Wednesday, December 31, 2025

ஏதோ ஒன்று உயர்கிறது நிமிடத்தின் உச்சிக்கு

 

எல்லா நாட்களிலும் ஏதோ ஒரு வருடம் முடிவடைகிறது ஏதோ ஒரு  வருடம் முளைவிடுகிறது. விருட்சத்திலிருந்தே வித்தின் வீரியத்தை அறியும் நமக்கு காலப்பகுப்பில் எது பூமி எது முளை என அறியமுடிவதில்லை. 

சில கவிதை வரிகளே நமக்கு கையகல் விளக்கின் சுடரை நல்குகின்றன. நினைவின் விருந்தாளியாக கவிதை பிரவேசிக்கும்போதுதான் உலகம் (எனவே காலமும்) மாறுகிறது என்ற ஜோசஃப் பிராட்ஸ்கியின் கவிதைவரியின் பிரகாசம் நம்மை அபூர்வமாகவே தொற்றக்கூடியது. 


“அமரரின் புகழ் அவர்களின் அமரத்துவத்திற்காக, நீசர்களின் புகழ் அவர்தம் நீசத்தனத்திற்காக, அமரத்துவம் அளிப்பதால் அமிர்தத்தைப் போற்று, இறப்பை அளிப்பதால் விஷத்தை வாழ்த்து” என்ற துளசிதாசரின் வரிகள் நம்மை திகைக்கவைக்கக்கூடியன. 


“ஏதோ ஒன்று உயர்கிறது நிமிடத்தின் உச்சிக்கு, செம்பட்டுக்கொடி அல்லது உப்பின் கடுருசி” என்ற பாப்லோ நெரூதாவின் வரி நம்மை வருடத்திலிருந்து நிமிடம் நோக்கி இழுத்துச்செல்கிறது. 


எனக்கு இந்த வருடத்தில் 


“உன் ஆத்மா ஏன் ஒரு முறையேனும்

துயருற்றோரை நோக்கிய

தன்னிச்சையான கருணையின் சொற்களை

எச்சில் கூட்டி விழுங்குவதில்லை 

கல் வாழைகள் மட்டுமே ஏன்

துயர் மேவிய நாட்களிலும் தங்கள்

இலைகளை அலங்காரமாய் விரிக்கின்றன” என்ற வரிகள் தரிசனமாய் துலங்கின. 


“நீ இருப்பதால் நான் இருக்கிறேன் என

யாரோ முனகுகையில் 

ஒரு புதன் கிழமை

நிமிர்ந்து நேராகிறது”  என்ற வரிகள் என் உயிர் மூச்சை நீட்டித்தன. 




----

உன் செல்லப்பிராணி ஞாயிற்றுக்கிழமை

உன் செல்லப்பிராணி

ஞாயிற்றுக்கிழமை

உன் விரல் கோர்த்த சங்கிலியால்

அழைத்து சென்ற 

அதிகாலை முதல் அனுபவத்தை

எவை எவை செதுக்கினவென

கணக்கிடுகிறாய்

தொடரும் போர்ச்செய்திகள்

தொடரும் இரு தரப்பு பொய்ப்பிரச்சாரங்கள்

பட்டு பைக்கூட்டில் வைத்த நறுமணப்பொடிகள்

தன் சரங்களை மேலே இழுத்துக்கொண்டதா 

மஞ்சள் சரக்கொன்றை

இல்லை இது காற்றின் கோடை காலத் தயக்கமா

இந்தக் காலை நடையில் பழுதுபட்ட

உன் ஆத்மா ஏன் ஒரு முறையேனும்

துயருற்றோரை நோக்கிய

தன்னிச்சையான கருணையின் சொற்களை

எச்சில் கூட்டி விழுங்குவதில்லை 

கல் வாழைகள் மட்டுமே ஏன்

துயர் மேவிய நாட்களிலும் தங்கள்

இலைகளை அலங்காரமாய் விரிக்கின்றன

அகண்ட பெருவெளியின் சிறு கீறலும்

சிற்றெறும்பையும் தீண்ட வேண்டமா

எது உன் உள்ளங்கையை உனக்கு

மீட்டுத்தருமெனக் கூட்டிக் கழிக்கிறாய்

சாதனங்களற்ற வெறுங்கையுடன் 

வெற்றுப்பார்வையுடன்

----------

ஒரு புதன் கிழமை வளைந்து நெளிந்ததாய் இருந்திருக்கிறது;

----

வளைந்து நெளிந்த புதன்கிழமையொன்றில்

—-

வளைந்து நெளிந்த 

புதன்கிழமையொன்றில்

சந்தேகக்கேசில் பிடித்துச் செல்லப்படும்

பரட்டைத் தலை கந்தலாடை

மனிதனை

தன் தெருவோர தீர்க்கதரிசியெனக்

கண்டுகொண்டு 

தன் கை

பால் சாக்லேட்டை நீட்டுகிறது

குழந்தை

விலங்கிட்டதால் திராட்சைக் கொத்தாய் 

குவிந்த கரங்கள் கொண்டு 

ஆசீர்வதித்து சிரிக்கிறான் அவன் 

யாரைப் பார்த்து சொன்னதென்று

தெரியாமல் 

நீ இருப்பதால் நான் இருக்கிறேன் என

யாரோ முனகுகையில் 

ஒரு புதன் கிழமை

நிமிர்ந்து நேராகிறது

——

இரு கவிதைகளும், “ஒரு படிமம் வெல்லும், ஒரு படிமம் வெல்லும்” தொகுதியில் இருக்கின்றன.


No comments: