந்திருக்கும் விமர்சன முறைமை பின்னை காலனீய, பின் நவீனத்துவ முறைமையாகும். என்னால் ஜெயமோகன் முன்வைக்கும் ரசனை விமர்சன முறைக்கான மாற்று விமர்சன முறையைக் காட்ட முடியுமே தவிர என்னால் உங்கள் சார்பில் அவரோடு உரையாட இயலாது.

இணையத்தில் இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்திருக்கும் எனக்கு இணையம் ஒரு வெகுஜன ஊடகம் என்பதும் அதன் தன்மைகளும் கொஞ்சம் கொஞ்சமாகவே தெரியவருகின்றன. இந்த 291 கடிதங்களுக்கு பதிலளிப்பது எப்படி என்ற திகைப்பில் நானிருந்தபோது மாமல்லன் கூகுள் ப்ளஸில் நேசமித்திரனும் அவருடைய நண்பர்களும் பாரதி விவாதத்தை நான் விரும்பும் திசையில் எடுத்துச் செல்வதை காண்பிக்க சுட்டிகளை அனுப்பிருந்தார். இந்த விவாதங்கள் public என்று அடையாளப்படுத்தப்பட்டிருப்பதால் அந்த சுட்டிகளை கீழே பகிர்ந்துகொள்வதில் பாதகமில்லை என்று நினைக்கிறேன். எனக்கு கடிதம் எழுதியிருக்கும் நண்பர்கள் இந்த சுட்டிகளில் நேசமித்திரன் முன் வைக்கும் வாதங்களை கூர்ந்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சுட்டிகளை அனுப்பிய மாமல்லனுக்கும், என் வாதத்தை சரியான திசையில் எடுத்து சென்ற நேசமித்திரன் மற்றும் அவருடைய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இது தவிர ஃபேஸ்புக்கில் நண்பர் எஸ். சண்முகம் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிகழ்த்துத்தன்மையுடைய கவித்துவ குரல் என்னென்ன சாயல்களையும் வளங்களையும் வெவ்வேறு கவிஞர்களிடத்து பெறுகிறது என்பதை விளக்கி பாரதி மூலம் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் ஆரம்பித்து இன்றைய கவிதை வரை வாசிப்பதற்கான புதிய முறைமையினை என் கட்டுரை மூலம் எப்படி விரிவாக்கலாம் என்று விவாதத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். நண்பர்கள் வாசுதேவனும், ஜமாலனும், காத்திரமாக விவாதிக்கின்றனர்.

இந்த உரையாடல்கள் மூலம் பலவற்றைக் கற்றுக்கொள்பவனாக நானிருக்கிறேன். 


நேசமித்திரன் நண்பர்கள் விவாத சுட்டிகள்:

https://plus.google.com/107535111654456442144/posts/FQRXyGSzdtJ

https://plus.google.com/107535111654456442144/posts/GNthSgpjxFc
Post a Comment