முன்பு வேளச்சேரி யோகநரசிம்மர் கோவிலுக்கு நம்மாழ்வார் திருவாய்மொழி இராப்பத்தாக ஓதப்படுவதையும் நம்மாழ்வார் மோட்சம் அனுஷ்டிக்கப்படுதையும் பார்க்கப் போயிருந்தேன். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நண்பரையும் சந்தித்தேன். அவர் நீ உன் எழுத்துக்கு பொறுப்பற்றிருக்கிறாய் என்று குற்றஞ்சாட்டினார்; அதாவது நான் கடந்த முப்பது, முப்பந்தைந்து வருடங்களில் எழுதிய பலவற்றை பிரசுரிக்காமல் வைத்திருப்பதைப் பற்றி அப்படிச்சொன்னார். எனக்கு கோவிலில் இன்னும் அழகாக திருவாய்மொழியை ஓதலாம் என்று தோன்றிக்கொண்டிருந்தது.
நம்மாழ்வார் சிலையை அவர்கள் பெருமாளின் திருப்பாதங்களில் வைத்து துளசியை அம்பாரமாகக் கொட்டி மூடிக்கொண்டிருந்தார்கள். அதில் நான் கொடுத்த இரண்டு முழம் துளசியும் இருக்கும்தானே.
நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பிப்பதற்கு முன் திருவாய்மொழி எனும் திராவிட வேதத்தை தினசரி ஒன்றாவது ஓதுவதும் மனதில் நிறுத்துவதும் எப்படி தமிழ் மொழியைக் காப்பாற்றும் என ஐயங்கார் ஒருவர் சிறு பிரசங்கம் நிகழ்த்தினார்.
யோகநரசிம்மர் மிகப் பெரியவர் அவருக்கு நூறு முழம் துளசியும் கூட கால் சுற்றுக்குக் காணாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
கூடவே நான் எந்ததெந்தத் தொழில்களை பயின்றிருந்தால் எனக்குரியதாக சொல்லிக்கொண்டிருக்க முடியும் என்ற சிந்தனையும் எழுந்தது;
சாய்வு நாற்காலிகள் செய்யும் தச்சன், மூக்குக்கண்ணாடிகளைத் துடைப்பவன், பெண்களுக்கான உள்ளாடைகளை வடிவமைப்பவன், குடை ரிப்பேர்காரன், மழுங்கிய சமயலறைக் கத்திகளை சாணை பிடிப்பவன், வாத்து மேய்ப்பவன், தியான கூடங்களுக்கு சாம்பிராணி போடுபவன், மணவறைக் கட்டில்களை முதலிரவுக்கு அலங்கரிப்பவன், பேனாக்களுக்கு மையூற்றுபவன், பெண்களுக்கு புருவங்களைத் திருத்துபவன், நாதஸ்வரங்களுக்கு சீவுளி கட்டுபவன் ம்ஹ்ம் பட்டியல் முடிவில்லாமல் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
திருவாய்மொழியில் வரும்
“ நாம் அவன் இவன் உவன் -அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் -அதுவிதுவுதுவெது”
என்ற வரிகள் நினைவுக்கு வர அவ்வரிகளில் வரும் உவனும் உதுவும் நானோ யாரோ என்ற ஐயமும் எழுந்தது.
நம்மாழ்வார் துளசி அம்பாரத்தில் முழுமையாக மூழ்கியிருந்தார். நான் என் விருப்பத் தொழில்கள் பட்டியலைச் சொல்லலாமென்றால் நண்பரைக் காணோம். உயரமான கருடாழ்வார் சந்நிதியின் படிக்கட்டிலிருந்து யோகநரசிம்மர் மட்டுமே கண்களுக்குத் தெரிந்தார்.
No comments:
Post a Comment