உண்மையிலேயே ஜெயமோகனோடு வாதம் பண்ணுவதற்கு ஏகப்பட்ட சக்தி வேண்டும். இரவெல்லாம் தூங்க மாட்டாரோ? எங்கேயிருந்து எடுக்கிறார் என்னுடைய புகைப்படங்களை? நானும் அவருடைய புகைப்படம் ஒன்றைப் போட்டு கீழே உங்கள் ரசனை விமர்சனத்தில் அது ஓட்டை இது ஓட்டை என்று திட்டலாமென்று பார்க்கிறேன் அவர் தளத்திலுள்ள புகைப்படங்களில் ஒன்று கூட தேறவில்லையே. எல்லா புகைப்படங்களிலும் கே.வி. அரங்கசாமி வாங்கிக்கொடுத்த ஜீன்சைப் போட்டுக்கொண்டு நரைத்த கிருதாவோடு ஒரு ரசனை விமர்சகனைப் போலவேயில்லையே!
ஹலோ ஜெயமோகன்,
நான் வைத்த சில கேள்விகளுக்கு உங்களிடமிருந்து இன்னும் பதிலில்லை.
பழைய பத்திகள் கீழே உடனடியாக refer பண்ண
பழைய பத்திகள் கீழே உடனடியாக refer பண்ண
{ரசனை விமர்சனம் பண்டு தொட்டு இருந்து வருவதுதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அது சமூக ஏற்ற தாழ்வினை நிலை நிறுத்துகிற அழகியல் கோட்பாடாகவே இருந்து வருகிறது. நவரசங்களை வரைமுறைப்படுத்தி பகுக்கும் நாட்டிய சாஸ்திரமும் எண்சுவையை (எட்டு மெய்ப்பாடுகள்) வரைமுறைப்படுத்தி பகுக்கும் தொல்காப்பியமும் எந்தெந்த ரசனை எந்தெந்த சுவை எந்தெந்த வகுப்பு மக்களுக்கு உரித்தானது என்றும் கூறி சமூக ஏற்றதாழ்வினை அழகியலாக அறுதி செய்கிறது. நாட்டிய சாஸ்திரம் உதாரணமாக சாந்தம் என்ற ரசமே நவரசங்களில் மிகவும் உயர்ந்தது உயர் சாதியினருக்கு உரியது சிருங்காரம், ஹாஸ்யம் கீழ் சாதியினருக்கு உரியது என்கிறது. சாந்தம் தவிர்த்த எண்சுவையை விவரிக்கும் தொல்காப்பியமும் இவ்வாறாகவே சுவைகளை தன் சமூக ஏற்றதாழ்வுகளுக்கு ஏற்ப படிவரிசைப்படுத்துகிறது. நம் சமகாலத்தில் ஏற்ற தாழ்வுகளை அறுதி செய்யும் அழகியலான ரசனை விமர்சனம் சந்தைப்பொருளாதாரத்தின் ஏற்றதாழ்வுகளையும் மதிப்பீடுகளையும் அழகியலாக்கும் முறைமை என்கிறேன்.
இரண்டும் வெவ்வேறு முறைமைகள் ஒன்றின் செயல்முறையை மற்றதில் எதிர்பார்க்கவோ, கலந்துகட்டி அடித்துவிடவோ முடியாது.
3. //ரசனை விமர்சனம் எப்போதுமே முதற்பேரிலக்கிய மரபு [canon] ஒன்றை நிறுவிக்கொண்டுதான் பேசும். அதுவே அதன் வழிமுறை. அந்த முதற்பேரிலக்கிய மரபிலிருந்துதான் அது தன் அளவுகோல்களை உருவாக்கிக் கொள்ளும். ஒப்பிடுவதன் மூலமே அது தன் தரமதிப்பீடுகளை உருவாக்கும்//
சரி. ரசனை விமர்சனம் செயல்படும் முறை அதுதான். ஆனால் canonization தனிப்பட்ட விமர்சகனால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. ரசனை விமர்சகன் செயல்படும் காலகட்டத்திலுள்ள ஆதிக்க நிறுவனங்கள், அரசு, மத நிறுவனங்கள், சமூக ஏற்றதாழ்வுகள், சமூக அமைப்பினை புனிதமாக மாற்றி காப்பாற்றுகின்ற கருத்தியல் எந்திரங்கள்,போட்டி அமைப்புக்கள் எல்லாம் இணைந்தே பேரிலக்கியம் என்று ஒரு சிலவற்றை உச்சத்தில் வைக்கின்றன. ஜெயமோகன் பாரதிக்கு மகாகவி அந்தஸ்தை தர மறுத்து முன் வைக்கும் ரசனை விமர்சனமும் அவர் முன்னிறுத்துகிற அளவுகோல்களும் எந்த கருத்தியல் எந்திரங்களின் ( ideological apparatus) வழி கட்டமைக்கப்படுகின்றன என்று வாசகர்கள் பார்க்கவேண்டும்.}
நான் கேட்கும் கேள்வி உங்கள் ரசனை விமர்சனம் எந்த கருத்தியல் எந்திரங்களின் வெளிப்பாடாய் இருக்கிறது என்று நீங்களே எனக்கு விளக்குங்கள். ஏனெனில் நான் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த பத்து பாயிண்டை சொல்லாதே மேலும் சொல்லு என்று ராவிழித்து எழுதிவிடுகிறீர்கள். இதே உத்தியைத்தான் பாரதி விவாதத்தின்போது உங்களோடு வாதாடிய ஜடாயு, மண்ணின் மைந்தன் முத்தையா ஆகியோரிடம் பயன்படுத்தினீர்கள். நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்து நான் கேட்கிற கேள்வியை preempt பண்ணாமல் உங்கள் விமர்சன முறை, அதன் தரவரிசைப்படுத்துதல்கள் எந்த கருத்தியல் எந்திரங்கள் சார்ந்தவை என்று சொல்லுங்கள். பாரதியை மகாகவி ஆக்கிய கருத்தியல் எந்திரங்களை பற்றி எழுதியிருக்கிறேனே என்ற உங்கள் பதிலை நான் ஏற்கனவே கேட்டுவிட்டேன்.
