2000 ஆம் ஆண்டு என்றுதான் நினைக்கிறேன். சென்னையில் மிகப்பெரிய அகில இந்திய நாட்டுப்புறக்கலைகள் திருவிழா ஒன்றை நடத்தினேன். அந்த விழாவுக்குத் தமிழ் எழுத்தாளர்கள் அனைவரையும் முக்கிய விருந்தினராக அழைத்துக் கௌரவித்திருந்தேன். ஜெயகாந்தன், அசோகமித்திரன், லா.ச.ரா. உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அந்தத் திருவிழாவின்போதுதான் லா.ச.ரா.வோடு சில மணி நேரங்கள் உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. முதிர்ந்த லா.ச.ரா.வின் கண்கள் கம்பளிப் பூச்சிகள் போன்ற அவருடைய கனத்த நரைத்த புருவங்களுக்குக் கீழே மின்ன அலாதியான குறும்புடனும் நகைச்சுவையுடனும் அவர் உரையாடியது எனக்குப் பிரமாதமான அனுபவமாக இருந்தது. முதிய நகுலனின் புகைப்படங்களைப் பார்க்கும்போது நம்மைத் தாக்கும் அவருடைய தனிமை உணர்வும் அனாதைத்தன்மையும் நாம் லா.ச.ரா.விடம் சுத்தமாகப் பார்க்கமுடியாதவை.
“அபிதா” நாவலில் அபிதா குடத்தை இடுப்பில் தூக்கிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருப்பாள்; அவளைப் பார்க்கும் முதியவனின் மனம் அவள் அழகில் பேதலித்து அரற்றும். “அபிதா, அபிதா, அபிதா, அபிதகுஜாம்பாள் இடுப்பின் வளைவு, குடத்தின் செருக்கு “ என்று லா.ச.ரா. எழுதுவார். அவர் சொல் ஒலியாலும் கருத்தாலும் ஒன்றோடு ஒன்று பின்னி ஓடுவதை எழுதுவதையே தன் வாழ்க்கையின் பெரும் சாகசமாக நினைத்தார்.
“பாற்கடலில்” அவர் எழுதுகிறார் :
"என் சுயசரிதையை அதன் சம்பவ ரீதியில் மட்டும் எழுதுமளவுக்கு அதை நான் முக்கியமாக ஒருநாளும் கருதியதில்லை. என் வரலாறு என்கிற பெயரில் வாழ்க்கையில் கமழும் மணங்களை நுகர, பிறருடன் பங்கிட்டுக்கொள்ள, விசுவதரிசனம் காணச் சுயசரிதை ஒரு சாக்கு அவ்வளவுதான். மற்றபடி என் வாழ்க் கையில் கரடி வித்தைகள், ஆச்சரியகரமான தப்பித்தல்கள் (Escapes), ஜன்னல் கம்பிகளை வளைத்து வெளியேறல்கள், நூலேணியின் மூலம் இராஜகுமாரி யின் உப்பரிகையில் புகல், ஏழுபேரை ஒரே அடியில் வீழ்த்தும் தீரச் செயல்கள், ஸாம்ஸன் ஸாஹஸங்கள், Bruce Leeஇன் ஒரு கத்தல், ஒரு குத்தல், ஒரு வீழ்த்தல் இவை போன்ற பராக்கிரமங்களுக்கு எங்கே போவேன்? கேவலம், சப்பணம் போட்டுச் சேர்ந்தாப்போல அரை மணி நேரம் உட்கார முடியவில்லை. கொஞ்ச நாட்களாக வலதுகால் சொன்னதைக் கேட்க மறுக்கிறது. இத்தனைக்கும் முடக்குவாதம் மூட்டுவாதம் என்று வெளிப்படையாகத் தெரியவில்லை. Some trouble; சரி, போகட்டும்."
சிந்தா நதி, சிந்தனா நதி என்ற வார்த்தை விளையாட்டைத் தலைப்பாகக்கொண்ட நூலில் தன்னடையாளம் பற்றி லா.ச.ரா. எழுதுவார்:
“சிந்தனா நதியில் அவன் முகத்துக்குக் காத்துக்கிடக்கிறான்.
மொழி முத்து.
முத்தான சொல்.
எழுத்தாய்க் கோர்த்த சொல் எனும் ஜபமணி.
சொல் எனும் உருவேற்றம்.
எப்பவோ ‘நான்-’ என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதில் எழுத்து வாக்கில் ஒரு சொற்றொடர்.
‘நெருப்பு என்றால் வாய் வெந்துபோக வேண்டும்’ என்று விழுந்துவிட்டது. கேலியாகவோ, ஒரு சில சமயம் பாராட்டியோ, இன்னும் அபூர்வத்தில் சொந்த வியப்பில், இந்த வாக்கியம் இன்னமும் எனக்கு நினைவூட்டப்படுகிறது.
சொல் எனும் உருவேற்றம்.”
நெருப்பு என்றால் வாய் வெந்து போகவேண்டுமென்றால் அங்கே சொல் மந்திரமாகிவிட்டது என்றுதானே அர்த்தம்?
அதே நூலில் ‘உபதேச மந்திரம்” என்று அவர் எழுதிய பத்தி பின்வருமாறு இருக்கிறது:
“-ஓரு முள் தைப்பு
-ஒரு பாம்புப் பிடுங்கல்
-ஒரு வார்த்தையில், ஒரு சைகையில், ஒரு திருப்பத்தையே ஏற்படுத்தக்கூடிய உபதேச மந்திரம் இப்படித்தான் அமையுமோ?
சிந்தா நதியில் தண்ணீர் எப்பவுமே பளிங்கல்ல.
உச்சி வெயிலுக்கு கக்கல் கரைசல், பாசி, கும்மி, அழுகிய தழை, இலை, வேரொடு பிடுங்கிக்கொண்ட கோரை, எல்லாம் மிதக்க, கலங்கலாயும் வரும் போலும்!”
லா.ச.ரா. என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது இன்னொன்றும் சொன்னார். அவருக்கு லக்கினத்தில் குருவாம். குரு ஆட்சியாம். ஞானம் இருக்குமாம் பணம் திகையாதாம்.
No comments:
Post a Comment