ஜெனேயின் `The Balcony` நாடகமும்,ஜெனே பற்றிய சார்த்தரின் `புனித ஜெனே` கட்டுரையும் வெளிரங்கராஜன் மொழிபெயர்ப்பில் குலுங்கா நடையான் பதிப்பகம் ( Ph: 95000 40516 ) வெளியீடாக புத்தகமாக வெளிவந்துள்ளது. குலுங்கா நடையான் பதிப்பக அரவிந்தன் நூலை எனக்கு இன்று அனுப்பித் தந்திருந்தார்.
அரசுக்குரிய அதிகாரங்களான நீதி பரிபாலனம், தண்டனை வழங்குதல், கண்காணிப்பு, பொதுவெளியில் குற்றஞ்சாட்டுதல், தணிக்கை போன்றவற்றைத் தனிநபர்கள் தாமாகவே கையில் எடுத்துக்கொள்ளும்போது, அவர்களுக்குள் இன்னொரு அரசு பிறப்பெடுக்கிறது. இந்த அகத்தில் உறையும் அரசையும், அதன் அதிகார வெறியையும் ழான் ஜெனேயின் (Jean Genet) நாடகங்கள் பட்டவர்த்தனமாக வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
ழான் ஜெனேயின் நாடகப் பிரதிகளில், அரசதிகாரம் என்பது பாத்திரங்கள், சடங்குகள், சின்னங்கள், கட்டமைப்புகள் ஆகியவற்றால் ஆன ஓர் உள்ளீடற்ற நாடகமே. காவலர், நீதிபதி, அரசியல்வாதி போன்ற அதிகார பீடங்களை, அன்றாட வாழ்வில் எந்த அதிகாரமும் இல்லாத சாதாரண மனிதர்கள் தங்களுக்குள் எப்படி உள்வாங்கிக்கொள்கிறார்கள் என்பதை ஜெனேயின் படைப்புகள் காட்டுகின்றன.
ஜெனெயின் ‘தி பால்கனி’ (The Balcony) நாடகம் ஒரு பாலியல் தொழில் கூடத்தில் நிகழ்கிறது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் கற்பனைக்கு ஏற்பப் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாத்திரங்களாகவே விபச்சாரிகளுடன் உறவாடலாம். குழாய் பழுதுபார்ப்பவர், எரிவாயு பொருத்துபவர் போன்ற எளிய வேலைகளைச் செய்யும் நபர்கள், அங்கே தங்களை பிஷப்பாக, நீதிபதியாக, ராணுவ ஜெனரலாக உருவகித்துக்கொள்கிறார்கள். இப்படி, தங்கள் அன்றாட வாழ்வில் மறுக்கப்பட்ட அதிகாரத்தை அவர்கள் நடித்துப் பார்த்து அனுபவிக்க விழைகிறார்கள்.
‘தி பால்கனி’ நாடகத்தின் மையச் செய்தி இதுதான்: அதிகாரம் இயல்பானதல்ல, அது ஒரு நடிப்பு. சரியான அங்கிகளை அணிந்து, அதிகாரத் தொனியில் பேசும் ஒருவர், பாவமன்னிப்பு கேட்க ஒரு பாவி இருக்கும்போது மட்டுமே பிஷப் ஆகிறார். திருடனைக் கண்டித்து, சட்டத்தை நிலைநிறுத்தும்போது மட்டுமே ஒருவர் நீதிபதி ஆகிறார். இந்தக் கதாபாத்திரங்கள் அரசின் அதிகாரச் சின்னங்களை வெகு ஆழமாக உள்வாங்கியுள்ளனர் என்றால், அந்த நடிப்பின் மூலம் மட்டுமே அவர்களால் சுயப்பிரக்ஞையை அடைய முடிகிறது. நகரத்தில் புரட்சி வெடித்து, உண்மையான ஆட்சியாளர்கள் கொல்லப்படும்போது, இந்தச் சாதாரண மனிதர்கள் தாங்கள் இதுவரை ஏற்று நடித்த பாத்திரங்களை நிஜத்தில் ஏற்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அந்தத் தருணத்தில், கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான மெல்லிய கோடு கலைந்துபோகிறது.
யாரெல்லாம் இழிபிறவிகளாகத் தங்களைத் தாங்களே அரசாக, போலீசாக, தணிக்கை அதிகாரிகளாக, தண்டிக்கும் அதிகாரம் படைத்தவர்களாக, குற்றம் சாட்டும் அரசு வழக்கறிஞர்களாக, கண்காணிப்பாளர்களாக, கார்ப்பரேட் பிரதிநிதிகளாக, கருத்தியல் காவலர்களாகக் கருதிக்கொள்கிறார்களோ அவர்களெல்லாம் ஜெனேயின் நாடகக் கதாபாத்திரங்களே. உலகம் அவர்களால் ஒரு விபச்சார விடுதியாகிவிடுகிறது.
ஜெனேயின் முக்கியமான நாடகமும் சார்த்தரின் கட்டுரையும் தமிழுக்கு வருவது சிறப்பு. மொழிபெயர்ப்பாளர் வெளி ரங்கராஜனுக்கும் பதிப்பாளர் த.அரவிந்தனுக்கும் என் வாழ்த்துகள்.

No comments:
Post a Comment