மரபின் மைந்தன் முத்தையாவிடம் எங்கே பாரதியில் தேறக்கூடிய கவிதைகளின் எண்ணிக்கை என்று நீங்கள் கேட்கவில்லை?
என்னுடைய எலியட் கட்டுரையில் நான் எண்ணிக்கையை வைத்து கவிதையை நாம் அளக்கமுடியாது என்று demonstrate பண்ணுகிறேன். அதற்கு உங்கள் பதில் என்ன?
நீங்கள் பதில் கட்டுரையில் குறிப்பிடும் அனைத்து நவ கவிகளும் பாழ் நிலத்தை மொழிபெயர்ப்பிலா வாசித்தார்கள்? எல்லோருமே நவ காலனீயச் சூழலில் ஆங்கிலத்தில் படித்தவர்கள்தானே? மொழிபெயர்ப்பிலும் வேலை செய்வதுதான் சிறந்த கவிதை என்ற உங்கள் ரசனை அளவுகோலுக்கு ஆதரவாக உங்கள் கட்டுரையில் என்ன இருக்கிறது?
என் கட்டுரையில் பாரதி கம்பன் என்று நீங்கள் ஒப்பிட்டு பேசியது தவறு என்பதை எலியட் ஹோமர் என்ற இணை மூலம் சுட்டியிருக்கிறேன். அதற்கு உங்கள் பதில் என்ன?
என் கட்டுரையில் பாரதி கம்பன் என்று நீங்கள் ஒப்பிட்டு பேசியது தவறு என்பதை எலியட் ஹோமர் என்ற இணை மூலம் சுட்டியிருக்கிறேன். அதற்கு உங்கள் பதில் என்ன?
நான் ஒரு சிந்தனை ஒழுங்கில் உருவாக்கப்பட்ட கலைச்சொற்களை அந்த ஒழுங்குக்குட்பட்டுதான் பயன்படுத்துகிறேன். அதுவே சிந்தனையை துல்லியமாக்க உதவும்.
நீங்கள் உங்கள் பாரதி விவாதங்களை ‘பாரதிக்கான இன்றைய மதிப்பு’ என்றே தலைப்பிட்டிருந்தீர்கள். நான் இன்னும் இன்றைக்கான வாசிப்பு என்ற இடத்துக்கு வரவேயில்லை. அதற்குள் எப்படி கீழ்கண்ட வரியை எழுதுகிறீர்கள்?
//ஆக, கடைசியில் நாம் இன்னொரு பொதுவான புரிதலை அடைந்துவிட்டோம். உங்கள் அணுகுமுறை பின்நவீனத்துவ விமர்சனம் என்பதால் நீங்கள் பாரதியைத் தர அடிப்படையில் மகாகவி என வகைப்படுத்தவில்லை. என் விமர்சனம் முழுக்க அதைச் சார்ந்ததாகவே இருந்தது.//
நீங்கள் செய்வது textual criticism கணெக்கெடுப்பில்லை என்றால் பாரதியை வரி வரியாய் வாசித்து நீங்கள் எழுதியது எங்கே? இன்னும் எழுதவில்லையென்றாலும் பாதகமில்லை. இப்பொழுதாவது எழுதிக்காட்டுங்கள்.
உங்களுக்கு பாரதியை வாசிக்கச் செவியில்லை என்றொரு விமர்சனத்தைச் சொன்னேன். அதற்கு உங்கள் பதில் என்ன? பாரதியை நீங்கள் செவிகொண்டு வாசித்தற்கான அத்தாட்சி எங்கே?
Diachronic, synchronic என்பதை உங்கள் வழமைப்படி இருமை என்று மட்டுமே புரிந்துகொண்டீர்கள். Synchronic perspective includes diachronic details. ‘இன்றைக்கு பாரதி’ என்பதில் இன்றைக்கு என்பதே synchronic perspectiveஐ சுட்டக்கூடியது. ‘இன்றைக்கு’ என்பதை நீங்கள் என்னவாக புரிந்துகொண்டீர்கள்?
