Friday, December 19, 2025

பிரளயனின் வீதி நாடகம் "பயணம்"

 





நேற்று (July 15, 2025) பிரளயன் இயக்கத்தில் சென்னை கலைக்குழுவினர் நிகழ்த்திய ‘பயணம்’ நாடகம், கிராமத்திலிருந்து புலம் பெயர்ந்து நகரத்தில் தொழிலாளிகளாக மாறுகிறவர்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் கோர்வையாக இருந்தது. நகரத்துக்குக் குடிபெயர்ந்து நடைபாதைவாசிகளாகும் அவர்களிடையே கள்ளத் தொடர்புகள், திருமணங்கள், குழந்தை பிறப்புகள் என அனைத்தும் நிகழ்கின்றன. சென்னை கலைக்குழு நடிகர், நடிகையரின் உடல் மொழியும், வசன உச்சரிப்பும், லயம் பிசகாத கூட்டு அசைவுகளும் அவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்ற நடிகர்கள் என்பதை உடனடியாகச் சொல்வதாக இருந்தன.

ஆண் நடிகர்களுக்கு இரு வகையான ஆடைகள், பெண்களுக்கு ஒரே வகையான ஆடை, நடிகர், நடிகையர் குழுவாகவும் தனித்தனியாகவும் அமர்ந்தும் எழுந்தும் பேசுவது என அழகான visual rhythm கொண்டதாக நாடகம் இருந்தது. மூங்கில் கழிகளையும் சிறு தலைப்பட்டைகளையும் நாடகத்தில் பயன்படுத்தியதும் சிறப்பானதாக இருந்தது. ஆரம்பத்திலும் இடையிடையேயும் வந்த “ஊர் விலகி, உறவு விலகி” என்ற பாடலும், தென்னை மரம், மாமரம் என மரங்கள் பற்றிய பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

பெர்டோல்ட் பிரெக்டின் Mother Courage போன்ற நவீன காப்பிய நாடக வடிவத்தைப் பிரளயனின் நாடகம் கொண்டிருந்தது. ஆனால், ஒரே கதாபாத்திரங்களின் கதையைப் பின்தொடராமல் வெவ்வேறு பாத்திரங்களின் நிகழ்வுகளைச் சொன்னதால், (பார்வையாளனுக்கு) நாடகத்தில் மூழ்குதல் இல்லாமல் விலகுதல் மட்டுமே நிகழும் விதமாக நாடகம் நம் முன்னே விரிந்தது. நகைச்சுவை, வழக்கமான வீதி நாடகங்களின் தேய்வழக்கான அரசியல்வாதி, போலீஸ்காரன், வரி வசூலிப்பவன் என்பதாக இருந்தது. அவலங்களை எடுத்துச் சொன்ன அளவுக்கு நாடகத்தின் சமூக விமர்சனம் இன்னும் கூர்மையாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

நான் அமர்ந்திருந்த இடத்திற்கு நேரெதிரில் பேரொளி அரங்க விளக்கு இருந்தபடியால் ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியவில்லை. நாடகம் முடிவடையும் நேரத்தில் மழை தூறத் தொடங்கியதால், நடிகர்களைச் சந்திக்கவோ உரையாடவோ முடியவில்லை.

42 வருடங்கள் தொடர்ந்து வீதி நாடகத்தில் சென்னை கலைக்குழுவினரும், பிரளயனும் இயங்கி வருகிறார்கள் என்பது பிரமிப்பைத் தருகிறது. பிரளயனுக்கும் சென்னை கலைக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

No comments: