ஒரு குட்டைப் பாவாடை அழகிக்கு ஆட்டோ ஓட்டும் பெரும்பேறு இன்று மு வுக்கு கிடைத்தது. மு வின் ஆட்டோ டிரைவர் நண்பன் மு வை தன் ஆட்டோவை நுங்கம்பாக்கம் வரை ஓட்டி வர முடியுமா என்று கேட்கப் போக மழைக்காலத்தில் ஆட்டோ டிரைவர்களின் நட்பின் முக்கியத்துவம் கருதி மு சரியென்று சம்மதித்தான்.
நந்தனம் சிக்னலில் குட்டைப் பாவடை அழகி ஒருத்தி மு ஓட்டி வந்த ஆட்டோவை வழி மறித்தாள். மு ஆட்டோ வராது என்று சொல்லி சிக்னல் தாண்டுவதற்குள் அவள் உள்ளே சாடி ஏறிவிட்டாள். மு ஆட்டோ வராது என்றான் முறைப்பாக. கூப்பிட்டால் வருவதற்குத்தான் ஆட்டோ என்றாள் அவள். பின் நோக்கும் கண்ணாடியில் மு அவளைப் பார்த்தான். அவள் கண்களில் பிடிவாதமான குரோதம் இருந்தது. நான் ஆட்டோ டிரைவர் இல்லை என்றான் மு. நான் பயணியில்லை என்றாள் குட்டைப் பாவாடை.
மழை பிரளயமே வந்ததுபோல் அடித்துப் பெய்ய போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. மு கீழே இறங்கி டார்பாலின் திரைகளை இழுத்து மூடிவிட்டு டிரைவர் சீட்டில் மீண்டும் உட்கார்ந்துகொண்டான். அண்ணா சாலையில் பிரளய மழையில் மு வும் குட்டைப் பாவாடைக்காரியும் மட்டுமே உள்ள சின்னஞ்சிறு தனி உலகு எதிர்பாராமல் உருவாகிவிட்டது.
நான் திரும்பிப் போகவேண்டும் என்றான் மு எங்கோ பார்த்தபடி. மு வின் கண்களை பின் நோக்கும் கன்ணாடியில் சந்தித்த குட்டைப் பாவாடை நாமென்ன ஒன்றாகவேவா போய்க்கொண்டிருக்க முடியும்? நானும்தான் திரும்பிப் போக வேண்டும் என்றாள். சண்டை எதனையும் பாதியில் நிறுத்திவிட்டு ஆட்டோவில் ஏறிவிட்டாளோ? அம்மணி பெயர் என்ன என்றான் மு மெதுவாக. மழை வலுத்ததில் இன்னும் இருண்டுவிட்டது. பெயரைத் தெரிந்தால் என்னைத் தெரிந்ததாகி விடுமா என்றால் அவள் காட்டமாக.
அரை மணி நேரம் வார்த்தைகளற்ற சலிப்புகளோடும், கள்ளப் பார்வைகளோடும், இருந்த இருக்கை அசைவுகளோடும், மனத்தின் ஏச்சுக்களோடும், அவர்கள் கழித்தது பல வருடங்களை அவர்கள் ஒன்றாய் கழித்தது போன்ற உணர்வை அவர்களிடையே ஏற்படுத்தியிருந்தது.
மழை விடுகிற மாறியும் இல்லை, ட்ராஃபிக் கிளியர் ஆகிற மாறியும் இல்லை என்ற மு நன்றாகத் திரும்பி அவளைப் பார்த்தான். கடுஞ் சினத்தில் தாக்கத் தயாராக இருக்கும் சிறுத்தைக் குட்டி போல அவள் ஆட்டோவில் ஏறியபோது இருந்ததாய் அவனுக்கு ஞாபகம். எது தெரிந்தால் உங்களைத் தெரிந்ததாகும் என்று கேட்டான் மு. கடந்த அரை மணி நேரத்தில் அவள் முழுமையாய் இறுக்கம் தளர்ந்திருப்பதாய் தோன்றியது. கண்களில் மினுங்கும் சிறு சீண்டலுடன் இந்த ஆட்டோவை என்றாள். இப்போதாவது உங்கள் பெயரைச் சொல்லலாமே என்ற மு வேறொரு ஆளாக ஆட்டோ டிரைவராகவே முழுமையாக மாறியிருந்தான். அவள் என் பெயரை குட்டைப்பாவாடை என்று வைத்துக்கொள்ளேன் என்ற போது தன் உயிரையும் உடலையும் முன்பின் அறியா டிரைவரிடம் ஒப்படைக்கும் பயணியாயிருந்தாள்.
அவர்கள் பின் நோக்கியிருக்கும் கண்ணாடியில் தங்கள் ஆட்டோ ஆராய்ச்சியை ஆரம்பித்தார்கள். முன் இருக்கை, பின் இருக்கை, வேகமூட்டி, வேகத்தடை, மேல் கூரை, கீழ்த்தளம், இடைக்கம்பி, நடுக்கம்பி, ஒலிப்பான் என்று அவர்கள் ஆய்வு தொடர்ந்தது. வெளியில் வெள்ளம் கரை புரண்டோடியதையும், மழை மேலும் மேலும் வலுத்துப் பெய்ததையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
1 comment:
Has Mu's thozi deserted him due to his indifference? Hope he becomes steady with Kuttai Paavaadai. :)
Post a Comment