முழு மகாபாரதத்தையுமே கதாபாத்திரங்களின் எதிரிணைகளாக வாசிக்கலாம் என்று சொல்லக்கூடிய செவிவழிக்கதை ஒன்று உண்டு. அக்கதையில் ஓவ்வொரு கதாபாத்திரத்தின் முன்பும் மாயக்கண்ணாடி ஒன்றை வைத்தபோது அக்கண்ணாடி அக்கதாபாத்திரத்தின் ஆழ்மனதில் இருந்த ஆசைமுகத்தை அல்லது எதிரிணைக் (double or Doppleganger) கதாபாத்திரத்தின் முகத்தைக் காட்டியதாம். பீஷ்மருக்கு சிகண்டியையும், பீமனுக்கு துரியோதனனையும், சாயாமுகி என்ற மாயக்கண்ணாடி காட்டியதில் ஆச்சரியமில்லை ஆனால் திரௌபதிக்கு கர்ணனையும், கிருஷ்ணனுக்கு சகுனியையும் சாயாமுகி காட்டுவது மகாபாரதக் கதைக்களனையே புதிய கோணத்தில் பார்க்க வைப்பதாகும். இன்னொரு கதையில், இன்னொரு மாயக்கண்ணாடி, மணிதர்ப்பனம் எனும் ஆபரணக் கண்ணாடி துரியோதனனுக்கு சிறுவனாக தனிமையில் உழல்பவனாக அவனைக் காட்டித்தருவது துரியோதனனுக்கு மட்டுமல்லாமல், நமக்கும் அவனைப் பற்றிய தரிசனத்தைத் தருகிறது.
அரசனும் விதூஷகனும் எனவே அரசு அதிகாரமும் நகைச்சுவையும் இரட்டைகள் என்ற கருத்தே இந்திய மரபுகளில் காணப்படுகிறது. சமஸ்கிருத நாடகங்களில் வருகின்ற விதூஷகன் கதாபாத்திரமும் தெருக்கூத்து போன்ற நாட்டுப்புற நாடகங்களில் வருகின்ற கட்டியங்காரனும் அரசனின் இரட்டை கோமாளி, அரசு அதிகாரத்தின் இரட்டை நகைச்சுவை, என்பதை அறுதி செய்கின்றன. அக்பர்-பீர்பால், கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன் கதைகள் அரசு அதிகாரத்தையும் நகைச்சுவையையும் ஒன்றன் ஆடிபிம்பமாக மற்றதைக் கருதிய மரபின் தொடர்ச்சிகளே ஆகும். அரசனின் ஆடிபிம்பமாக கோமாளி ஷேகஸ்பியரின் நாடகங்களில் தோன்றுவதற்கு பதினாறாம் நூற்றாண்டாகிறது.
ஒன்றோடு ஒன்று பிணைந்த 'இரட்டைத்தன்மை' (Duality) என்ற கருத்தாக்கமோ, அல்லது 'இரட்டையர்' என்ற கதாபாத்திரங்களோ மேற்குலக நாகரிகத்திலும், இலக்கியத்திலும், தத்துவத்திலும் ஆதியிலிருந்தே காணப்படுவதாகும். பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவ இரட்டைவாதம், யூத-கிறித்தவ இறையியலைப் பாதிக்கக்கூடியதாக இருந்தது. இது உடல்-ஆன்மா, நன்மை-தீமை ஆகியவற்றுக்கு இடையே அடிப்படை வேறுபாடுகளை நிறுவக்கூடியதாக வரலாற்றில் வளர்ச்சி பெற்றது. இந்தக் கட்டமைப்பு ஆரம்பகால இலக்கியங்களில் நீதி நாடகங்கள், சிக்கலான கதாபாத்திர இணைப்புகள் ஆகியனவாக உருமாற்றம் அடைந்தது. இதற்கு ஜான் மில்டனின் “இழந்த சொர்க்கம்” (Paradise Lost) காவியத்தில் வரும் கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையிலான இரட்டைத்தன்மையை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
பண்டைய காவியமான “கில்காமேஷ்” கூட கதாநாயகனின் இரட்டையான என்கிடுவை (Enkidu)ச் சித்தரிக்கிறது. என்கிடு ஆரம்பத்தில் கதாநாயகனின் எதிரியாகச் செயல்பட்டு, பின்னர் தோழனாக மாறுகிறார். இந்த இரட்டைக் கதாபாத்திரங்களையும் இரட்டைக் கருத்தாக்கங்களையும் குறிக்கும் 'Doppelgänger' என்ற ஜெர்மானிய மொழிச் சொல், 1796-இல் ஜோஹான் பால் ஃபிரெட்ரிச் ரிக்டரின் “சீபென்காஸ்” (Siebenkäs) என்ற கோதிக் (Gothic) நாவலின் எழுச்சியின் போது உருவாக்கப்பட்டது. Doppelgänger என்ற சொல், கதாபாத்திரங்கள் என்ற தூலமான வடிவங்களை மீறி, குறிப்பிட்ட உளவியல் நிலைகளையும், ‘இருப்பியல்’ (Ontology) என்று குறிப்பிடப்படும் தத்துவத்துறையில் ஒரு நிழல், மாற்றுச் சுயம், அல்லது தற்போதைய சுயத்தை வெளியிலிருந்து கவனிக்கும் கண்காணிப்பாளன் என இன்னும் நுட்பமான இரட்டை உணர்வைச் சிந்தனையில் உருவாக்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு மேற்குலக இலக்கியத்தில் Doppelgänger எனும் இரட்டை, முற்றிலுமான அமானுஷ்ய அல்லது மீபொருள் திகிலிலிருந்து ஆழமான உளவியல் ஆய்வுக்கு நகர்ந்தது.
