எனக்கு அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதவேண்டும். ஒரு சொல் மற்றொரு சொல்லுக்கு இட்டுச் செல்ல அகத்தின் ஆற்றொழுக்கு இறுதியடைகையில் நான் பேருவகை அடையவேண்டும். அப்படித்தான் இப்போதும் பெரும்பான்மையான நாட்களில் நடக்கிறது. சில நாட்களில் மனதில் நிலவொளி தகிக்காத கணங்களில் அடித்தல் திருத்தல் வந்துவிட நான் அந்தத் தாளை அப்படியே கசக்கி எறிந்துவிட்டு புதிய தாளில் முதல் வரியை மீண்டும் எழுத ஆரம்பிப்பேன். என்னைச் சுற்றி கசக்கி எறியப்பட்ட தாள்கள் ஏகமாய் குப்பை கூளமாய் பித்திற்கும் ஞானத்திற்கும் நடுவே நடுநடுங்கிக் கிடந்த நாட்களும் உண்டு. ஆனி முத்துக்கள் நிலவொளி இன்றி பிரகாசிப்பதில்லைதானே. ஸில்வியா ப்ளாத் இப்படித்தான் தன் கவிதா வெளிப்பாடுகளுக்காய் மரணதுன்பம் அனுபவித்திருக்க வேண்டும். பாதி எழுதி கசக்கி எறியப்பட்ட தாள்களும் ரகசிய சௌந்தர்யம் கொள்கின்றன என்பதை டக்ளசின் ஓவியங்களே எனக்குச் சொல்லித் தந்தன. டக்ளஸின் ஓவியங்களில் மணல், சகதி, கசக்கப்பட்ட தாள்கள், தேநீரின் கறைபடிந்த தாள்கள், மெலிந்து நடுங்கும் தாள்கள் என பலவற்றை அவர் அவற்றின் பொருளாய தன்மைக்காக (materiality) பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். அவற்றை டக்ளஸ் ஓவியங்களில் பயன்படுத்தும்போது அவற்றின் மேல் அவர் வண்ணங்களைப் பூசும்போது அவை அபாரமான இழைநயம் (texture) பெறுகின்றன. இந்த இழைநயத்தின் கலையழகு தன் ஷூவின் இணைகயிறையும் கூட இஸ்திரி போட்டு அணியும் இங்கிலாந்தின் சார்ல்ஸுகளுக்கு எதிரானது. டக்ளஸின் ஓவியங்களைப் பார்த்தபின் எனக்கு நான் கசக்கி எறிந்த தாள்களின் மேல் எனக்கு வாஞ்சை கூடியிருக்கிறது; அவற்றின் கசங்கல் மடிப்புகளில் ஒளிந்திருக்கும் மௌனங்கள் அழியா வசீகரம் பெறுகின்றன.
கணினி எழுத்து இனிப்பும் கசப்புமான இந்துஸ்தானியின் பைரவி போன்றது. சற்று முன்புதானே அந்த அரவணைப்பு இனிமையாகவும் கதகதப்பாகவும் இருந்தது என்ற நினைப்பு மனதில் வேர் பிடிக்கும் முன்பே அடுத்த கசப்பு முன்பிருந்ததை முழுமையாக மறக்கடித்துவிடும். டிஜிட்டலில் தொலைந்த, திருத்தப்பட்ட எழுத்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாது. திருத்தப்பட்டது உதிர்ந்த இலை கிளையில் மீண்டும் ஒட்டாது. பிழையின் அழகு டிஜிட்டல் கருவிகளில் நிலைகொள்வதில்லை. ஒரு தெற்றுப்பல், ஒரு மாறு கண் நமக்குத் திரும்பக் கிடைக்காமல் போய்விடுகிறது. அதன் நிலைகொள்ளா சௌந்தர்யத்தோடு.
No comments:
Post a Comment