Wednesday, October 19, 2011

ஜெயமோகனின் எம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடித்தளம் கட்டுரைக்கு எதிர்வினை


ரசனை விமர்சனம் பண்டு தொட்டு இருந்து வருவதுதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அது சமூக ஏற்ற தாழ்வினை நிலை நிறுத்துகிற அழகியல் கோட்பாடாகவே இருந்து வருகிறது. நவரசங்களை வரைமுறைப்படுத்தி பகுக்கும் நாட்டிய சாஸ்திரமும் எண்சுவையை வரைமுறைப்படுத்தி பகுக்கும் தொல்காப்பியமும் எந்தெந்த ரசனை எந்தெந்த சுவை எந்தெந்த வகுப்பு மக்களுக்கு உரித்தானது என்றும் கூறி சமூக சாதீய ஏற்றதாழ்வினை அழகியலாக அறுதி செய்கிறது. நாட்டிய சாஸ்திரம் உதாரணமாக சாந்தம் என்ற ரசமே நவரசங்களில் மிகவும் உயர்ந்தது உயர் சாதியினருக்கு உரியது சிருங்காரம், ஹாஸ்யம் கீழ் சாதியினருக்கு உரியது என்கிறது. சாந்தம் தவிர்த்த எண்சுவையை விவரிக்கும் தொல்காப்பியமும் இவ்வாறாகவே சுவைகளை சமூக சாதீய ஏற்றதாழ்வுகளுக்கு ஏற்ப படிவரிசைப்படுத்துகிறது. நம் சமகாலத்தில் ஏற்ற தாழ்வுகளை அறுதி செய்யும் அழகியலான ரசனை விமர்சனம் சந்தைப்பொருளாதாரத்தின் ஏற்றதாழ்வுகளையும் மதிப்பீடுகளையும் அழகியலாக்கும் முறைமை என்கிறேன். 


உமணரின் சந்தையும் உப்பும் ஒவ்வொரு வரலாற்று காலகட்டத்திலும் என்னவாக இருந்தது என்று பார்க்கத்தெரிந்தால், ரசனை அழகியலுக்கும், ஒற்றை இந்திய அரசியலுக்க்கும் உள்ள தொடர்பையும் பார்க்கலாம். எஸ்ரா பவுண்டையோ, அல்லது ஹெரால்ட் ப்ளூமையோ அப்புறம் பார்க்கலாம்.
நமது வேர்களை கற்றுணர்ந்த நிபுணர், வரலாற்றினை அறிந்த படிப்பாளி, இருபது வருடங்களாக தேங்கிக்கிடக்காத குட்டை, ரசனை விமர்சன கூக்குரல் ஜெயமோகனுக்கு  ரசனை விமர்சனத்தின் இந்திய வேர்களையும், அமைப்பியலின் synchronic approach-ஐயும் நான் பாலபாடமாக சொல்ல நேர்ந்தது இன்றைய காலையின் துரதிர்ஷ்டம்தான்.
இனி தனி நபர் தாக்குதல்: சந்தைப்பொருளாதாரத்தின் விமர்சன முறைமையாக உள்ளது என்று ரசனை விமர்சனத்தை condemn பண்ணுகிற நான் சந்தைப்பொருளாதார முதலாளித்துவத்தின் மேல் வெறுப்பைத்தானே வெளிப்படுத்துகிறேன்? இது எப்படி ஃபோர்ட் ஃபவுண்டேஷன்/அமெரிக்க முதலாளித்துவம்/ திருச்சபையின் குரலாகும். நான் வேலை பார்க்கும் நிறுவனம் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியுதவியை சமீப காலம் வரை பெற்று வந்த நிறுவனம்தான். நான் வேலைபார்க்கும் நிறுவனத்தில் நான் ஒரு பணியாள். இப்படியாகவே ஒவ்வொருவரும் வேலைபார்க்கும் நிறுவனத்திற்கு எங்கெங்கெல்லாமிருந்து நிதி வருகிறது என்று கணக்கெடுத்து நாம் சிந்தனைத் துறை விவாதங்களை நடத்துவோமா?
‘நாம்‘ என்றெழுதினால் ஜெயமோகன் என்று எப்படி அர்த்தமாகும்? அவரைப் பெயர் குறிப்பிடாமல் ‘நாம்தான் கழிசடை சினிமாவிற்கு கதை எழுதிக்கொண்டு, கீதை படித்துக்கொண்டிருக்கிறோமே‘ என்று வேறொரு இடத்தில் எழுதிருக்கிறேனாம். நான் வியாபார சினிமாவுக்காக வேலை பார்த்திருக்கிறேன் என்று இவருக்குத் தெரியுமா, கீதைக்கு வியாக்கியானம் செய்வது என் ஆசிரியத்தொழிலின் ஒரு பகுதி என்று இவருக்குத் தெரியுமா? நாம் என்று எழுதினால் நாம் என்று எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அந்த நாம் ஜெயமோகனையும் உள்ளடக்கியிருக்குமென்றால் நான் ஏதும் செய்வதிற்கில்லை. கீதைக்கு உரை எழுதுபவர்கள் தனக்குத்தானே இது பின் நவீனத்துவகீதை என்று லேபிள் ஒட்டிக்கொள்வதில்லை. லேபிள் ஒட்டுவது யார் என்று வாசகர்களே முடிவு செய்யலாம். 
மன்னிக்க வேண்டும் ஜெயமோகன். நிறைய எழுதக்கூடியவராக இருக்கிறீர்கள்,  நிறைய படிக்கிறீர்கள், நல்ல குருக்களிடத்து பாடம் கேட்டிருக்கிறீர்கள். இவன் இவ்வளவுதான், இவன் இடம் இதுதான் என்று தீர்ப்பு கூறி சம்பந்தாசம்பந்தமில்லாமல் ஒப்பீடுகள் நிகழ்த்தி, நான் ஒரு அதாரிட்டியாக்கும், படைப்பாளியாக்கும் என்ற சவடால்கள், தொடைதட்டல்களை விட்டுவிட்டு உங்களால் முடிந்த பங்களிப்புகளை தமிழுக்குச் செய்யுங்கள். உங்கள் நண்பன் உங்கள் பங்களிப்புகளைத் தமிழுக்குக் கோருபவன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இதுவரை எழுதியிருக்கும் non-fiction அனைத்தையும் தயவுசெய்து தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்துங்கள். உங்களை வரி வரியாகப்படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். 
ஜெயமோகனுக்கு மேலும் சில விவாத சட்டகங்கள் எழுத உத்தேசித்திருந்தேன். என்ன செய்ய இந்தக் குறிப்பை எழுத நேரிட்டது.
Post a Comment