ஒரு விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும்போது preempt பண்ணுவது, தர்க்கம் வளர்வதற்கு முன்பே foreclose பண்ணுவது முறையான வாதத்தை நடத்த உதவாது.
அதிகப்படியான விபரங்களால் மூச்சு திணற அடிக்காமல், எல்லோருக்கும் புரியும்படி துல்லியமாக கேட்ட கேள்விகளுக்கு பதிலை எழுதுங்கள்.
நம் விவாதத்தை உங்கள் வாசகர்களே உண்மையாக வாசித்து வருகிறார்கள் என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.
நான் நீங்கள் பதிலெழுதும் நேரத்தில் எலியட்டும் பாரதியும் கட்டுரையை பதிவேற்றி விவாதத்தை தொடர்கிறேன்.
6 comments:
அன்புள்ள எம்டிஎம்
நீங்க அப்டேட்டா இல்லை , இப்போது அவர் அணிவதெல்லாம் பெங்களூரில் படிக்கும் அஜிதன் தனக்காக வாங்குவதை (துவைக்க, தோய்க்க தேவையிருக்காத )
ஆனாலும் ஜெயமோகன் நல்ல ரசனைவிமர்சகர் என நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் , உங்கள் நல்ல நல்ல படங்களாக போடுகிறாரே ? ( ஆனால் அவை உங்களை பின்னைநவீன விமர்சகராக காட்டவில்லை , குறைந்தது ஒரு மழித்தல் வேண்டா போஸாவது தேவை )
:)))
அன்புள்ள எம்.டி.எம் அவர்களே,
தங்கள் பெயரை எம்.டி.எம் முத்துக்குமாரசுவாமி என தமிழில் கூகுளில் தமிழ் மொழியில் "படங்கள்" தெரிவு செய்து கிடைத்த புகைப்படங்களை ஜெயமோகன் அவரது தளத்தில் பதிவு செய்துள்ளார்
அன்புள்ள அரங்கசாமி; ஜெயமோகன்தான் எழுதியிருக்கிறார் நீங்கள் அவருக்கு ஜீன்ஸ் வாங்கித் தந்ததாக. அவர் அஜிதன் வாங்கித்தந்ததையும் எழுதட்டும். அவர் குடும்ப உறவு, குரு சிஷ்ய உறவு என்று எழுதியுள்ளதை விமர்சித்து குடிமியைப் பிடித்து கும்மு கும்மென்று கும்மிவிடலாம். இப்போதைக்கு துப்புக்கு நன்றி.
இந்த விவாதத்தை பூஸ்ட், ஹார்லிக்ஸ் ,த்ரீரோசஸ் கம்பனிகள் யாராவது ஸ்பான்சர் செய்தால் நன்றாய் இருக்கும்.முடியலை!!
உண்மையில் இந்த விவாதம் பயனுள்ளதாக உள்ளது.அர்த்தமற்ற தனிப்பட்ட தாக்குதல்,சர்ச்சைகளுக்கு மத்தியில் செறிவான விவாதம் நடைபெறுவது தமிழ் இலக்கியத்துக்கு நல்லது
//ஆனால் அவை உங்களை பின்னைநவீன விமர்சகராக காட்டவில்லை , குறைந்தது ஒரு மழித்தல் வேண்டா போஸாவது தேவை//
கே.வி.அரங்கசாமி, காஞ்சனை சீனிவாசன் எடுத்த நகுலன் புகைப்படங்களை, நகுலனை ‘ஒரு மிஸ்டிக் பிம்பமாகக்’ காண்பிக்க உதவும் புகைப்படங்கள் என்று ஜெ.மோ குறிப்பிட்டிருக்கிறார். நாலு நாளோ நாலு மாதமோ கழித்து, தளவாய் சுந்தரத்தின் எழுத்தாளர் புகைப்படத் தொகுப்பை (பாராட்டத்தக்க முயற்சி) அறிமுகப்படுத்தி எழுதுகிறார் - எழுத்தாளன்னா ஹெட் ஷாட் தானே வேணும் நமக்கு; மூளை இருக்கிற முகம் தானே முக்கியம். இப்போது ஜெ.மோவின் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் எடுத்துள்ள கலர் கலரான ஜெ.மோ போட்டாக்கள் தவிர்த்து, தனது 85 வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும்போது ஸ்டாக்ஹோமிலிருந்து வரும் ஒரு ஓஞ்சனை போணிவாசன் ஜெயமோகனை அதேமாதிரி ‘இந்திய மரபைப் பிரதிபலிக்கும் ஒரு ஆன்மாவாக’ புகைப்படம் எடுத்தால், ஜெ.மோ பாணியில் நீங்களும் அதன் ‘அசல் பெறுமதியைச்’ சுட்டிக்காட்டிப் பேசுவீர்கள் என்று நம்புகிறேன்.
ஜெ.மோ தவிர பிறரையும் படியுங்கள் - இல்லையென்றால் மாட்டைப்பற்றிக் கேட்டால் கம்பத்தைப்பற்றிப் பேசும் கலை உங்களுக்கு தாறுமாறாகக் கைகூடி வந்து தொல்லை கொடுக்கப்போகிறது.
Post a Comment