1846-ஆம் ஆண்டு வெளிவந்த தாஸ்தாவ்ஸ்கியின் “இரட்டையர்” (The Double) எனும் குறுநாவல், தன் சமகால அதிகார அமைப்புகளின் உளவியல் சிதைவின் அடிப்படையைச் சித்தரிப்பதாக அமைந்தது. விளாடிமிர் நபக்கோவின் 1934-ஆம் ஆண்டு நாவலான “விரக்தி” (Despair), இந்த இரட்டையர் கதைச் சட்டகத்தைப் பயன்படுத்துகிறது; ஆனால் அதை முற்றிலும் தகர்த்தெறிவதாகவும் இருக்கிறது. நபக்கோவ் இந்த இரட்டையர் கருத்தை, தாஸ்தாவ்ஸ்கியின் 'ஆன்மத் தேடல்' என்ற உணர்ச்சிமயமான பாரம்பரியத்தை நேரடியாக இலக்காகக் கொண்ட இலக்கியத்தைத் தலைகீழாக்குவதற்கான ஒரு மீபுனைவு (Metafiction) கருவியாகத் தன் நாவலில் முன்வைக்கிறார். அதனால் “விரக்தி” ஓர் இலக்கியப் பிரதியாக, இரட்டை என்பதைத் தன்னையே மையமாகக் கொண்ட மாயையாகவும் (Solipsistic Delusion) மாற்றிவிடுகிறது. நபக்கோவின் கைகளில் இரட்டையர் எனும் கதாபாத்திரச் சித்தரிப்பு, உளவியல் வெளிப்பாடாக அல்லாமல், தூய அழகியலின் மாயையாக மாறிவிடுகிறது.
“விரக்தி” கதையின் நாயகனும் கதைசொல்லியுமான ஹெர்மன், தனது உருவத்திற்கும் சமூக அந்தஸ்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத, நாடோடியும் ஏதிலியுமான பெலிக்ஸைத் தன்னுடைய இரட்டையாகக் கருதுவது என்பது, இரட்டை என்பதே ஒரு அழகியல் புனைவு என்பதை உடனடியாகச் சொல்லிவிடுகிறது. தன்னோடு உருவ ஒற்றுமை இல்லாத பெலிக்ஸைக் கொல்வதன் மூலம், தான் இறந்துவிட்டதாக உலகை நம்பவைக்க முடியும் என்று ஹெர்மன் நினைப்பது, இந்த இரட்டை என்ற கருத்தாக்கத்தையே அபத்தமானதாக மாற்றிவிடுகிறது. நபக்கோவ் “விரக்தி” என்ற அபாரமான நாவலின் மூலமாக, தாஸ்தாவ்ஸ்கியின் ஆன்மத் தேட்டம் என்பதை மட்டுமல்லாமல், மேற்கத்தியத் தத்துவ, இலக்கியப் பாரம்பரியத்தின் அடியோட்டங்களில் ஒன்றான இரட்டை எனும் கருத்தாக்கத்தையே தகர்த்தெறிகிறார்.
ஹெர்மனின் இரட்டை என்பது ஒரு மாயத்தோற்றம்; கதையில் ஒரு தவறான பிரதி உருவம். இது அவனுடைய ஆழமான தன்னாதிக்க வெறி, தன்முனைப்பின் உடல் வெளிப்பாடு, மற்றும் சுயமோகம் ஆகியவற்றின் கலவை. தாஸ்தாவ்ஸ்கியின் “இரட்டையர்” நாவலில் காணப்படும் உளவியல் நோய்மை, ஹெர்மனிடம் சுத்தமாகக் காணப்படுவதில்லை. ஆகவே, பெலிக்ஸை ஓர் உண்மையான ஆழ்மன வெளிப்பாடாகவோ, அல்லது மாற்றுச் சுயமாகவோ (உளப்பகுப்பாய்வு ரீதியாகப் படிக்கப்படுவது போல) விளக்குவது, கதையின் நூதன இயக்கத்தால் வேண்டுமென்றே நிராகரிக்கப்படுகிறது. இதன் மூலம் நபக்கோவ், பகுப்பாய்வைக் கதாநாயகனின் ஆழமான உட்புறச் சிக்கல்களிலிருந்து அவனது மேலோட்டமான, வேண்டுமென்றே செய்யும் சுய-ஏமாற்றுதல் மற்றும் சுயமோகத் திட்டமிடலுக்கு மாற்றுகிறார்.
