இரு பல்லிகள்/கோண்ட் பழங்குடி ஓவியம்/ ஓவியர்: ரமேஷ் தேக்கம் |
மு அவனுடைய தோழியோடு அந்த இரவு நடனத்திற்கு வந்திருந்தான். ஆனால் நடனமாடாமல் உணவு மேஜையிலேயே இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். மு ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான். இன்று இரவாவது ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த தோழி நேரம் செல்லச் செல்ல பொறுமை இழந்துகொண்டிருந்தாள். முவைப் பிடித்து உலுக்கி என்னதாண்டா விஷயம் சொல்லித் தொலையேன் என்றாள். மு அவளைத் தீர்க்கமாகப் பார்த்தபடியே, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, நம் நட்பு அரசியல் தூய்மையுடையதா அரசியல் தூய்மையற்றதா என்று கேட்டான்.
தோழிக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. மு, உனக்கு என்னமோ ஆகிவிட்டது, இந்த லிஃப்ட் தாத்தா உன் தலையில் திருஷ்டி பூசணியை உடைத்ததிலிருந்து நீ ஒழுங்காகவே இல்லை. உனக்கு என்ன பிரச்சினை மு, என் செல்ல மு என்றெல்லாம் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக தோழி பிலாக்கணம் வைக்க ஆரம்பித்தாள்.
மு உடனே ஒரு சின்ன பிரசிங்கியாராகி விட்டான்.
தோழீ! கேள்! ழாக் தெரிதா பால் டி மேன் இறந்தபோது ஆற்றிய நட்பு , கடமை, கடப்பாடு குறித்த பேச்சு இருக்கிறதே அது கட்டவிழ்ப்பின் வரலாற்றின் முக்கிய தருணம். அதுதான் அரசியல் தூய்மையற்றும் நட்பு கொள்ளலாம் என்று எனக்குக் கற்பித்தது.
நான் டிஸ்கோ வருவதற்கு முன் ஷாம்பூ போட்டு குளித்துவிட்டுதான் வந்தேன், மு என்றாள் தோழி பரிதாபமாக.
நான் அதைச் சொல்லவில்லை மண்டு. நான் யாரோடு வேண்டுமானாலும் நண்பனாய் இருப்பேன் என்கிறேன்.
சரி, இருந்துக்கோ. ஆனா, அதைச் சொல்வதற்கு எதற்கு ழாக் தெரிதா?
அதாவது இன்றைக்கு மனித உறவே அதிகாரம், அதிகாரமின்மை என்று மாறியிருக்கிறது.
சரி, ஓக்கே.
தமிழ் சினிமாவிலிருந்து நேற்றைக்கு எழுதப்பட்ட நவீன சிறுகதை வரை காதலுறவுகள், டாவுகள் உட்பட எல்லாமே அதிகார உறவுகளின் சிக்கல்களின் கதை சொல்லலாயிருக்கிறது. இனி வரும் கதை சொல்லல் நுண்சித்தரிப்புகளே ஆகும். பெருங்கதையாடல்களுக்கு எதிரான…
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்……
‘நான்’ என்பதே நினைவுகளின் தொகுப்பாகவும், புலன் வரலாறுகளின் தொகுதியாகவும்
மு! Give me a break! Don't you have a body?
நிகழ்த்திக்காட்டுதலை, பாவனையைக்கொண்டே வாழ்க்கை
ம்ஹ்ம், now you are talking, டான்ஸ் ஆடலாமா, போலாமா?
மு முகம் கொஞ்சம் தெளிவடைந்திருந்தது. தோழி கையைப் பிடித்துக்கொண்டு பதில் பேசாமல் மு டான்ஸ் ஃப்ளோரை நோக்கி நடந்தான்.
தூய்மையற்ற இடங்களிலும் தொடுவாயா மாட்டாயா
என்றாள் தோழி.
2 comments:
இந்தக் கதையின் நாயகன் கே. பாக்யராஜ் படங்களில் வரும் கே. பாக்யராஜ் போலவும் தோழியானவள் அவனைப் பாலியலாக நாடும் நாயகி போலவும் இருக்கிறார்கள். நாயகன் பாக்யராஜ் போலவே நாயகியின் இச்சைக்கு உடன்படாதிருக்கிறான். நுட்பமான ஆண் அரசியலை வெளிப்படுத்தும் கதை. ரசிக்கிறேன்.
I understood. :-)
Post a Comment