Thursday, December 25, 2025

Palimpsest history : உம்பர்ட்டோ எக்கோவின் நாவல் “ரோஜாவின் பெயரும்” மைக்கேல் இருதயராஜின் ஓவியமும்



ஏசு கிறிஸ்துவானவர் விசாரணைக்காக ரோமானிய தளபதி பிலாதுவின் முன்னால் இழுத்து வரப்பட்டபோது அவர் தேவகுமாரனா, தீர்க்கதரிசியா, சாதாரணக் குற்றவாளியா என்று தெரியாத பிலாது “எது உண்மை? “ என்று கேட்டுவிட்டு பதிலுக்காகக் காத்திருக்காமல் அவரைச் சிலுவையில் அறைய ஆணையிட்டான் என்று ஃபிரான்சிஸ் பேக்கன் எழுதுவார். ஏனெனில், சமூக வலைத்தளங்களில் புழங்கும் நம்மைப் போலவே பிலாதுவுக்கும் உண்மையைத் தானே கண்டறியவேண்டும் என்பதற்கான அக்கறை இருக்கவில்லை. உண்மையைக் கண்டறிவதற்கான வழி கடினமானதும் கூட. சிலுவையில் அறைந்து கொல்ல ஆணையிடுவது உண்மையைக் கண்டறிவதை விட எளிதானது.  ஃபிரான்சிஸ் பேக்கனை மேற்கோள் காட்டி ஜி.கே.செஸ்டர்டன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர்  எது உண்மை என்று வினவிய பிலாது என்று எழுதுவதற்குப் பதிலாக எது உண்மை என்று ஜோக்கடித்த பிலாது பதிலை அறியக்கூட காத்திருக்காமல் ஏசுவை சிலுவையில் அறைந்து கொல்ல ஆணையிட்டான் என்று ஒரு சிறு மாற்றத்தைச் சேர்த்துக்கொள்கிறார்.   சிலுவையில் அறைந்து ஏசு கொல்லப்படக்கூடிய நிகழ்வு நகைச்சுவைக்கான கேளிக்கை நிகழ்வா, என்ன? எல்லாவற்றையும் கேளிக்கைக்கான சந்தர்ப்பங்களாக மட்டுமே பார்க்கத் தெரிந்த இன்றைய சமூக வலைத்தள கழிசடைகளைப் போலவேதான் . செஸ்டர்ட்டனின் பார்வையில், பிலாதுவும் செயல்பட்டிருக்கிறான். ஒரு சம்பவத்தைப் பற்றிய சிறு விவரணையிலேயே ஒன்று அழிக்கப்பட்டு அதன் மேல் வேறொன்று எழுதப்படுகிறது. அல்லது ஒன்றன் மேல் வேறொரு அடுக்கு சேர்க்கப்படுகிறது. இப்படி அடுக்கு அடுக்குகளாக அழிக்கப்பட்டும் சேர்க்கப்பட்டும் எழுதப்படுவதாகவே மானுட வரலாறு இருக்கிறது. உண்மை எங்கோ அந்தப் பல அடுக்குகளுக்குள்ளாக மறைந்தே இருக்கிறது.

தமிழ் வரலாற்றிலும் அழிக்கப்பட்டும் புதிதாக எழுதப்படுவதுமான வரலாறு தொலைந்து போய் மீண்டும் கிடைத்த செவ்விலக்கியங்களின் மூலமாக சொல்லப்படுகிறது. நம்முடைய சங்க இலக்கியங்களின் அகப்பாடல்கள் தொலைந்துபோய் கிடைக்காமல்தான் இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உவேசா கும்பகோணத்தில் ஒரு வக்கீலின் வீட்டில் பரணில் கவனிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த ஒரு டிரங்குப் பெட்டியில் சிதிலமடைந்துகொண்டிருந்த அகப்பாடல்கள் எழுதப்பட்ட ஏட்டுச்சுவடிகளைக் கண்டுபிடித்து மீட்டெடுக்கிறார்.  அதற்கு முன்னர், பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் சிதம்பரம் கோவிலின் பூட்டிய அறைகளுக்குள் வைக்கபட்டு சிதிலமடைந்துகொண்டிருந்த தேவாரச் சுவடிகளை மீட்டெடுக்கிறான். புராணக் கதைகளிலும் நால் வேதங்களை அசுரர்கள் எடுத்துக்கொண்டுபோய் ஒளித்து வைத்துவிடுவதையும் கடவுளின் அவதாரங்கள் அவற்றை மீட்டுக்கொண்டு வருவதைப் பற்றியும் ஏராளமான கதைகள் இருக்கின்றன. இன்றைக்கும் அதர்வண வேதம் முழுமையாக நமக்குக் கிடைத்துவிட்டது என உறுதிபடச் சொல்ல இயலாது. 

உம்பர்ட்டோ எக்கோ தன் “ரோஜாவின் பெயர்” நாவலில் அந்த நாவலின் பிரதியையே palimpsest history ஆக மாற்றுகிறார். நாவலின் முன்னுரை,முகவுரை ஆகிய பகுதிகளில் அட்ஸோ சொல்கிற கதையான “ரோஜாவின் பெயர்” பிரதி கதை சொல்லியிடமிருந்து திருடப்பட்டு விடுகிறது; அப்பிரதியை பிரசுரித்ததாகக் கருதப்படுகிற  மடாலயமோ அதைப் பிரசுரித்ததற்கான சான்றுகள் எதையும் கொண்டிருப்பதில்லை; இயற்கை விஞ்ஞானங்களைப் பற்றிய வேறு நூல்களில் அட்ஸோ சொன்ன கதைக்கான குறிப்பீடுகள் இருந்தாலும், அவற்றைப் பெயரற்ற கதைசொல்லியால் சரிபார்க்க இயலவில்லை; சம்பந்தமே இல்லாமால் அர்ஜெண்டினாவில் ப்யூனஸ் ஐரிஸ் நகரில் உள்ள ஒரு நூலில் அட்ஸோ சொன்ன கதையின் பிரதி பற்றி உண்மையான விள்க்கங்கள் கிடைக்கின்றன. கதைசொல்லி, அட்ஸோ சொன்ன கதையை தன் நினைவிலிருந்து மீட்டெடுத்து எழுதியதற்கான சாத்தியங்கள் சுட்டப்படுகின்றன ஆனால் அறுதியிடப்படுவதில்லை. அடித்தல் திருத்தல்களோ, இடைச்செருகல்களோ, சிதைந்த பகுதிகள் எனவோ நாவலில் எங்கும் எதுவும் சுட்டப்படுவதில்லை. அட்ஸோ சொன்ன கதைப் பிரதியில் ஏதோ ஒரு வரலாறு மறைக்கப்பட்டு வேறு எதோ ஒன்று அதன் மேல் ‘இயற்கையாகவே’ சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது மட்டும்  நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஏசு கிறிஸ்துவானர், ஏழைகள் பக்கம் நின்றார் என்ற ஃபிரான்சிஸ்கன் துறவிகளின் ஆன்மிக நிலைப்பாடே நிறுவனமயமான கிறித்தவம் தன் வரலாற்றில் மறைத்துவிட்ட கதை என்பதை நாம் நாவலை வாசிக்கும்போது உணர்கிறோம். இது அட்ஸோவின் கைப்பிரதியில் ‘இயற்கையாகவே’ வெளிப்பட்டுவிட்டது என்பதை அங்கதத்துடனும் நமுட்டுச் சிரிப்புடனும் “ரோஜாவின் பெயருக்கு” “இயற்கையாகவே ஒரு கைப்பிரதி” என்று துணைத்தலைப்பிட்ட உம்பர்ட்டோ எக்கோ சொல்கிறார் என்பது நாவலை வாசிக்க வாசிக்க நமக்குத் தெரியவருகிறது.

எக்கோ வேறு பல மொழி உத்திகளையும் நாவலில் கையாளுகிறார். லத்தீன் மொழி மேற்கோள்களை முழுமையடையாத சிதறல்களாகவே நாவல் முழுக்க வைத்திருப்பது அந்த உத்திகளில் ஒன்று. நமக்கும் நம்முடைய மந்திரங்களும் சுலோகங்களும் துண்டு துண்டாக சிதறல்களாகத்தானே கிடைக்கின்றன? எக்கோவின் இன்னொரு உத்தி அறிவுவரலாறுகளைப் பற்றிய விவரணைகளில்  சிதைவடைந்த வாக்கியங்களைப் பயன்படுத்துவது. உதாரணமாக, மூலிகைகளின் மருத்துவப் பயன்பாடுகளைப் பற்றிய பத்திகளில் எக்கோ பல சிதைவடைந்த வாக்கியங்களைப் பயன்படுத்துகிறார். நம்முடைய சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளும் நமக்கு மர்மங்களாவும் கூறுபட்ட சிதறல்களாகவும்தான் நம்முடைய சமகால அறிவில் சேகரமாகி இருக்கின்றன. நம் மருத்துவ ஓலைச்சுவடிகள் அண்டத்தையும் பிண்டத்தையும் ஒரே அமைப்புடைய பிரபஞ்சங்களாக எப்படி இணைக்கின்றன என்பது புனைவு சார்ந்ததா, அறிவியலா என்ற குழப்பம் நமக்கு இன்றளவும் நீடித்திருப்பதாகவே இருக்கிறது. “ரோஜாவின் பெயர்” நாவலில் உள்ள வாக்கியச் சிதைவுகள், இவை தவிர, வில்லியம் துப்பறியும்போது கிடைக்கும் துப்புகளாகவும், எக்கோ வேண்டுமென்றே உருவாக்குகிற நகைச்சுவைத் தடைக்கற்களாகவும் (semiotic filters) இருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்பு ஓவியர்கள் மைக்கேல் இருதயராஜூம், செல்வா செந்தில் குமாரும் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். மைக்கேல் இருதயராஜின் ஓவியங்களில் ஒரு தொடரில், நான் பார்த்தபோது அவை வரலாறு அழிக்கப்பட்டும், புதிதாக மேலே எழுதப்படுவதாகவும் தொடர்ந்து நடப்பதை அவர் தன் ஓவிய உத்திகளாக்கி கலையாக்கிப் இருப்பதைக் கவனித்தேன். Palimpsest history என்பதை வெகு சிறப்பாகக் கலையாக்குபவராக மைக்கேல் இருதயராஜ் இந்த ஓவியங்களில் மிளிர்கிறார். 

மைக்கேல் இருதயராஜின் உத்தி என்பது முதலில் ஒரு ஓவியத்தை வரைவதாக இருக்கிறது, அதன் பிறகு, அதன் மேல் வேறு பல ஓவியங்களை வரைகிறார். முதல் ஓவியத்தின் பல பகுதிகளைக் கிழித்து விட்டு விடுகிறார். முதல் ஓவியத்தின் சில பகுதிகள் சிதறல்களாக மேலே வரையப்பட்ட ஓவியங்களை மீறி ஆங்காங்கே நமக்குத் தெரிகின்றன. முதல் ஓவியத்தை சினிமா ரீல்கள் போல ஒன்றன் மேல் ஒன்று வரையப்பட்ட ஓவியத்தின் ஓரங்களில் பதித்துவிடுகிறார். 

“LEOPARED" (2022) என்று வேண்டுமென்றே எழுத்துப்பிழையுடன் தலைப்பிடப்பட்ட மைக்கேல்  இருதயராஜின் ஓவியம் நினைவு (memory), அடையாளம் ( identity), வரலாறு மூன்றும் சிதைந்து சிதைந்து ஒன்றிணைவதைக் காட்டுவதாக இருக்கிறது. சிறுத்தை, மனித உருவங்கள், ஒரு நாய், ஒரு பறவை, ஏன் ஒரு காலணி கூட வெவ்வேறு தளங்களில் ஓவியத்தின் பல பகுதிகளில் நினவின் இடைவெளிகளாக இருக்கின்றன. மனிதர்களும் மிருகங்களுக்குமான ஒரு இணைவு வாழ்க்கை மைக்கேலின் ஓவியங்களில் காணப்படுகிறது. ஓவியத்தாளின் இழைவில்  (texture) மையமாக சிறுத்தையும் மேலை பழங்குடி மக்களைப் போலத் தோற்றமளிக்கும் மனித உருவங்களும் இருக்கின்றன. மொத்த ஓவியமுமே மஞ்சளாக, நினைவு போலவே, வயதாகி மங்கிக்கொண்டிருக்கிறது. வரலாறு பற்றிய வரலாறு, (meta hitory) அல்லது வரலாற்று எழுத்தியல் (historiography) மைக்கேலின் ஓவியத்தில் இருப்பது போலவே நமக்கும் சினிமா ரீல்களின் வரலாறாகத்தானே நமக்கும் வந்து சேர்வதாக இருக்கின்றன? வரலாறு பற்றிய வரலாறு,  சிறுத்தையால் பிரதிநித்துவப்படுத்தப்படும் ஆதி உயிரியல் எப்படி நினைவாக, துண்டு துண்டாக கிடைப்பெறும் அறிவாக இருக்கிறது என்பதை மைக்கேல் இருதயராஜின் ஓவியம் தன்னுடைய ஒற்றைச் சட்டகத்தினுள் வைத்து சொல்லிவிடுகிறது.

எது உண்மை என்ற கேள்வி எப்போதுமே தொக்கி நிற்கும். 

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நன்னாள் வாழ்த்துகள். 

No comments: