என் மனதை உலுக்கிய, அதே சமயம் வாழ்வதற்கான விழைவைத் தீவிரப்படுத்திய பல நூல்களுள் மிக முக்கியமானது விக்டர் ஃப்ராங்க்ள் (Viktor Frankl) எழுதிய ‘Man’s Search for Meaning’ (மனிதனின் அர்த்தத்திற்கான தேட்டம்). ‘ஆஷ்விட்ச் வதை முகாமிற்குப் பிறகு கவிதை எழுதுவதே சாத்தியமற்றது’ என்று தியோடர் அடோர்னோ ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். போலந்து நாட்டில் அமைந்திருந்த அந்த ஆஷ்விட்ச் வதை முகாமில்தான் நாஜிக்களால் ஏராளமான யூதர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அத்தகைய நரகத்தில் மூன்று ஆண்டுகள் கைதியாக இருந்து, அதிலிருந்து எப்படியோ தப்பிப் பிழைத்து வந்த விக்டர் ஃப்ராங்க்ள் எழுதியதே இந்தப் புத்தகம்.
மனிதனின் உயிரிச்சைக்கான உந்துசக்தியை ஃப்ராய்ட் ‘இன்பத்திற்கான நாட்டம்’ (Will to Pleasure) என்றும், ஆட்லர் நீட்ஷேயைப் பின்பற்றி ‘அதிகாரத்திற்கான வேட்கை’ (Will to Power) என்றும் வரையறுத்தனர். ஆனால், ஆஷ்விட்ச் அனுபவங்களுக்குப் பிறகு, உயிர் வாழ்வதற்கான அர்த்தத்தைக் கண்டடைவதே (Will to Meaning) மனிதனின் அடிப்படை விழைவு என்று ஃப்ராங்க்ள் வரையறுக்கிறார்.
யூதர் என்பதைத் தவிர, வேறு எந்தத் தவறும் இழைக்காத அப்பாவியான ஃப்ராங்க்ள், வதை முகாமில் சொல்லொணா அவமானங்களுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளாகிறார். அவருடன் இருந்த பலரும் மனவுறுதி இழந்து தாங்களாகவே மடிந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். அந்த மூன்று ஆண்டுகளில் தான் அணுஅணுவாக அனுபவித்த சித்திரவதைகளை இந்நூலில் அவர் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
வாழ்க்கைக்கான அர்த்தங்களாக விக்டர் ஃப்ராங்க்ள் கண்டடைந்தவை எவை? முதலாவதாக, எத்தகைய சூழலிலும் அவர் தொடர்ந்து செயல்படுகிறார்; வதை முகாமிலும் தான் எழுத வேண்டிய நூலை ரகசியமாக எழுதுகிறார். இரண்டாவதாக, உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத தன் மனைவியின் மீதான ஆழ்ந்த காதலைத் தன் அகத்தில் சுமந்து வாழ்கிறார். மூன்றாவதாக அவர் கண்டடைந்த அர்த்தம் அபூர்வமானது: ‘வாழ்க்கையிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதைவிட, நம்மிடமிருந்து வாழ்க்கை எதை எதிர்பார்க்கிறது (குறிப்பாகத் துயரங்களின் வாயிலாக) என்பதை நாம் உணர்வதே முக்கியம்’ என்று எழுதுகிறார். கிட்டத்தட்ட இதே போன்றதொரு தரிசனத்தையே கொரியாவின் முதுபெரும் கவிஞர் கோ யுன் தன் சிறைவாசத்தின்போது கண்டடைந்தார்.
உலக அளவில் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிப் புகழ்பெற்ற சுய உதவி நூலாக வாசிக்கப்படும் இந்த நூல், உளவியல் சிகிச்சையில் ‘லோகோ தெரபி’ (Logotherapy) எனும் புதிய முறை உருவாவதற்குக் காரணமாகவும் அமைந்தது. சித்திரவதைகளுக்கு மத்தியிலும் ஒரு மனிதன் தன் சுயகௌரவத்தை எப்படிக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதைப் பக்கத்திற்குப் பக்கம் விவரிக்கும் ஆவணம் இது. ‘எப்பேர்ப்பட்ட குரூரமான நிலைமைக்கும் மனிதன் பழகிவிடுவான்’ என்று தாஸ்தாவ்ஸ்கி கூறியதுண்டு. ஆனால் இந்நூலோ, ‘அப்படியெல்லாம் எதுவும் பழகிவிடாது; ஒவ்வொரு நொடியும் ஒருவன் தன்னைத் தானே மீட்டெடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது.
நூலை வாசித்து முடித்தவுடன் எஞ்சி நிற்கும் கேள்வி ஒன்றுதான்: சக மனிதனை அழித்தொழிக்க வேண்டும் என்ற குரூர மனோபாவம் (Will to destroy others) கழிசடைகளுக்கு எப்படித்தான் உண்டாகிறது?

No comments:
Post a Comment