“விரக்தி” நாவலின் இன்னொரு முக்கியமான அம்சம், கதைசொல்லியான ஹெர்மன் பொய்யனாகவும், அவன் சொல்லக்கூடிய கதை நம்பத்தகாததாகவும் இருப்பது. 'நம்பகத்தன்மையற்ற கதைசொல்லி' (Unreliable Narrator) எனும் இந்த உத்தி, மீபுனைவுக் கதையாடல்களில் நபக்கோவினால் உருவாக்கப்பட்டு, இன்று உலக இலக்கியங்கள் பலவற்றிலும் பரவியிருக்கிறது. ஹெர்மன் தன்னை ஒரு மேதையாகவும் படைப்பாளியாகவும் பார்க்கிறான். ஆனால் நபக்கோவ் அவனைப் படிப்படியாகச் சமூக விரோதியாகவும், தன்னலம்கொண்ட அரக்கனாகவும், தோல்வியுற்ற கலைஞனாகவும் அம்பலப்படுத்துகிறார்.
மேலும் நபக்கோவ் இக்கதையை ஒரு தலைகீழ் மர்ம நாவலாகவும் (Inverted Mystery), திரில்லர் வகைக்கதைகளைக் கேலி செய்வதற்கான ஒரு கருவியாகவும் பயன்படுத்துகிறார். 'படைப்பாளி' என்று அரைத் தெய்வீக ஆணவம் கொண்டிருக்கும் ஹெர்மன் என்ற கதாபாத்திரத்தின் மூலம், ஆன்மத் தேட்டத்தை மையமாகக் கொண்டு இலக்கிய அந்தஸ்துடன் இருக்கும் கதையாடல்களையும் நபக்கோவ் கட்டவிழ்த்துவிடுகிறார்.
நபக்கோவ் நாவலின் தாக்கங்கள் பாரதூரமானவை. கலாச்சார ஆய்வுகளில், குறிப்பாக கிளாட் லெவிஸ்டிராஸின் இரட்டை எதிரிணை ஆய்வுகள் (binary opposites) பண்பாட்டுப்பிரதிகளில் உட்கிடையாக இருக்கும் இரட்டைக் கருத்தாக்கங்களை கண்டுபிடிக்க உதவுகின்றன. அவ்வாறாகக் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது ஏற்கனவே இருக்கும், உதாரணமாக, தமிழின் அகம்- புறம், காதல்- வீரம், திராவிடம்- ஆரியம், போன்ற எதிரிணைகள் சமூகத்தின் பொது சிந்தனையை ஆக்கிரமித்திருக்கின்றன. நபக்கோவின் நாவல் ஹெர்மன் - பெலிக்ஸ் கதாபாத்திரங்களின் இரட்டைத்தன்மையை பொய் என்று வெளிப்படையாகச் சொல்வதன் மூலமும் அந்தப் பொய்யை உண்மை என்று எடுத்துச்செல்வதன் விபரீத விளைவுகளையும் படம்பிடித்துக்காட்டுகிறது. அப்படியென்றால் நம் சிந்தனையை ஆக்கிரமித்திருக்கும், எல்லா சமூகங்களிலும், இறையியலிலும், சிந்தனையின் அடிப்படையாக இயங்கும் இரட்டைக் கருத்தாக்கங்கள் அனைத்தும் வெறும் புனைவுதானா என்ற கேள்வியை நபக்கோவின் நாவல் எழுப்புகிறது.
அப்படி ஒரு அடிப்படையான இடையீட்டினை நிகழ்த்துவதன் மூலம் நபக்கோவ் நம் சிந்தனை அனைத்தையும் மறுபரிசீலினை செய்ய வைக்கிறார். இது இலக்கியத்தில் மட்டுமே நிகழக்கூடிய சாதனை.
சென்னை புத்தகத் திருவிழா – 2026
தமிழ்வெளிவெளியீடு
•விரக்தி• - உலக இலக்கிய கிளாசிக் நாவல் -
விளாடிமிர் நபக்கோவின் - DESPAIR
தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி
அட்டை ஓவியம்: செல்வா செந்தில் குமார்
• ISBN: 978-93-92543-42-5
• பக்கங்கள்: 272
விலை ரூ. 350
தொடர்புக்கு: 91- 90940 05600

No comments:
Post a Comment