மகாராஷ்டிர வார்லி பழங்குடி ஓவியம்/'கூடிக் களித்தல்'/ஓவியர்: ரீனா சந்தியா உம்பர்சாடே |
அற்ப புழுவையும் தொடர்ந்து ஈர்க்குச்சியால் சித்திரவதை செய்தால் அதுவும் திரும்பி முறைக்கும்தானே அந்த நிலைமையில் இருந்தான் மு. அவனுடைய பழைய காதலி இடிதடியனாய் ஒரு புது நண்பனுடன் சென்னைக்குத் திரும்பிவர ஃபேஸ்புக், டிவிட்டர், குறுஞ்செய்திகள், கூகுள் ப்ளஸ், பஸ், என்று நண்பர்கள் வட்டாரம் கூடிக்கூடிக் கும்மி அடித்தது. மு இடிதடியனைப் பற்றி துப்புத் துலக்கினான். பழைய காதலியின் புது நண்பன் குண்டன், தொப்பையன், காது மடல்களில் கரடி மயிர் வளர்ந்தவன் என்று கொஞ்சம் கொஞ்சமாய் முவிற்கு உற்சாகமூட்டும் வகையில் துப்புத் துலங்கிக்கொண்டிருந்தது. அவன் ஒரு லேவாதேவிக்காரன் என்பது தெரியவந்தவுடன் மு புல்லரித்துப் போனான். நண்பர்கள் வட்டாரத்திற்கு ஷேம் ஷேம் பப்பு ஷேம் என்று செய்தி அனுப்பிவிட்டு பழையகாதலியையும் அவளுடைய புது நண்பனையும் தன் ஒற்றை அறை ஸ்டூடியோ அபார்ட்மெண்டிற்கு விருந்திற்கு அழைக்க முடிவு செய்தான்.
தன் அலுவலகத் தோழியை தன் விருந்திற்கு சமையல் ஒத்தாசை செய்ய வரமுடியுமா என்றதற்கு அவள் காட்டமாக மறுத்துவிட்டாள். மு தான் ஆட்டோவில் பார்த்த குட்டைப்பாவடைக்காரியைப் பற்றி அவ்வபோது சப்புகொட்டி சப்புகொட்டி பேசிக்கொண்டிருந்ததே காரணம். மு தானே தனியாக எது வந்தாலும் பார்க்கலாம் என்று களத்தில் இறங்கத் தீர்மானித்தான்.
The soap opera of the year என்று நண்பர்கள் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்ட நாளும் வந்தது. மு காலையிலேயே சலூன் போய் தலை முடி வெட்டி முள்ளம் பன்றி மயிர்போல் spiky ஆக மாற்றிக்கொண்டான். மூன்று நாள் தாடியை மழிக்கவில்லை. 44 என்று பெரிய எழுத்தில் முன் பக்கம் எழுதிய கையில்லா பனியன் போட்டு அரை டிரௌசர் போட்டுக்கொண்டான். அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு மதியம் வாக்கில் பழைய காதலிக்கு ஃபோன் செய்து அவள் நண்பனுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டான். பழைய காதலி முதலில் அலட்டு அலட்டென்று அலட்டினாள்; இரவு உணவுக்கு வர முடியாதென்றாள் மாலை தேநீருக்கு வருகிறார்களாம்; அவனுக்கு பிரெட் ஆம்லெட்டும் தக்காளி தொக்கும் போதுமாம். மு தலையில் அடித்துக் கொண்டே பிரெட் ஆம்லெட்டும் தக்காளித் தொக்கும் தூ என்று டிவிட்டர் இட்டு நண்பர் வட்டாரத்தையே கிளுகிளுக்க வைத்தான்.
பழையகாதலி மு விற்குப் பிடித்த மஞ்சள் கவுண் அணிந்திருந்தாள். இரண்டு கால்களிலும் வேறு வேறு நிறத்தில் ஒற்றை வார் செருப்பு அணிந்திருந்தது முவை வெகுவாக கவர்ந்தது. புது நண்பன் குண்டனாகவோ தொப்பையனாகவோ இல்லை. ஆஜானுபாகுவாய் மினுங்கும் கோதுமை நிறத்தில் இருந்தான். டீன் ஏஜின் அரும்பு மீசையே இன்னும் இருந்தது. கண்களில் சினேகமும் குழந்தைமையும் இருந்ததைக் கண்ட மு தானோ இவன் என்று ஒரு கணம் மயங்கி மீண்டான். நீங்கள் minimalist poet ஆமே இவள் சொன்னாள் என்று அவன் புன்னகைத்தபோது முவிற்கு கால் தளர்ந்து போனது. பழைய காதலிக்கு இவனை ஏன் பிடித்திருக்கிறது என்று முவிற்குத் தெரிந்து விட்டது.
உணவு மேஜையில் அவர்கள் அமர்ந்தபோது அவள் புதிதாய் ரிம்லெஸ் கண்ணாடியை கைப்பையிலிருந்து எடுத்து அணிவதை மு பார்த்தான். சாதாரணமாகவே கன்ணாடி அணிந்த பெண்களைப் பார்த்தால் மனம் நெகிழ்ந்துவிடும் முவின் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. முவின் மனதிலிருப்பதையே சொல்வதாக புது நண்பன் அவளைப் பார்த்து You look gorgeous in those glasses என்றான். Dalai Lama also looks gorgeous in those Ray Ben glasses என்றாள் பழையகாதலி. அன்று மாலை முழுவதும் அவர்கள் பேசியதிலேயே அந்த ஒரு வாக்கியம்தான் சுவாரசியமானது. மற்றபடி அவர்கள் உணவு உடை என்றே பேசிப் பொழுதைக் கழித்தார்கள்.
புது நண்பன் தான் தக்காளித் தொக்குவோடு கொஞ்சம் இஞ்சிச் சட்னியும் செய்வதாகச் சொல்லி முவையும் அவன் பழைய காதலியையும் தனியே விட்டு விட்டு அடுக்களைக்குப் போனான். மு உன் தோல் அதே பள பளப்புடன் இருக்கிறது என்று அவள் கையை வருடிக்கொடுத்தான்.
இஞ்சிச் சட்னி முவுக்குப் பிடித்துப் போய்விடவே ஒரு வெட்டு வெட்டினான். ஆஜானுபாகுவும் சளைத்தவனாயில்லை. அவனும் ஒரு பிடி பிடித்தான். பழைய காதலி பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவர்கள் சீக்கிரமே கிளம்பிவிட்டார்கள். All are made in the same factory என்ற நாடகத்தைப் பார்க்கப்போவதாகச் சொன்னார்கள். அவர்களைக் கை குலுக்கி அனுப்பிவிட்டு கணிணிக்கு மு திரும்பியபோது நண்பர் வட்டாரம் முழுக்க சாட்டில் உட்கார்ந்திருந்தது.
இஞ்சிச் சட்னி அதிகம் சாப்பிட்டதில் முவிற்கு வயிறு அப்செட் ஆனது.
மு Oops என்று டிவிட்டர் இட்டுவிட்டு தூங்கிப் போனான்.
No comments:
Post a Comment