"முள்ளிவாய்க்கால்" ஓவியம் அபராஜிதன் ஆதிமூலம் Acrylic on canvas 40"x75" Image courtesy Singh and Thapar Projects |
நூலகத்தை ஜாதிக்காய் பெட்டிகளில்
அடைத்து இறுக்கி ஆணியடித்து
தொழுவத்து குடிசையில் வைத்தாயிற்று
பெற்றோரை நடுக்கூடத்தில்
மார்போடு அணைத்த குழந்தை
கையடக்க மலிவுப் பதிப்பு
கந்த சஷ்டிக் கவசம்
அம்மியையும் குழவியையும்
எடுத்துச் செல்லவியலா துக்கத்தில்
ஒரு கையில் மாங்கன்று
மறு கையில் கறிவேப்பிலைச் செடி
ஏந்தி நிற்கும் துணைவி
கூடுதல் பாதுகாப்பிற்கு
வள்ளி திருமணம் நாடகம்
ரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ் பதிப்பு
கன்றுகள் பயணம் பிழைக்காவிடில்
மறு ஏற்பாடென
சிறு சாக்கு நிறைய மாங்கொட்டைகள்
சீரகம் கொத்துமல்லி
வேறு என்ன என்ற திகைப்பில்
ஒரு பிடி பச்சை விரலி மஞ்சள்
எந்த ஊரிலும்
விரிந்த வானும்
ஆழ் கடலும்
சேரும் கோடு
கரு நீலம்தான்
என்று ஒரு ஆறுதல்.
No comments:
Post a Comment