Friday, December 19, 2025

அஞ்டலி: டி.கண்ணண் நவம்பர் 23, 2025

 நண்பர், எழுத்தாளர், கவிஞர் ஶ்ரீரங்கம் கண்ணன், (டி.கண்ணன்) மறைந்துவிட்டான் என்ற செய்தி கேட்டு கதிகலங்கிப் போய் இருக்கிறேன். நடேஷ், ரமேஷ் (பிரேதன்), டி.கண்ணன், என்று என் நண்பர்கள் ஒவ்வொருவராகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பே எஸ்.சண்முகம் கண்ணன் தீவிர சிகிக்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதைத் தெரிவித்திருந்தார். கண்ணன் என் நண்பர்களிலேயே மிகவும் உற்சாகமானவன். பழைய சினிமாப் பாடல்களை அழகாகப் பாடுவான். பிரமாதமாக கிரிக்கெட் விளையாடுவான். அவனுடைய தந்தை ஶ்ரீரங்கத்தில் பெயர் பெற்ற பாகவதம் உபன்யாசம் செய்பவர். அதனால் கண்ணனுக்கு நமது பக்தி  இலக்கியங்களிலும் புராணங்களிலும் ஆழமான கேள்வி ஞானம் இருந்தது. கண்ணனோடு விக்கிரமாதித்யன் நம்பியும் இருந்தால் அந்த இடமே களேபரமாய் இருக்கும். நம்பியைக் கண்ணனும், கண்ணனை நம்பியும் பாடாய் படுத்துவார்கள். நம்பியின் மேல் கண்ணனுக்கு கொள்ளைப் பிரியம். நம்பி ஒரு கையை முன்னால் நீட்டிக்கொண்டு, யாரோ அவரைக் கண்ணுக்குத் தெரியாத கயிரால் கட்டி இழுத்துப் போவது போல, தலையை ஆட்டிக்கொண்டே நடந்து போவதை கண்ணன் நடித்துக்காட்டுவதைப் பார்க்க பார்க்க ஆனந்தமாக இருக்கும். இலக்கியத்தை முன்னிட்ட நண்பர்கள் கூடுகை, கலாட்டா, கேலி, சிரிப்பு, கொண்டாட்டம், குடி விருந்து, உரையாடல்கள் அனைத்திலும் கண்ணன் தான் மத்தியில் இருப்பான். அந்தக் கூடுகைகளின் போது கண்ணன்   சமைக்கவும் செய்வான். கத்திரிக்காயையும் உருளைக்கிழங்கையும் அவன் இவன் என்று அழைத்து அவன் அவற்றை வதக்குவதைப் பார்க்க அபாரமாக இருக்கும். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட நண்பர்கள் கூடுகை நடப்பதில்லை. அவ்வளவு உற்சாகமான கண்ணனுக்கு தனிப்பட்ட வாழ்க்கை துயரங்களையும் தனிமையையுமே தந்தது. முப்பது முப்பந்தைந்து வருடங்களுக்கு முன்பு என் எழுத்தாள நண்பர்கள் குழாம் படித்த நாற்பது ஐம்பது லத்தீன் அமெரிக்க நாவல்கள் கண்ணன் எங்கிருந்தெல்லாமோ கொண்டு வந்து தந்தவைதான். அப்புறம்தான் திநகரில் இருந்த எலூர் லெண்டிங் லைப்ரரி எங்கள் புகலிடமானது. எனது துயரம் மிக்க, மனம் பேதலித்த நாட்களில் எல்லாம் கண்ணன் என் கூட இருந்தான். என்னைக் கடற்கரைக்கு அழைத்து சென்று நான் புதிது புதிதாய் சொல்லும் வேதாளம் சொன்ன கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பான். சமீப காலமாய் கண்ணனோடு பேசுவதற்கான, சந்திப்பதற்கான சந்தர்ப்பங்கள் பலவற்றை நான் தவறவிட்டேன். பிரளயனின் வீதி நாடகத்தைப் பார்க்கச் சென்றிருந்தபோது வாசுவும், முத்துக்குமாரும் கண்ணன் சென்னைக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். செப்டம்பர்  11 அன்று அவனிடமிருந்து கடைசியாக ஃபோன் வந்திருக்கிறது. நான் அதைத் தவற விட்டிருக்கிறேன். அவனுடைய கல்வெட்டுச் சோழன் சிறுகதைத் தொகுதியிலுள்ள ஒரு தலித் சிறுகதையை பற்றி முன்பொருமுறை விரிவாக எழுதியிருக்கிறேன். இரண்டு நாட்களாய் பதைபதைப்பாய்தான் இருந்தது. இன்றிரவைக் கடப்பது கடினமானதுதான். தான் இருக்கும் இடத்தை ஆனந்தத்தினால் பிரகாசமாக்கியவனாக கண்ணன் என் இறுதி மூச்சுவரை என்னுடன் இருப்பான்.

No comments: