Tuesday, December 30, 2025

என்னுள் என்ன தீர்க்கதரிசனம் இருக்கிறது? கவிதையின் கலை பற்றி போர்ஹெஸும் நெரூதாவும்


கவிதையின் கலை (Ars Poetica ) என்ற  தலைப்பில் போர்ஹெஸும் நெரூதாவும் கவிதைகள் எழுதியுள்ளனர். அவை இரண்டும் கவிதையைப் பற்றி எத்தனை வேறுபட்ட, எதிரெதிர் சிந்தனையை முன்வைக்கின்றன என்பது ஆச்சரியத்திற்குரியது. கவிதையின் கலை என்பதற்கான லத்தீன் பெயர் ‘Ars Poetica’ ரோமானிய கவி ஹோரஸிடமிருந்து ஆரம்பிக்கிறது. போர்ஹெஸ் கவிதையை முடிவற்ற சுழல்பாதையில் காலாதீதத்தில் செல்லும் மெய்யியல் பயணமாகப் பார்க்கிறார் என்றால் நெரூதாவோ இரத்தமும் தூசியும் வியர்வையும் நிறைந்த அழுக்கான, ஒழுங்கற்ற  தினசரி வாழ்க்கையில் பங்கேற்கும் கலையாகக் கவிதையைப் பார்க்கிறார். எனக்கோ போர்ஹெஸும் நெரூதாவும் இணைந்த பார்வையொன்றே தேவைப்படுவதாக இருக்கிறது.

நெரூதாவின் கவிதையை டொனால்ட் வாஷ், ஏஞ்சல் ஃப்லோரஸ் என இருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். இரண்டு மொழிபெயர்ப்புகளுக்கும் பல முக்கியமான வித்தியாசங்கள் இருக்கின்றன.  நான் ஸ்பானிஷ் மொழியில் கவிதாயினியும், போர்ஹெஸ் ஆராய்ச்சியாளருமான ஓல்கா லதுங்காவைத் தொடர்பு கொண்டு இரண்டு மொழிபெயர்ப்புகளில் எது சரியானது என்று கேட்டேன். லதுங்கா இரண்டுமே பகுதிதான் சரி என்று பதிலளித்தார். அவருடைய பதிலை வைத்து இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் சரியான பகுதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். 

---

கவிதையின் கலை

— 

ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

"கண்ணாடிகள், கனவுகள், காலங்கள்- போர்ஹெஸ் கவிதைகள்"- தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி   தமிழ்வெளி வெளியீடு +91 90940 05600 பக்கம்: 153

——-

காலத்தாலும் நீராலும் ஆன நதியை உற்றுப் பார்ப்பதென்பது

காலம் இன்னொரு நதியென நினைவில் கொள்வது

நதி போல நாம் வழி தவறுவதை அறிகையில்

 நம் முகங்கள் நீரெனவே மறைவது அறிவது

விழித்திருத்தல் இன்னொரு கனவென உணர்வதென்பது

விழிப்பு கனவற்றிருப்பதையும் கனவாய் காண்கிறதென உணர்வது

எந்தச் சாவினை நாம் நம் எலும்புகளில் உணர்ந்து பயமடைகிறோமோ

 அந்தச் சாவினையே நாம் ஒவ்வொரு இரவிலும் 

கனவென்று அழைக்கிறோம் என்று உணர்வது

ஒவ்வொரு நாளிலும் வருடத்திலும்

 ஒரு மனிதனின் அனைத்து நாட்கள் வருடங்களுக்கான

 ஒரு குறியீட்டினைக் காண்பதாவது

அந்த வருடங்களின் கோபங்களை

 ஒரு இசையாக, ஒரு சப்தமாக, ஒரு குறியீடாக மாற்றுவதாகிறது

 மரணத்தைக் கனவில் காண்பதென்பது

 சூரிய அஸ்தமனத்தில் ஒரு பொற் சோகம்

என்பதாகவே

கவிதை எளிமையானது சாவற்றது

சூரியோதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் போல திரும்ப வருவது

அந்தியின் சில வேளைகளில்

கண்ணாடியின் ஆழத்திலிருந்து நம்மைப் பார்க்கும் முகமுண்டு

கலை அது போன்ற ஒரு கண்ணாடியாகவே

 நம் முகத்தை நமக்குக் காட்டித்தர வேண்டும்

யுலிசஸ் அதிசயங்களால் சோர்வுற்று

 எளிமையும் பசுமையுமாயிருந்த இதாகாவைக்

கண்ணுற்று அன்பின் மிகுதியில் அழுதான் என்பார்கள்

கலை அந்த இதாகா

ஒரு நித்திய பசுமை, அதிசயங்களல்ல

கலை ஓடும் நதியைப் போல முடிவற்றது

கடந்து செல்வது, இருப்பினும் இருப்பது

நிலையற்ற ஹெராக்ளிட்டிஸ்

அவராகவும் வேறொருவராகவும்,

ஓடும் நதியினைப் போலவே

இருப்பதைக் காட்டும் கண்ணாடி

—-

கவிதையின் கலை

பாப்லோ நெரூதா

தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி 

—-

நிழலுக்கும் வெளிக்குமான 

இடைவெளியில்,

அலங்காரங்களுக்கும் இளம்பெண்களுக்கும் 

இடையில்,

ஒரே ஒரு இதயத்தின் 

துயரமிகு கனவுகளால் நிறைந்தவனாய்,

திடீரென வெளிறிப் போன, 

நெற்றி வதங்கிய,

ஒவ்வொரு நாளையும் 

மனைவியை இழந்தவனின் 

கோபமிகு துயரத்தை அனுபவிக்கும் எனக்கு,

ஆஹா, நான் துயரில் குடிக்கும் 

எந்தவொரு கண்ணுக்குப் 

புலப்படாத நீர்த்துளிக்கும்,

நான் நடுங்கி வரவேற்கும் 

ஒவ்வொரு ஒலிக்கும்,

அதே இன்மை நிறைந்த தாகமும், 

அதே குளிர்ந்த காய்ச்சலும் இருக்கிறது—

முளைக்கும் காதுபோல, 

மறைமுகமான கவலையுடன்,

கொள்ளையர்கள் அல்லது பேய்கள் 

வருவதாகத் தோன்றுவது போல,

நிலைத்து விரிந்த 

ஒரு ஆழ்ந்த புடைப்பின் உள்ளே,

அவமதிக்கப்பட்ட உணவளிப்பவன் போல,

சிறிது கரகரப்புடன் ஒலிக்கும் மணி போல,

பழைய கண்ணாடி போல,

இரவிலே மதுபோதையில் 

வெறித்தனமாக வரும் 

விருந்தினர்கள் கூடி நிறைத்த

மலரற்ற தனிமைமிகு 

வீட்டின் மணம்போல,

தரையில் எறியப்பட்ட 

உடைகளின் வாசனையுடன்—

சாத்தியமாக இன்னொரு குறைவான 

மனச்சோர்வான வடிவிலும் இருக்கலாம்—

ஆனால் உண்மை என்னவெனில்,

 திடீரென என் மார்பைத் தாக்கும் காற்றும்,

என் படுக்கையறையில் விழுந்துவிடும் 

அந்த முடிவற்ற இரவுகளும்,

பலியீட்டின் சூட்டில் எரியும் 

ஒரு நாளின் சத்தமும்,

என்னுள் என்ன தீர்க்கதரிசனம் இருக்கிறது 

என்று துயரத்தோடு கேட்கின்றன,

பதில் கிடைக்காமல் கூப்பிடும் 

பொருட்களின் தட்டும் ஒலியும்,

ஒரு இடையறாத இயக்கமும்,

ஒரு குழப்பமடைந்த பெயரும் உள்ளன. 

No comments: