Friday, December 19, 2025

ஏழு பெண் கவிகள்




ஐக்கிய நாடுகள் சபையில் ஃப்ரான்சஸ்கா அல்பனீசே காசா இனப்படுகொலையின் பொருளாதாரம் என்ற பொருளில் சமர்ப்பித்திருக்கும் அறிக்கை அடிவயிற்றில் வலியையும், நாக்கினடியில் கசப்பையும், மனதில் திகிலையும் உண்டாக்கக்கூடியது. மனித உரிமைக் குழுவில்  ஜூலை 3, 2025 அன்று உரையாற்றிய ஃப்ரான்சஸ்கா அல்பனீசே 1967 இலிருந்து இரண்டு லட்சம் பாலஸ்தீனியர்கள் கொன்றழிக்கப்பட்டதன் ‘பொருளாதாரம்’ யார் யாருக்கு எப்படி எப்படி லாபத்தை ஈட்டிக்கொடுத்திருக்கிறது என்று விவரித்தார். அவருடைய அறிக்கையில் ஆயுத உற்பத்தியாளர்கள், கண்காணிப்பு நிறுவனங்கள், தொழில் நுட்ப பாகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் (கவனிக்க பல்கலைக்கழகங்கள் !) ஆகியவற்றின் பொருளாதார வலைப் பின்னலை காசா இனப்படுகொலையில் லாபமீட்டும் பட்டியலல்ல மாறாக அது ஒரு ஒழுங்கமைவு என்று ஃப்ரான்சஸ்கா அல்பனீசே அடையாளப்படுத்துகிறார்.  உதாரணமாக ஐரோப்பிய கமிஷன் 2.12 பில்லியன் யூரோ மானியத்தை செலவழித்திருக்கிறதென்றால் அதில் 198.5 மில்லியன் யூரோ மியூனிக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருக்கிறது. ஐரோப்பிய கமிஷனின் நிதிக்கு சென்ற 11.47 மில்லியன் யூரோ பல்வேறு இஸ்ரேலிய நிறுவனங்களின் உடனுழைப்புக்காக செலவழிக்கப்படிருக்கின்றன; அவை அனைத்துமே பல்கலைக்கழகங்களோடு பின்னிப்பிணைந்தவை. ஸ்காட்லாந்தின் எடின்பரோ பல்கலை, எம் ஐ டி ஆய்வுக்கூடங்கள்  இஸ்ரேலின் பென் குரியன் பல்கலை, அவற்றின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கூடங்கள், அல்ஃபபட் (கூகிள்), மைக்ரோசாஃப்ட், ஐபிஎம், அமேசான் என அனைத்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் காசா கண்காணிப்பில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள், நம் நாட்டில் Capitation fees வாங்கிக் கொழுப்பது போல  கொள்ளை லாபம் சாம்பாதித்திருக்கும் ஆயுத தொழிற்சாலை நிறுவனங்கள் ஏதிலிகளான பாலஸ்தீனிய குடிமக்களைக் கொன்றழிக்க அதி நவீன ஆயுதங்களை வழங்கியிருக்கின்றன. டெல் அவிவ் பங்குச் சந்தை கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இன்று வரை  200 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி அடைந்து 213 பில்லியன் டாலர்கள் அதிக மதிப்பீட்டில் இருக்கிறது. இது காசாவின் மேல் வீசப்பட்ட 80, 000 பவுண்ட் குண்டுகளால் கிடைத்த லாபம். எண்பதினாயிரம் பவுண்ட் குண்டுகள் என்பவை ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றின் மேல் போடப்பட்ட அணுகுண்டுகளை விட ஐந்து மடங்கு வலு அதிகம். 

ஃப்ரான்சஸ்கா அல்பனீசே ஆய்வறிக்கை, சுருக்கமாகச் சொன்னால் , காசா இனப்படுகொலை ஒரு லாபமீட்டும் தொழில் என்று சொல்கிறது.

“ஏழு பெண்கவிகள்” கவிதைத் தொகுப்பு ஃப்ரான்சஸ்கா அல்பனீசேவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பது சிறப்பு. யமுனா ராஜேந்திரனுக்கும் அவரது தோழர்கள் எஸ்.வி. உதயகுமாரி, ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் வாழ்த்துகள். எதிர்வரும் புத்தகக் கண்காட்சியில் இந்த நூலை வாங்குவதற்குக் காத்திருக்கிறேன்.

No comments: