Friday, December 19, 2025

எய்ச்மேன்கள் சூழ் உலகு




ஹன்னா அரெண்ட்டின் ‘ஜெரூசலத்தில் எய்ச்மேன்; தீமையின் சாதாரண அசிங்கத்தைப் பற்றிய ஒரு அறிக்கை” நூலை  பலப்பல வருடங்களுக்கு முன் வாசித்தபோது பேயடித்தது போல உட்கார்ந்திருந்தேன்.ஏனென்றால் ஹன்னா அரெண்ட்டின் புத்தகம் நாஜி ஜெர்மனியில் லட்சோப லட்சம் யூதர்களைக் கொன்று குவிக்க ஏற்பாடு செய்த அரசாங்க அதிகாரிகளுள் முக்கியமானவரான அடால்ஃப் எய்ச்மேன் ஒரு சாதாரணன்  என்ற உண்மையைக் கண்டுபிடித்துச் சொல்கிறது. அதாவது ஒரு பெரிய நாஜி அரசாங்க அதிகார இயந்திரத்தின் பகுதியாக செயல்பட்ட அடால்ஃப் எய்ச்மேன் ஒரு கருத்தியலாளரல்ல, ஒரு அரக்க சர்வாதிகாரி அல்ல, மனப்பிறழ்வு கொண்டவரல்ல, சுயமாக சிந்திக்காத ஒரு குமாஸ்தா போன்ற மன அமைப்புடையவர், தனது எஜமானர்கள் காலால் இட்ட வேலையை தலையால் செய்து முடித்தவர். ஒரு அரசாங்க அதிகாரி. திறம்பட தன் அலுவலக வேலையை நிறைவேற்றுபவர். அவ்வளவுதான்.

தமிழ் இலக்கிய உலகம் நடுத்தரவர்க்க எய்ச்மேன்களால் நிறைந்தது. வாழ்நாள் பூராவும் பருப்பு உசிலி குமாஸ்தாக்களாக வாழ்ந்து மனதிற்குள் வன்மத்தையும் பொறாமையையும் மட்டுமே வளர்த்துக்கொண்டிருப்பார்கள். புகழ், பதவி, பணம், ஆகியவ்ற்றை மட்டுமே மதிப்பார்கள். அவை கிடைக்காவிட்டால் பிச்சை எடுப்பார்கள். சதா தன்னைப் பெரிய ஆச்சாரியனாக, புனிதனாக நினைத்துக்கொள்வார்கள். வெறுமனே வீடு மெழுகி, பாத்திரம் துலக்குகிற தினசரி வாழ்க்கை அமையும் ஆனால் தன்னைப் பெரிய புரட்சியாளனாக இந்த ஜோக்கர்கள் தங்களை நினைத்துக்கொள்வார்கள். மகன், மனைவி யாரும் மதிக்காத தினசரி அவமானத்தில் கனவு கூட மலக்கிடங்கில் மூழ்கிக்கிடப்பதாகத்தான் வரும். இந்த செருப்பு நக்கிகளையே ஹன்னா ஆரெண்ட், அவர்களுடைய மதிப்பீடுகளையே பெரும் இனப்படுகொலையை நிகழ்த்திய கொடுந்தீமையின் பிரதிநிதியாக , எய்ச்மேனாக அடையாளப்படுத்துகிறார்.

ஜூலியா கிறிஸ்தவா ஹன்னா அரெண்ட்டை பற்றிய ஆய்வு நூலில் ஹன்னா ஆரெண்ட் யாராக இருந்தார் என்பதற்கும் என்னவாக அறியப்பட்டார் என்பதற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் கவனப்படுத்துவதன் மூலம் ஹன்னா ஆரெண்ட்டை சிந்தனையில் மேதையாகவும் வாழ்க்கையில் தன் உணர்ச்சிகளின் வழி வாழாதவராகவும் முக்கியப்படுத்துகிறார். நாம் யார் என்பது நம்முடைய சிந்தனைகள் மூலமாக மட்டுமே தெரியவரும் ஆனால் நாம் என்னவாக இருக்கிறோம் என்பது நம்மைப் பற்றிக் கட்டப்படுகின்ற கதையாடல்களால் உருவாக்கப்படுவது. கதையாடல் (narrative) என்பது கதை (story) அல்ல, ஒரு கதை எப்படி என்ன வரிசைக்கிரமத்தில், யாரால், எப்படி சொல்லப்படுகிறது என்பதைப் பொறுத்தது. தனது பதிப்பகத்துக்கு, உதாரணமாக, சொந்தமாகப் பெயர் வைக்கக்கூடத் தெரியாதவர் என்பது ஒரு கதை என்றால் அந்தப் பதிப்பக உரிமையாளர் தான் சொந்தமாக எழுதக்கூடியவர்களைத்தான் பதிப்பிப்பேன் என்று உதார் விடுவது கதையாடல். 

ஹன்னா ஆரெண்ட்டை ஜுலியா கிறிஸ்தவா  யதேச்சதிகாரத்தைக் கடுமையாக எதிர்த்த சிந்தனையாளராக தன் நூலில் புகழ்கிறார். அதே சமயம் ஹன்னா ஆரெண்ட் தன்னுடைய அரசியல் சிந்தனைகளில் முன்வைத்த இவ்வுலகிற்கான அன்பு (amor mundi in French) என்பது நனவிலி சார்ந்தது என்றும், நனவிலியின் உந்து சக்திகளை ஹன்னா அரெண்ட் தன் சிந்தனையில் கவனிக்கத் தவறிவிட்டார் என்றும் கவனப்படுத்துகிறார். கிறிஸ்தவாவின் நூல் முக்கியமான அறிவொளிகளைத் தரக்கூடியது.

No comments: