Life : A user's manual
--
ஜார்ஜ் பெரெக் (Georges Perec) எழுதிய Life A User’s Manual 1978 இல் ஃப்ரெஞ்சில் வெளிவந்தது. ஆங்கிலத்தில் 1987இல் டேவிட் பெல்லோஸினால் மொழிபெயர்க்கப்பட்டது. 1992-இல் இந்த நாவலை நான் முதன் முதலாகப் படித்தேன். படித்த நாளிலிருந்து நான் மீண்டும் மீண்டும் படிக்கின்ற நாவலாய் இது இருக்கிறது. இடாலோ கால்வினோ, பெரெக்கினை தனக்கு ஒப்புமை இல்லாத தனித்துவ எழுத்தாளர் என்று அழைத்தார். பெரெக் நாவலில் தனித்துவமான வடிவத்தை ஏற்படுத்தியவர். நாவலின் நாயகனான பார்ட்டில்பூத் தன்னுடைய பாரிஸ் நகர அபார்ட்மெண்ட்டில் இறந்து கிடப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. பார்ட்டில்பூத் இரண்டு உலகப்போர்களின் நடுவே இருபதாண்டுகள் பயணம் செய்து பலதுறைமுகங்களைக் கண்டு அவற்றை நீரோவியங்களாக ஃபிரான்ஸிற்கு அனுப்பி வைக்கிறான். அவற்றை வெட்டி, புதிர்களாக puzzles மாற்றிவைக்கிறான் பார்ட்டில்பூத்தின் நண்பன் காஸ்பார் வின்க்லர். இந்தப் புதிர்களை மீண்டும் நீரோவியங்களாக சீரமைக்கின்றபடியாக கதை சொல்லப்படுகிறது.
புதிர்கள் அவிழ்வது உறைந்துவிட்ட காலத்தில். அதாவது நாவலில் ஜூன் மாதம் 1975 ஆம் ஆண்டு 23 ஆம் தேதி பார்ட்டில்பூத்தின் மொத்த வாழ்க்கை வரலாறும் சொல்லப்படுகிறது. கதை அவருடைய அபார்ட்மெண்டில் இருக்கும் ஒவ்வொரு அறையாக நகர்ந்து அதில் வாழ்ந்த கதாபாத்திரங்களைப் பற்றி சொல்வதாக இருக்கிறது. நீரோவியங்கள் அனைத்தும் ஒரு தருணத்தில் கலைந்து வெறுமையாகிவிடுகின்றன.
அசாத்தியமான நாவல் வடிவத்தினை உடைய Life: A User’s Manual நினைவு, வாழ்கின்ற தருணம், வாழ்ந்த தருணம், அதன் பதிவுகள், அதன் எல்லைகள் ஆகியவற்றினை விளையாட்டாகவும் எல்லையுடையதாகவும் முன்வைக்கிறது.
ஜேம்ஸ் ஜாய்சின் யுலிசெஸ் நாவலைப் போல இதுவும் ஒரு மாஸ்டர்பீஸ். புதிர்கள் அவிழ்வது ஒரு துப்பறியும் கதை போல இந்நாவலில் கதை நகர்கிறது. கதை மாந்தர்களையும் அவர்களுடைய செயல்களையும் நாம் வெகு அருகிலிருந்து உன்னிப்பாக கவனிக்கிறோம்.
எனக்குப் பிடித்த பத்தி: “From this, one can make a deduction which is quite certainly the ultimate truth of jigsaw puzzles: despite appearances, puzzling is not a solitary game: every move the puzzler makes, the puzzlemaker has made before; every piece the puzzler picks up, and picks up again, and studies and strokes, every combination he tries, and tries a second time, every blunder and every insight, each hope and each discouragement have all been designed, calculated, and decided by the other.”

No comments:
Post a Comment